1) 3rd October 2016
Shri Diwakara Tanujaha, a great Tamil poet, honored me by penning down three poems based on my talk.
Links –
Chennai Twin Temples
Chenna Malleeswarar and Chenna Kesavar
———————————————————–
நேற்று தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் திரு. கிருஷ்ணகுமார் கூறிய நகைச்சுவை நிகழ்வு – பாடலாக
அறுசீர் விருத்தம்
“‘பாண்டியர் கட்டிய கோவிலிது;
….பார்த்ததும் கூறலாம்’ என்னண்பர்;
ஆண்டவெள் ளைத்துரை நீதிமனைக்
….காயிடி வாங்கிய மல்லீசர்
மீண்டுமோர் துபாஷியின் உதவியால்
….மிளிர்ந்ததைக் கூறுகிறார் பழையதென்று
வேண்டிய மட்டினில் பொய்யறிவு
….வீதியில் கிடைப்பதைப் பா”ரென்றார்
அவர் சொன்னது:
——————————-
“‘இது பாண்டியர் காலத்துக் கோவில்’ என்றார் என் நண்பர்
‘எப்படிக் கூறுகிறீர்கள்?’
‘பார்த்ததும் சொல்லலாம். மீன் சிற்பத்தைப் பாருங்கள்’
இது ஆங்கிலேயரால் நீதிமன்ற வளாகத்துக்காக இடிக்கப்பட்டு, பின் மக்கள் கொந்தளிக்க, மணலி முத்துக்ருஷ்ண முதலியார் உதவியுடன், பிற்காலத்தில் கட்டப்பட்ட கோவில் இது.
இப்படி, ஆள் ஆளுக்குத் தங்கள் பொய்யறிவை வீசுவதை நாம் காணலாம்” என்றார்.
————————————————————
புவனேஷ்வரக் கோவில்கள்
——————————————
இன்று திரு கிருஷ்ணகுமார் அவர்கள் புவனேஷ்வர் கோவில்கள் பற்றி ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் ஆற்றிய உரை கேட்டேன். அருமையான உரை. அதன் சில அம்சங்களை வைத்து எழுதிய இரு பாடல்கள்:
1. மா மா காய் – வஞ்சி இரட்டித்த அறுசீர் விருத்தம்
..
புவன நாத புரந்தன்னில்
…..பொலியும் பழங்கோ புரங்கள்மேல்
கவன மிருத்தும் உரைகேட்டேன்;
…..கார வேலர் பவுமகாரர்
சிவனை யுகந்தும் அரிவழிக்குச்
…..சீர மைத்த கங்கவேந்தர்
கவரும் வகையில் கலிங்கநாடு
…..காத்து வளர்ந்த கதையிஃதே
2. அதே வாய்பாடு
—————————–
..
கேது வில்லா கிரகத்தார்
….காதல் செய்வர் களித்தல்கள்
பூத மேத்தும் பயக்கோவில்
…..புலமும் ஒருமா மரத்துக்கும்
நாதன் குடும்பத் தினருக்கும்
…..நண்ணு கோட்டத் திடமிருக்கும்
போதம் புவனேஷ் வரக்கோவில்
…..போவார்க் குதவும் மிகவன்றோ?
பொருள்:
——————
1. புவனேஷ்வர் நகரில் சிறந்து விளங்கும் பழமையான கோபுரங்களைப் பற்றிய, நம் கவனத்தைத் தக்க வைக்கும் உரையொன்று கேட்டேன்.
காரவேலர், பவுமகாரர், சிவ வழிபாடு மேல் வெறுப்பின்றி, அதே சமயம் விஷ்ணு வழிபாடுக்கு வழிவகைகள் அமைத்த கங்கமன்னர்கள் போன்றோர் கலிங்க நாட்டை வளர்த்த கதையை, என்னைக் கவரும் வகையில் சொன்னார் .
2. கேது இல்லாத நவக்கிரக சிற்பங்கள், சிருங்கார ரசமுள்ள காதலர்கள் இன்பவிளையாட்டுகள், செல்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பேயை வழிபடும் கோவில்,
ஏகாம்ரம் என்னும் ஒற்றை மாமரக் கதைக்கு வழிவகுத்துக் கொடுக்கும் கோவில், சிவன் குடும்பத்தாருக்கு, கோஷ்ட சிற்பங்களாக இடம் வைத்துக் கட்டப்பட்ட கோவில்கள்
என்று புவனேஷ்வரக் கோவில்களைப் பற்றிச் சொன்ன இந்த உரை, அங்கு செல்வபவருக்கு மிகவும் உபயோகமாயிருக்கும் அல்லவா?
2) 22nd March 2017
Shri Diwakara Tanujaha, a great Tamil poet, honored me by penning down a poem based on my article about Natham temple.
Links – Natham Temple
ஆதிமூல நாதன் – நத்தம்
——————————————–
லால்குடி அருகே உள்ள நத்தம் என்னும் ஊரில் உறையும் ஆதிமூல நாதனைப் பற்றிய பாடல். இக்கோவில், முதலாம் இராசராசனால் (பத்தாம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. பின்னர் முதலாம் குலோத்துங்கனால், பிரகாரம் கட்டுவிக்கப்பெற்றது.
மூலவர் ஆதிமூலனாதன். ஆயுதமேந்தாது அலைமகள் சேராது, யோகசயனத்தில் கிடந்த கோலம். வலது கரம் யானையைத் தலையைத் தடவுவதாக உள்ளது. முதலை, யானையின் காலைக் கவ்வுவதாகவும் வைக்கப் பட்டுள்ளது. இது ஓர் அரிய சிலைக்காட்சியாகும்.
எண்சீர் விருத்தம் –மா மா காய் மா இரட்டித்தது
—————————————————
கரிக்கால் கவர்ந்த கடுங்கரவைக் காய்ந்து
…கரத்தால் கரிமேல் கனிவாதி மூலன்
திருக்கால் அணையாத் தவநிலையில் நீளல்
…திருக்கோ விலைமுன் இராசராசன் வேயப்
பெருக்கா விரிபாய் பசுவயலூர் நத்தம்
…புறத்தோள் குலோத்துங் கசோழன்பின் சுற்ற
ஒருக்கால் வாரான் எனுமச்சம் தீர்க்கும்
…ஒருசான் றுமேலும் ஒருகோடி உளவே!
கடுங்கரவு – கொடிய முதலை, கரவு – முதலை; திருக்காலணையா – லக்ஷ்மி காலில் அமராது; முன் இராசராசன் – முதலாம் ராசராசன்)
கொண்டு கூட்டுதல்:
———————-
“பெருக்கா விரிபாய் பசுவயலூர் நத்தம், திருக்கோ விலைமுன் இராசராசன் வேய, புறத்தோள் குலோத்துங் கசோழன்பின் சுற்ற” என்று கொள்ளவேண்டும்.
பொருள்:
————-
பெரிய காவிரி பாயும், பசுமையான வயல்களை உடைய, நத்தம் என்னும் ஊரில், முதல் இராசராசன் கட்டி, பின்னர், குலோத்துங்க சோழனால் சுற்று அமைக்கப்பட்ட, யானையின் காலைக் கவ்விய, கொடிய முதலையை வதைத்து, அந்த யானையின் மேல் பரிவோடு, கரத்தை வைத்திருக்கும் ஆதிமூல நாதனாய், காலில், திருமகள் அணையாது, யோக நித்திரையில் காலை நீட்டிக் கிடக்கும், பெருமான், ஒருவேளை இவன் நாம் கூப்பிட்டு வராமல் போய்விடுவானோ என்ற பயத்தைத் தணிப்பவனாய் விளங்குகிறான்.
இது ஒரு சான்றுமட்டும்தான். இதைப்போல ஒரு கோடி சான்றுகள் (அவன் நிச்சயம் வருவான் என்பதற்கு) உள்ளனவே!
3) 9th February 2020
Shri Diwakara Tanujaha, a great Tamil poet, honored me by penning down a poem based on my blog post.
Link
Prasanna Venkatesa Perumal Temple, Madurai
மதுரைப் பதியின் மகிழ்வேங் கடமூர்த்தி
…மலரோடோ பொதுயுகத்தில் மன்னுநூறு தேயத்தார்
வதியப் புகுந்த வளவில் வளர்கின்றான்
…வைணவநா யக்கர்மார் வனைந்தகவின் சேர்கோவில்
மதுர இசையான் தியாகப் பெருமானின்
…மீட்டியதும் சீரடிகள் மிதித்தணிந்த பாதுகையும்
பொதியுந் தலமாம் புகழ்வேங் கடரமணன்
…புரந்ததனம்; போவோர்க்குப் போற்றுபெரு மனுபவமே!
(மலரோடோ – 1100, தமிழ் எண் வரைவுப்படி; மகிழ்வேங்கடன் – ப்ரஸன்ன வெங்கடேசன்; வேங்கடரமணன் – வாலாஜாபாத் வேங்கடரமண பாகவதர், நுறு தேயத்தார் – सौराष्ट्र சௌராஷ்டிரர்)
இவ்வெண்சீர் அரையடி இரட்டிக்காதது. இரு வேறு சந்தங்கள் ஒவ்வோர் அரையடியிலும்
மா மா மா காய்
…காய் காய் காய் காய்
4) 17th May 2020
Shri Diwakara Tanujaha, a great Tamil poet, honored me by penning down a poem on my talk on Bishnupur Temples.
விஷ்ணுபுரச் சுட்டமண் கோவில்கள்
————————————————-
விட்டுணு புரமெனும் வங்கதே சத்தலம்
…வேசர நாகரத் திராவிடம் அல்லதாய்க்
கட்டிய தளிகளால் கவினுடன் காணுமாம்
…கேட்டிரா மல்லரால் கிளைத்ததாண் டாயிரம்
சுட்டமண் சுதையுடை சுந்தரத் தளிகளைச்
…சூழ்வலச் சிற்பமும் தனித்துவ வடிவமாம்
தொட்டிமை துலங்குமித் தளிகளின் வனப்பினைத்
…துல்லிய வுரையினால் தொடுத்தவீர்! நன்றியே!
(சூழ்வலம் – பிரகாரம்; தனித்துவ வடிவமாம் – unique iconography; தொட்டிமை – அழகு)
5) 23rd August 2021
Shri Diwakara Tanujaha, a great Tamil poet, honored me by penning down a poem based on my article in my blog.
மணிமங்கலம் மாபெற்றங் காப்பன்
—————————————-
வண்டுவரா தைவர் வல்லடற்போர் வெல்ல
…வலமேந்திச் சங்கும் இடமேந்திச் சுற்றும்
வண்டுவரா பதியாய் வடிவுற்ற வாணன்
…வண்டிமிருஞ் செம்பூ வளைநீர்ப்பூ சேர
மண்டுவரா நன்செய் மணிமங்க லத்தான்
…மன்னுகிறான் என்றார் மாபெற்றங் காப்பன்
கண்டுவராக் கண்கள் கற்பிழைதான் என்னோ?
…கற்றளிக்குச் செல்லாக் காற்பிழைதான் என்னோ?
(அருஞ்சொற்பொருள்:
வண்டுவரா தைவர் – வண்டு வராது ஐவர்- பாண்டவர்; வண்டு – தடங்கல்; வண்டுவரா பதியாய் – வண் துவராபதியாய் – அக்காலத்தில் மூலவர் பெயர்; வண்டிமிருஞ் செம்பூ – வண்டு இமிருஞ் செம்பூ ; செம்பூ – செங்கமலம் – தாயார் பெயர்; வளைநீர்ப்பூ – நீரால் வளைக்கப்பட்ட பூ – பூமாதேவி; மண்டுவரா நன்செய் – மண் துவரா நன்செய் – மண் வளம் வறண்டு போகாத நன்செய் நிலமுடைய; மாபெற்றங் காப்பன் – பெருமை உடையவன் ஆயுள் பசுக்களைக் காப்பவனும் ஆன, ராஜகோபாலன் – தற்போதைய மூலவர் பெயர்; கற்பிழைதான் – கல்+பிழை – கற்ற பிழைதான் என்ன?; கற்றளி – கல்+தளி – கோவில், காற்பிழை – கால் செய்த பிழை)
பொழிப்புரை:
————————-
எந்தக் குற்றமும் வராதவாறு ஐந்து பாண்டவர்களும் வன்மை பொருந்திய வலிய போரில் வெல்வதற்காகச் சங்கை வலப்புறமும், சக்கரத்தை இடக்கையிலும் ஏந்தியவாறு, வண் துவராபதியாய் வடிவு ஏற்ற வல்லவன்,
வண்டு ஒலிக்கும் சிவப்புப் பூவும், சுற்றியிருக்கும் நெய்தற்பூவும் சேர்ந்திருக்கும் இடத்தில் (இங்கு, தல விசேஷமும் குறிப்பால் காட்டப்படுகிறது – தாயார் பெயர் செங்கமலம். மூலவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நிற்கிறார்), வறண்டு போகாத செழிப்பான நன்செய் நிலமான மணிமங்கலத்தில், நிலை பெற்றிருக்கிறான் என்று சொல்கிறார்கள்.
அந்த ராஜகோபாலனைக் கண்டு வராத கண்கள், கற்ற பிழைதான் என்னவோ? அந்தக் கல் தளிக்குச் செல்லாத கால்கள் செய்த பிழைதான் என்னவோ?
Link of my article – Manimangalam Rajagopala Swami Temple
6) 7th November 2021
Shri Diwakara Tanujaha, a great Tamil poet, honored me by penning down a poem on me. It was a great gift for my birthday.
அண்மைய வாயினும் அதிகமாய்ப் பார்ப்பினும்
…அகத்தணி வெளிப்படா அருந்தளி மேவுவாய்!
திண்மையும் சரித்திரம் திகழ்நிலை உருத்திறம்
…தெட்பமாய்க் கோத்தொரு தெரியலாய்ச் சூட்டியே
உண்மையின் உசாவுகள் ஒருங்கிணைத் (து) ஊக்குவாய்!
…உட்புகுந்(து) ஒளிநிலந் தேடுமீ காமனே!
எண்மையிற் பிறந்தவன் இளமையின் பெயரினாய்!
…இன்றுமக் கியம்பினேன் இன்பவாழ்த் துக்களே!
எண்சீர் விருத்தம்
————————————
கிட்டேயே இருந்தும், அதிகமாய்ப் பார்த்திருப்பினும் உள்ளழகு வெளிப்படா அருந்தளிகள் செல்பவனே!
திண்மையும் வரலாறும், அவை இருக்கும் நிலைமை வடிவின் திறம் இவற்றைத் தெளிவாக மாலையாகக் கோத்து உண்மையான தரவுகளோடு ஒருங்கிணைத்து ஊக்குவாய்!
(மேலோட்டமின்றி) உள்ளே புகுந்து ஒளிந்திருக்கிற நிலத்தைத் தேடும் மீகாமனே!
எட்டில் பிறந்தவன் இளமைக்காலப் பெயருடையவனே!
இன்று உமக்கு இயம்பினேன் இன்ப வாழ்த்துக்களே!
தளி – கோவில்
திண்மை – பொருள் சார்ந்த தன்மை (substantiveness; area, context, etc. about temples)
மீகாமன் – மாலுமி (refering to Indian Columbus)
எட்டில் பிறந்தவன் – அஷ்டமி திதியில் பிறந்த கிருஷ்ணன்
இளமைக்காலப் பெயருடையவனே – குமார்