தக்கணத்தில் பிரவகித்த துருவதாரை

“தக்கணத்தில் பிரவகித்த துருவதாரை” – எத்தனை பேர்களுக்கு இத்தலைப்பு முழுவதுமாகப் புரியும் என்ற மலைப்புடன், இந்நூலாசிரியர் திவாகரன் தனயன் எழுதிய முன்னுரையை – இல்லையில்லை – உபோற்காதம் பகுதியைப் படித்து முடித்தால் நாம் மிரள்கிறோம். ஆசிரியர் தமிழில் விளையாடுகிறார். “திலமளவும் துயக்கில்லை”, “மறலுவது திண்ணம்”, “வள்ளல் அந்தக் கஞ்சர்”, “ஈயத் துண்டுகளை ரசவாதம் செய்து, பொன்னாக்கி அவற்றால் தெரியல் செய்து” – இவை உபோற்காதத்தில் காணப்பெறும் சில உதாரணங்கள். (உதாரணம் என்ற சொல்லை மட்டும் இவர் ஏனோ “எடுத்துக்காட்டு” என்கிறார். அது முரண்.) முன்னுரையை முடிக்கும் முன் இது அனைவரும் படிக்கக்கூடிய புத்தகம் இல்லை என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. அதை ஆசிரியரே தெளிவாகத் தெரிவித்தும் விடுகிறார்.

இப்புத்தகத்துக்கு அரங்கரத்தின கோபுவின் அணிந்துரை, புத்தகம் வெளிவரும் முன்பே ஆசிரியருக்குக் கிடைத்த விருது. இவரைவிட துல்லியமாக இப்புத்தகத்தை யாராலும் படித்து, புரிந்து, ரசித்துப் பின் அணிந்துரை எழுத இயலாது. பல்துறைகளிலும் ஆழ்ந்த அறிவும், அவற்றை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலும் அமைந்த அபூர்வமான, ஆயினும் அமைதியான, அரங்கரத்தின அருமைந்தனே திவாகரன் தனயன் எழுத்துக்குத் தகுந்த அணி சேர்க்க முடியும். அணிந்துரை படித்தவுடன் அந்த இருவரின் அறிவாற்றலும் நம் கண்முன்னே விசுவரூபம் எடுத்து நம்மை கர்வபங்கம் செய்கிறது.

புதினம் தகனத்தில் ஆரம்பிக்கிறது. “கோவிந்தராஜா தகனம்” என்பது முதல் அத்தியாயம். பிற்காலத்தில் வரலாற்றில் பெரிய ஆளுமையாகும் ராஷ்ட்ரிய கூட பேரரசன் அமோகவர்ஷன் தன்னுடைய பன்னிரண்டு வயதில் அவனுடைய ஆதரவாளனும், சிற்றப்பன் மகனும், பெரும் வீரனுமான இவனைவிட பத்து வருடங்கள் மூத்த கற்கனுடன் உரையாடுவதே இந்த அத்தியாயம். கவிதைகள் உரைநடையாகிவிட்ட இக்காலத்தில் உரைநடையை மரபுக் கவிதையாய் எழுதியுள்ளார் ஆசிரியர். சொற்சுவையும் பொருட்சுவையும் அருமை. கற்கண்-அமோகவர்ஷன் உரையாடல் மூலம் அவர்களுடைய மூதாதையர்களையும், அக்காலத்தில் இருந்த சிற்றரசர்களையும், அக்காலத்திய அரசியல் சிக்கல்களையும் அறிமுகம் செய்யும் யுக்தி சரியாகக் கைகூடவில்லை என்பேன். இது இயல்பாக அமையவில்லை. வரலாற்றுப் பின்புலம் இல்லாதவர்களுக்கு இந்த அத்தியாயம் சலிப்பைத் தர வாய்ப்புள்ளது. புத்தகத்தின் பிற்பகுதியில் கடினமான வார்த்தைகளுக்குப் பொருளும், அரசர்களின் பரம்பரையையும், இடங்களின் இன்றைய பெயர்களையும் வரிசைப்படுத்தித் தந்துள்ள ஆசிரியர், கதாபாத்திரங்களின் சிறு குறிப்பையும் இணைத்திருக்க வேண்டும்.

இரண்டாம் அத்தியாயத்தில் இருந்து கதையில் விறுவிறுப்பு கூடுகிறது.

பொதுவாக வரலாற்றுப் புதினங்களில் கற்பனை, காதல், காமம், சதி, இவையெல்லாவற்றையும் விட போர்- போர்-போர் இருக்கும். ஆனால் வரலாறு என்பது மன்னர்களையும் அவர்களுடைய போர்களையும், அவர்கள் கண்ட வெற்றிகளையும் பற்றியது மட்டுமன்று. அவர்கள் காலத்தில் நடந்த சமூக, கலா, விஞ்ஞான, தொழில்நுட்ப மாற்றங்களைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இக்கதையில் கணிதத்தை ஜாதக ஜோஷியங்களில் இருந்து முதன் முதலாகப் பிரித்து அதற்குத் தனியிடம் கொடுத்த முன்னோடி மஹாவீராச்சார்யாவையும் அவருடைய கணித கோட்பாடுகளையும் விரிவாகவே விவரிக்கிறார் நவீன ஆசிரியர். ஆயினும் தமிழிலே மட்டும் விளக்கப்பட்டுள்ள கணிதக் கோட்பாடுகளை எண்கள் மூலமாகவும் சில எளிய உதாரணங்கள் மூலமாகவும் விளக்கியிருந்தால் கணிதத்தில் ஆர்வமோ ஆற்றலோ இல்லாத வாசகர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

வேத சுலோகங்கள், தமிழ்ச் செய்யுள்கள், கணிதக் கோட்பாடுகள், ஆச்சரியமாக சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவதைப் பற்றிய குறிப்புகள் – இந்த நூல் ஆசிரியரின் அறிவின் வீச்சை வியப்பதா, அவருடைய தேடுதல் உழைப்பைப் பாராட்டுவதா? தமிழில் வெளிவந்த நவீனங்கள் எதிலும் இல்லாத நவீனங்கள் – புதுமை – புது முயற்சி.

பிரதாபர் விநயன் என்ற இரு கதாபாத்திரங்களின் வெவ்வேறு நாட்களில் நடக்கும் உரையாடல்கள் மூலம் சரித்திரத்தைக் கதை போல சொல்லும் போக்கு சுவாரசியமாக உள்ளது. அவர்களுடைய உரையாடல் செயற்கையாக ஓரிடத்தில் அமர்ந்து தினம் கதை கேட்பதைப் போல அமையாமல் கதையின் போக்கின் ஊடே அங்கங்கே பொருத்தமான இடங்களில் உரையாடல்கள் நிகழ்கின்றன.

கதாசிரியர் பல நூறு ஆண்டுகள் தாமே பின்னோக்கிப் பயணித்து, அக்காலங்களில் இருந்த நடை-உடை-பாவனைகள்,வார்த்தைப் பிரயோகங்கள், யதார்த்தங்கள், மனிதர்களின் பெயர்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவற்றின் தாத்பர்யங்கள், விஞ்ஞான விளக்கங்கள், தர்க்கங்கள் என்று ஒவ்வொன்றையும் கற்றுணர்ந்து, ரசித்துச் சுவைத்து, அதன் சுகத்தை வாசகர்களுக்கும் கொடுத்துள்ளார்.

நவகண்டத்தைப் பற்றிய குறிப்பு மனத்தைப் பதற வைக்கிறது. அக்காட்சியை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறது. அதே சமயத்தில் துர்கையையும் காளியையும் ஒன்றாக இணைத்து ஆசிரியர் குழப்புகிறார்.

பல்லவ காஞ்சியில் சாளுக்கியர்களின் கல்வெட்டுக்கு என்ன காரணமிருக்கும்? சாளுக்கிய மன்னனின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்க முடியும்? ஏன் இங்கே கன்னடத்தில் கல்வெட்டு? ஆசிரியர் தம்முடைய கருத்தைக் கதாபாத்திரங்களின் ஊடே கூறி, நம்மையும் இதுவரை யோசிக்காத கோணத்தில் யோசிக்க வைக்கிறார்.

நந்திவர்மனைப் பற்றி தந்திதுர்கன் தன்னுடைய தாயிடமும் சிற்றப்பனிடமும் நடத்தும் உரையாடல் எல்லாரும் அறிய வேண்டிய வாழ்க்கைப் பாடம் – மேலாண்மைப் பாடம். அச்சம் ஏன் ஏற்படுகிறது? அச்சத்தில் என்னென்ன வகைகள்? அவற்றை எப்படி எதிர்கொள்வது? நந்திவர்மன் எப்படிச் சிந்தித்திருப்பான் என்ற தனது கற்பனைத் தேரில் இத்தகைய உயரிய கருத்துகளைச் சுவைபட சொல்கிறார் ஆசிரியர்.

கதையின் ஊடே அங்கங்கே கணிதக் கோட்பாடுகள், அவற்றைப் புகழ்ந்து ஆசிரியர் இயற்றிய அருமையான கவிதைகள் எனச் சுவை மிகுந்த பகுதிகள் ஏராளம். கணித வழிமுறையைப் பயன்படுத்தி நீதிபதியின் கட்டளையைப் பின்பற்றும் வழிமுறை புதுமையாகவும் சுவாரசியமாகவும் உள்ளது. அதே சமயத்தில் கணிதத்தில் ஆர்வமோ குறைந்தபட்ச அறிவோ இல்லாதவர்கள் இப்பகுதிகளைக் கடந்து செல்வது இயலாத செயல்.

பழந்தமிழ் மற்றும் தூய தமிழில் உள்ள புதினத்தில் “காலி” என்பன போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திருக்க வேண்டும்.

இசைப் பிரியர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆசிரியர் பயன்படுத்தும் இசைச் சொற்களும், இசைக் கருவிகளின் பெயர்களும் தேன் கலந்த தெள்ளமுதாக இனிக்கும்.

யாப்பைப் பற்றியும் சந்தஸைப் பற்றியும் இப்புத்தகத்தில் உள்ள கருத்துகளும் செய்திகளும், அரியவை; ஆர்வமுள்ள வாசகர்களை புதுக் கண்ணோட்டத்தில் யோசிக்க வைக்கவல்லவை.

புதினத்தில் ஆங்காங்கே தோன்றும் அருமையான பொருத்தமான வடமொழிச் செய்யுள் மற்றும் ஆசிரியரே இயற்றியுள்ள மரபுக் கவிதைகளின் பொருளையும் விளக்கத்தையும் தந்திருந்தால், சராசரி வாசகர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

புதினம் புனைய கல்வெட்டு தேவைப்படலாம். ஆனால் அத்தகைய கல்வெட்டுகளை அங்கங்கே புதினத்தில் தூவியுள்ளது புதுமை – இனிமை.

ஒரே பாடலில் ஐம்பது ஓசைகள் – அதே வரிகள் – சொற்கள் மாறாமல் ஐம்பது வகையாகப் பிரித்தல் – அற்புதங்கள் அனைத்தையும் தாண்டிய அற்புதம்.

மொத்தத்தில், பொறுமையாகப் படிக்க வேண்டிய கட்டாய பாடம் இப்புத்தகம்.