தமிழில் உள்ள பெரும்பாலான சரித்திர நாவலாசிரியர்களிடம் ஏதாவது ஒரு வகையில் கல்கி மற்றும் அவருடைய ‘பொன்னியின் செல்வனின்’ பாதிப்பு இருக்கும். அந்த மகா உன்னதமான நாவலில் வேண்டுமென்றே பல ரகசியங்களை வெளிப்படுத்தாமல் முடித்திருப்பார் கல்கி. இதன் காரணமாக சில ஆசிரியர்கள் அந்த நாவலின் தொடர்ச்சியை தனி நாவலாக எழுதியுள்ளனர். இந்த நாவலும் அந்த வகையைச் சேர்ந்தது. பொன்னியின் செல்வனின் தொடர்ச்சிதான் ‘நந்திபுரத்து நாயகி’.
இந்த ஆசிரியர் கவிஞரும் கூட. அதனால் கதையின் பல பகுதிகள் கவிதை நடையில் உள்ளன. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் கவிதை நடையும் அனாவசிய உவமை நடையும் கதையின் வேகத்தைத் தடைப்படுத்துகின்றன. இந்த கதையை இன்னும் சுருங்கச் சொல்லியிருக்கலாம் என்பது எனது கருத்து. பல பக்கங்களை ஆசிரியர் வீணடித்து விட்டார்.
இவ்வளவு நீண்ட கதை எழுத பல மாதங்களோ சில வருடங்களோ கண்டிப்பாக ஆகியிருக்கும். அதனால் தானோ என்னவோ கதையின் நடையில் போக்கு சீராக அமையவில்லை. சுமாராக தொடங்கும் நாவல் விறுவிறுப்பாக மாறி மீண்டும் சுமாராகப் பயணித்து சப்பென முடிகிறது. அதுவும் முதல் 70-80 பக்கங்களில் கதையை கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் மூலம் தெரியப்படுத்துவது கதையின் பலவீனம்.
கதையில் பல பாத்திரங்கள். வாசகர்கள் குழம்பினால் தவறில்லை; ஆனால் கதாசிரியரே பாத்திரங்களின் உறவு முறைகளில் குழம்பிவிடுகிரார். மதுராந்தக சோழனுடைய மகனான் மதுரன் அக்காள் முறையான குந்தவையை அத்தை என்று விளிக்கிறான். தன்னுடைய சிற்றன்னையின் தங்கையை காதலிக்கிறான். ஆசிரியர் ஏன் இப்படி கோட்டைவிடுகிறார்?
நமது நாட்டுக்கு யாரால் இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது? எப்போது? இந்த கதைப்படி சோழர்கள் காலத்திலேயே ‘வட இந்தியா’ என்று குறிப்பிட்டார்களாம். சரியான பிதற்றல். பொன்னியின் செல்வன் படிக்காதவர்களுக்கு ஒரு முன்னுரையாவது வரைந்து விட்டு இக்கதையை ஆசிரியர் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த நாவலைப் படிக்காமால் இதைப் படித்தால் சில கதா பாத்திரங்கள் மற்றும் வசனங்கள் புரிய வாய்ப்பில்லை.
யார் நந்திபுரத்து நாயகி? இக்கதைப்படி குந்தவை. அவளா கதாநாயகி? இல்லை – இன்பவல்லி என்ற கற்பனைப் பாத்திரம். பின் ஏன் இந்தத் தலைப்பு? ஆசிரியருக்கே வெளிச்சம். போதாத குறைக்கு தலைப்புக்கு நியாயம் சேர்க்கவோ என்னவோ, பழையாறையை நந்திபுரம் என்ற பெயரில் பலர் தேவையின்றி குறிப்பிடுகின்றனர். அனாவசியமாக சில சம்பவங்கள் அந்த நகரில் நடக்குமாறு ஆசிரியர் பார்த்துக் கொள்கிறார்.
பல சம்பவங்கள் நம்ப முடியாதவை. அநிருத்த பிரம்மராயரின் மாறுவேடத்தை பெரிய மர்மம் போல கடைசி வரை கொண்டு செல்வதும் அதை வாசகர்கள் யாரும் பிரம்மராயர் என்று ஊகித்திருக்கமாட்டார்கள் என்று ஆசிரியர் நம்புவது பெரிய நகைச்சுவை.
மேலும், ஆசிரியர் தாம் எடுத்துக் கொண்ட சில விஷயங்களை அப்படியே அம்போ என்று விட்டு விடுகிறார். யாரந்த கலைப்பித்து பிடித்து அலையும் கிழவர்? வாசகர்கள் சுலபமாக ஊகித்திருப்பர். ஆனால் ஆசிரியர் கடமை தான் உருவாக்கிய மர்மத்தை கடைசியிலாவது உடைப்பது இல்லையா? நந்தினி கதாபாத்திரமும் அவளுடைய வளர்ப்பு மகன் பாண்டியன், அவனுடைய காதலி சேர மன்னன் மகள் போன்ற பல கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு காரணமின்றி காணாமல் போய் விடுகின்றன.
மொத்தத்தில் நல்ல தமிழ் தெரிந்த ஆனால் கதையை சரியாகக் கையாளத் தெரியாத ஆசிரியரால் படைக்கப்பட்ட கதை இது.