பாடல் பெறும் பரந்தாமன் ஆலயங்கள்

ஆலயங்களைப் பற்றி எண்ணற்ற புத்தகங்கள் தமிழில் உள்ளன. ஆனால், இப்புத்தகம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

மொத்தம் 34 கோவில்களைப் பற்றிய குறிப்பு இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு கோவிலைப் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டும்? வரலாறு, புராணம், கல்வெட்டுச் செய்திகள், கோவிலமைப்பு, சிலைகளின் சிறப்பு, பயணம் செய்யத் தேவையான இதர தகவல்கள் – இவ்வனைத்தையும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் அளவாக, ஆனால் அழகாகப் படிப்பவர் மனங்களில் நன்றாகப் பதியுமாறு, எளிய நடையில் எடுத்துரைத்துள்ளது பத்மப்ரியா பாஸ்கரனின் திறமை.

யாருமே அறியாத கோவில்களைப் பற்றிய அரிய செய்திகளைப் பலரும் அறியும் வண்ணம் ஆராய்ந்து, தொகுத்தளித்த பத்மப்ரியாவின் கடும் உழைப்பும் ஆய்வுத் திறனும் பாராட்டத் தகுந்தவை. இவர் தொகுத்தளித்த சில கோவில்கள் நமக்கு ஏற்கனவே தெரிந்த கோவில்கள் தாமே என்ற எண்ணத்தில் நாம் படித்தால், நாமறிந்ததாக நினைத்துக்கொண்டிருந்த இடங்களிலும் நாமறியாப் பல செய்திகள் கண்டு நமது அகந்தை உடனே அழிந்து போகும்.

நாகலாபுரம் நாமறிந்த ஊராக இருக்கலாம். ஆனால் அங்குள்ள பதினான்கு அரிய சிலைகளை நாம் அறிந்ததுண்டா? குருவாயூரில் மோகினிக்கு ஓர் ஆலயம் இருப்பதை யாராவது இதுவரை அறிந்திருக்க முடியுமா? திருப்பட்டூர் பிரம்மனையும், பதஞ்சலியின் சமாதியையும் நாம் அறிவோம். ஆயின், அதே ஊரிலுள்ள

வ்யாக்ரபாதர் ஜீவசமாதியும், சேரமான் உலா அரங்கேறிய இடமும் யாரும் அறியாதவை. இப்படி எத்தனைச் செய்திகள் – பரந்தாமனின் பேரருள் இல்லாமல் இவையனைத்தையும் காணும் பேறும், கண்டதை அனைவரும் அறியும் வண்ணம் அமைக்கும் பேறும் யாருக்கும் அமையாது.

ஆழ்வார்கள் பரந்தாமனைப் பாடிய காலத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? அத்தகைய ஆனந்தத்தை அளிக்கக் கூடியவை திவாகரத் தனயனின் பாசுரங்கள். மரபுக் கவிதைகளை அவற்றின் மரபு கெடாமல், இக்காலத்தில் கொடுக்கக் கூடிய மிகச் சிலரில் இவரும் ஒருவர். தமிழை விரும்புபவர்கள் 34 கோவில்களுக்கும் இப்புத்தகத்தில் இவர் இயற்றியுள்ள பாசுரங்களைப் படித்தால் ஆனந்தக் கூத்தாடுவர்.

மொத்தம் 37 பாடல்கள் – அவற்றில் ஒன்பது பாடல்களின் வாய்ப்பாடு இதுவரை இலக்கியத்தில் இடம் பெறாதது இன்னொரு சிறப்பு. ஸ்தலங்களின் பெருமையை இரண்டு பக்கங்களுக்குள் அடக்கிப் பத்மப்ரியா சாதனை செய்துள்ளார். அவற்றை நான்கிலிருந்து எட்டடிகளுக்குள் அடக்கி அடங்காப் புகழை அடைந்துள்ளார் புலவர்.

மரபுக் கவிதைகள் ஆயினும், இக்காலத்தில் அனைவரும் பொழிப்புரை இல்லாமல் படித்து உணரும் வண்ணம், எளிய சொற்களைக் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புலவர் சொல்லாடலில் மன்னர். சுந்தரவல்லியை அழகுக்கொடி என்றும், ராமனைக் கதிர்த்தோன்றல் எனவும், திருமகளை மலராள் எனவும், ஜகந்நாதனை மேதினி நாயகன் எனவும், பிரம்மனை மாமகன் என்றும், சிவனை வாமாங்க நாதன் என்றும் புலவர் அழைப்பது சில உதாரணங்கள்.

பாடல்கள் மீண்டும் மீண்டும் படிக்கும் வண்ணம் பரமசமூட்டக் கூடியவையாக உள்ளன. படிக்கும் நமக்கே பரந்தாமனின் மூர்த்தங்களை உடனே சென்று தரிசிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறதே. ஆனால் இதை இயற்றிய புலவர் பெரும்பாலான கோவில்களை இன்னும் காணவில்லை என்பது வியப்பை அளிக்கிறது.

வல்லினம் மிகுமிடங்கள் மிகா இடங்கள் தொடர்பான தவறுகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது பாராட்டத்தகுந்தது. அசுரனும் அரக்கனும் (ராக்ஷஸன்) வேறு; ஆனால், இப்புத்தகத்தில் சில இடங்களில் அரக்கர்களை அசுரர்களாக விளிப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். துவார பாலகி என்று ஒரு கட்டுரையில் வருகிறது – தவறான சொல். ராமனா, இராமனா – இரண்டில் ஏதாவது ஒரு முறையில் எழுதுவதைப் பின்பற்றாமல் மாறி மாறி எழுதுவதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு புத்தகம் – தனித்தனி கட்டுரைகள் என எடுத்துக் கொள்ள முடியாது – அப்படியிருக்க, அனைத்துக் கட்டுரைகளும் ஒரே பாணியில் இருந்திருக்க வேண்டும். ஆயின், இரண்டு மூன்று கட்டுரைகள் ஆசிரியர் தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பாணியில் மாறுபட்டு அமைந்துள்ளன.