துக்ளக் பொன்விழா மலர் ஒரு பொக்கிஷம். 312 பக்கங்கள் – துக்ளக் மற்றும் சோவைப் பற்றி எண்ணற்ற செய்திகள். துக்ளக் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை ஐம்பது ஆண்டுகளில் எப்படிப் பயணித்துள்ளது என்பதைப் பெருமளவில் அறிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.
இரண்டு கழுதைகளைக் கொண்ட முதல் இதழ் அட்டைப்படம், 71 தேர்தல் முடிவுக்குப் பின் தம்மையே கிண்டல் செய்து கொண்டு சோ அச்சிட்ட கார்ட்டூன், நெருக்கடி நிலையை எதிர்த்து கருப்பு நிற அட்டை, 96யில் கல்யாணப் பத்திரிகையைப் போன்ற அட்டை எனப் பல்வேறு முக்கியமான அட்டைப்படங்களின் தொகுப்பு இப்புத்தகத்தின் சிறப்பு அம்சம்.
கேள்வி: தேர்தலில் நின்று ஜெயித்த அரசியல்வாதி மக்களைப் பற்றி என்ன நினைப்பார்?பதில்: பிக்பாக்கெட் அடித்தவன், தன்னிடம் பர்ஸைப் பறிகொடுத்து விட்டு, அதையும் கூட அறியாமல் செல்லும் மனிதனைப் பார்த்து என்ன நினைப்பானோ அதைத்தான் நினைப்பார்.
மேற்கண்ட உதாரணத்தைப் போன்று 1970யிலிருந்து 2016 வரை தேதிவாரியாகச் சோவுடைய நூற்றுக்கும் அதிகமான கேள்வி பதில்கள், நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
முதல் இதழ் பற்றிய வாசகர் கருத்துகளும் எம்.ஜி.ஆரின் விமர்சனமும் சுவையாக உள்ளன.
சோ எழுதிய சில முக்கியமான தலையங்கங்கள், சில அரசியல் தலைவர்களைப் பற்றி சோவுடைய கருத்துகள் அடங்கிய கட்டுரைகள், அத்வானியின் பேட்டி, ஜெயலலிதாவின் கட்டுரை, ஜெயகாந்தனின் கட்டுரை, கருணாநிதியின் பேட்டி, மொரார்ஜியின் பேட்டி, பல சம்பவங்களைப் பற்றிய சோவின் பார்வை எனப் புத்தகம் முழுக்க பல அரிய பயனுள்ள சுவையான விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன.
ஆன்மீகவாதிகள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரையாளர்கள், துக்ளக்கில் வேலை செய்பவர்கள் எனப் பலத்தரப்பட்டவர்கள் சோவைப் புகழ்ந்து எழுதிய கட்டுரைகள் இந்நூலை அலங்கரிக்கின்றன.
குருமூர்த்தியின் கட்டுரை சுமார் ரகம். சோ ஏன் வேறு வேறு காலக்கட்டத்தில் சில கட்சிகளை ஆதரித்தார் என்பதை நியாயப்படுத்தும் விதத்திலேயே அவருடைய கட்டுரை அமைந்துள்ளது. வெங்கையா நாயுடு, ஸ்டாலின், பன்னீர் செல்வம் ஆகியோர் கட்டுரைகளில் மையப்பொருள் இல்லை. ராமதாஸ், வீரமணி போன்றோர் நன்றாக எழுதியுள்ளனர்.
கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்குத் தொடர்ந்து சோ செய்து வந்த பொருளுதவியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் ரங்கராஜன். கல்கண்டு மூலம் சோ எழுத்தாளர் ஆனதைச் சொல்கிறார் லேனா. இப்படிப் பல அரிய செய்திகளையும் நம்மால் அறிய முடிகிறது.
இந்து ராமின் நீண்ட கட்டுரை அலுப்பைத் தருகிறது. பத்மா சுப்ரமணியத்தின் கட்டுரை அருமையாக உள்ளது. சத்யா, பரக்கத் அலி ஆகியோரின் கட்டுரைகள் சோ மீது நாம் கொண்ட மரியாதையை அதிகரிக்கச் செய்கின்றன. மதலை அவசரக் கதியில் எழுதியுள்ளார் என்பது அவரது கட்டுரையின் முடிவுரையைப் படித்தால் விளங்குகிறது.
இன்னும் பல கட்டுரைகள், பேட்டிகள், செய்திகள் எனப் பொன் விழா மலர் அட்டகாசமாக விளங்குகிறது.