கதை எழுதுவது சுலபமான காரியமில்லை. நூறு பக்கங்கள் கொண்ட கதையை ஒரு மணி நேரத்தில் ஒரு வாசகன் படித்து விடக் கூடும். ஆனால் அந்த நூறு பக்கங்களைச் சுவைப்பட தருவதற்கு எழுத்தாளன் நிறைய உழைக்க வேண்டி இருக்கும்.
ஆயிரம் பக்கங்களுக்கு மேலான நீண்ட கதை எழுதுவது இன்னும் கடினம். இவ்வளவு பெரிய கதையை எழுத பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் எழுத்தாளன் தனது வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களின் பாதிப்பு கதையின் இயல்பைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது அவனுக்குப் பெரிய சவால். அத்தனை பக்கக் கதையில் தொய்வில்லாமல் பார்த்துக் கொள்வதும் சவாலே.
சரித்திர நாவல் எழுதுவது இன்னும் பெரிய சவாலான காரியம். வரலாற்றுப் பாத்திரங்களின் இயல்பையோ வரலாற்றையோ பெரிதாக மாற்ற முடியாது. அனைவருக்கும் தெரிந்த வரலாற்றில் கற்பனைக் கதாபாத்திரங்கள் மூலம் சுவையாகக் கதையை நகர்த்த தெரிந்திருக்க வேண்டும்.
மேலே கூறிய அனைத்து விஷயங்களை விடவும் கடுமையான காரியம் கலை மகள் அவதாரம் எடுத்து வந்ததைப் போல தெய்வீக காவியத்தைப் படைக்கக் கூடிய எழுத்தாளரின் கதையின் அடுத்த பாகத்தை எழுதுவது.
இப்புத்தகத்தின் ஆசிரியர் மேற்கண்ட அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர் கொண்டு அருமையான வரலாற்று நாவலைப் படைத்துள்ளார். தமிழில் இதுவரை வெளியான சிறந்த பத்து சரித்திர நாவல்களில் கண்டிப்பாக இது ஒன்று. இது பெரிதாக வெகுஜன வாசகர்களைச் சென்று அடையாதது துரதிர்ஷ்டம்.
‘பொன்னியின் செல்வன்’ நாவலால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படாதவர் தமிழ் தெரிந்தவராக இருக்க முடியாது. இந்த நூலாசிரியரும் அந்த நாவலால் கவரப்பட்டு அதன் தொடராக இந்த நாவலை எழுதியுள்ளார். பல எழுத்தாளர்களும் ‘பொன்னியின் செல்வனின்’ அடுத்த பாகத்தை எழுதியுள்ளனர். இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால் பொன்னியின் செல்வனின் கதைக்கு உகந்தவாறு கதை அமைந்துள்ளது. தொடர்ச்சி என்ற பெயரில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு மாறுபாடான கதையை சில எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். இக்கதாசிரியர் அந்த தவறைச் செய்யவில்லை.
‘பொன்னியின் செல்வன்’ வெற்றிக்கு முக்கியமான காரணம் அதில் நகைச்சுவை, வீரம், காதல், பக்தி, வரலாறு, கற்பனை, புவியியல் எல்லாமே சரியான அளவில் கலந்து சுவையான கதையாக உருவாகியிருக்கும். ‘காவிரியின் மைந்தன்’ கதையும் இந்த அம்சங்களை எல்லாம் தன்னுள் கொண்டுள்ளது.
தெரிந்த வரலாறு; அருள் மொழி வர்மர் என்ற ராஜா ராஜ சோழன் உயிரோடு இருந்து இந்த தென்னாட்டை ஒரு குடையின் கீழ் ஆளப் போகிறான் என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரியும். ஆயினும், கடற் கொள்ளையர்களை வல்லவராயன் மற்றும் பத்து வணிகர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி எதிர்க்க போகிறார்? அவருக்கு ஏதாவது நேர்ந்து விடுமா என்று நமக்கு ஏற்படும் பரபரப்பு ஆசிரியரின் வெற்றி.
மாறன் லோகா காதல் நயமாக வும், நாகரீகமாகவும், சுவையாகவும் அமைந்துள்ளது. அவர்களிடையே காதல் முளைக்கும் விதமும், அவர்களிடையே அமையும் சம்பாஷனைகளும் காவியச் சுவை உடையவை. லோகா எதிர் காலத்தில் அருள் மொழி வர்மரை மணப்பாள் என்ற வரலாறு நமக்குத் தெரிந்தாலும் மாறன்-லோகா காதல் வெற்றியடைய வேண்டும் என நமக்குத் தோன்றுவது கதாசிரியரின் மாபெரும் வெற்றி.
ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பாகப் போகும் கதை – ஆனால் ஓரிடத்திலும் பரபரப்பு திணிக்கப்படவில்லை.
எவ்வளவு நாள், எத்தனை நேரம் போன்ற தவறான சொற்றொடர்கள், சில அச்சுப் பிழைகள், பார்த்திபேந்திர பல்லவனைச் சுத்தமாக மறந்து விடுவது, ” காவிரி மைந்தன்'” என்ற பெரிதும் கவராத தலைப்பு, சில
சம்பாஷனைகளில் ஒருமை-பன்மை குழப்பங்கள், சோழர் காலத்தில் வாழும் கதாபாத்திரம் ‘இந்து மதம்’ எனக் குறிப்பிடுவது போன்ற சில குறைகளும் உண்டு.