இரண்டு வகையான எழுத்தாளர்கள் உண்டு; முதல் சாரார் வாசகர்களுக்குப் பிடித்ததை எழுதுபவர்கள். அடுத்த சாரார் தனக்குப் பிடித்ததை எழுதுபவர்கள். ஜெயகாந்தன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்றோ பெரும்பாலான வாசகர்களைக் கவர்வதற்கோ எழுதாத கம்பீர எழுத்தாளர். அதனால் தான் அவருடைய எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்பட்டாலும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. இந்த நாவலும் பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்க நியாயமில்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை இவருடைய ஆகச் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.
துப்பறியும் நாயகன், விசேஷ சக்தி படைத்த கதாபாத்திரம் போன்றவர்கள் ஒரே எழுத்தாளனுடைய பல கதைகளில் வருவது உண்டு. ஆனால் இக்கதை நாயகர்களில் ஒருவரான ஆதி காந்தியவாதி – மிகவும் மதிக்கத்தக்கவர். ஜெயகாந்தனின் பிற கதைகளிலும் வந்த கதாபாத்திரம். இதுவே ஒரு வித்தியாசமான முயற்சி என்பேன்.
காதல் கதை தான் இது – ஆனால் கம்பீரமான விரசமில்லாத காதல். மதச் சண்டை பின்னணியில் எழுதப்பட்ட கதை. சரியாக கையாளா விட்டால் அதுவே பிரச்சனையாகி இருக்கும். இம்மாதிரியான கதைகளைக் கையாள்வதில் ஜெயகாந்தன் ஒரு முன்மாதிரி.
படித்து ரசித்துப் பாருங்கள் – இப்படிப்பட்ட கதைகள் தமிழில் வருவது அரிது.