மதராஸ் மாந்தர்கள் – 9 – மோதி மிதித்துவிடு

இருட்டு. நல்லவேளை; யாரும் என்னை இதுவரையிலும் கவனிக்கவில்லை. கிட்டத்தட்ட இருபதடி வரை ஏணியில் ஏறிட்டேன். இன்னும் போகவேண்டிய உயரத்தை நினைத்தால் மலைப்பாக உள்ளது.

எனக்குக் கோபம் அதிகம். தப்பு செய்பவர்களைப் பார்த்தால் உதைக்க தோன்றும். பாதகஞ் செய்பவரைக் கண்டால், மோதி மிதிக்கத் தோன்றும்; முகத்தில் உமிழ்ந்துவிட தோன்றும். அந்நியர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதை நினைத்தாலே என் ரத்தம் கொதிக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் – எல்லாமே எனக்கு என் தேசம்தான். என் தேசத்துக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் உயிர் துறப்பேன். மீண்டும் மீண்டும் பாரதத்தில் மட்டுமே பிறப்பேன்.

இப்போது ஐம்பதடி வரை ஏறியிருப்பேன். கீழே பாராக்காரன் பார்த்தால் கண்டிப்பாக என்னைச் சுட்டுவிடுவான். உயிர் போவதைப் பற்றி துளியும் எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் செய்ய நினைத்த காரியத்தை முடிக்குவரை எனது உயிர் எனக்கு முக்கியம்.

எனக்கு அப்போது 11 வயது தானிருக்கும். ஜலியான்வாலா பாக்கில் நூற்றுக்கணக்கான தேச பக்தர்களை டயர் என்ற பாதகன் படுகொலை செய்தான். அன்று கொதிக்க ஆரம்பித்த என் குருதி இன்னும் குளிரவில்லை. அன்றிலிருந்து எத்தனையோ போராட்டங்கள். அதற்காக என் படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. நான் சிறிதும் தயங்கவில்லை. துப்பாக்கி பயிற்சி எடுத்தேன். வெள்ளையன் வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றேன். கவர்னரைக் கொல்ல முயன்றேன். இன்னும் என்னென்னவோ செய்தேன். என் ஆத்திரம் அடங்கவில்லை. என்ன செய்வேன்? நண்பர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் எனது தேச பக்தியை எப்போதும் மெச்சுவார். ஆனால் என்னுடைய வழிமுறையை ஏற்க மாட்டார். இந்த முறை அவர் சொல்படி கேட்கலாம் என்று முடிவு செய்தேன். காந்தீய வழியில் தேசத்துக்காகப் போராடினால் ஒருவேளை எனக்கு நிம்மதி கிடைக்குமா?

இப்போது நூறடி வரை ஏறி விட்டேன். கீழே பார்த்தால் தலை சுற்றுகிறது. விழுந்தால் எலும்பு கூட தப்பாது. இனி கீழே பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மதராஸ் வந்தேன். தமையனார் வீட்டில் தங்குகிறேன். இனி அமைதி வழியில் போராடிப் பார்க்கலாம். என்னால் எவ்வளவு முடிகிறது என்று பார்ப்போம். ஆனால் இந்தக் கோபம்….தவறு செய்பவர்களைக் கண்டால் வரும் கோபம் – அதை எப்படி கட்டுப் படுத்துவது? ஓவியம் வரைய ஆரம்பித்தேன்; சிற்பங்கள் வடிக்க ஆரம்பித்தேன். அதற்கெல்லாம் பொறுமை வேண்டும். அந்தப் பொறுமையுடன் கூடிய என்னுடைய ஆக்கப் பூர்வமான வேலைகள் என் கோபத்தைச் சிறிதளவு கட்டுப்படுத்த உதவின.

யார் கண்ணிலும் படாமல் 140 அடி உயர ஏணியில் ஏறினேன். நினைத்தால் மலைப்பாக உள்ளது. எப்படி இவ்வளவு தூரத்தை ஒரு மணி நேரத்தில் அடைந்தேன். அவ்வப்போது படும் கலங்கரை விளக்க வெளிச்சத்தில் இருந்து தப்பிப்பது பெரும்பாடாக உள்ளது. இந்தத் தொல்லை இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் விரைவாக ஏறியிருக்கலாமோ?

ஜார்ஜ் டவுன், திருவல்லிக்கேணி வீதிகளில் சுதேசித் துணிகளை விற்றேன். அந்நிய துணிகளைத் தவிர்க்கும்படி மக்களை வேண்டினேன். சிலர் என் மீது எச்சில் துப்பினர்; சிலர் என்னை சிகரெட்டால் சுட்டனர். ஒரு முறை என் தலையில் கள்ளுப் பானையைப் போட்டு உடைத்தனர். எனக்குக் கோபம் வரவில்லை; எவ்வளவு மாறி விட்டேன். மதராஸ் உண்மையாகவே என்னை அடியோடு மாற்றி விட்டது.

மிச்சமிருந்த 60 அடி உயரம். அதை அடைய ஏணிப்படி இல்லை. என்ன செய்ய போகிறேன்? என்ன ஆனாலும் சரி, நான் நினைத்ததைச் செய்யாமல் விடமாட்டேன். குரங்கைப் போல கம்பத்தில் தாவி ஏறினேன்.

சிற்பம், சித்திரம், காந்தீய வழியில் அறப் போராட்டம்…இல்லை…..எனது வேகத்துக்கு இவையெல்லாம் போதவில்லை. இன்னும் ஏதாவது செய்ய வேண்டும். அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவர வேண்டும். திட்டமிட்டேன்…ஆபத்தான திட்டம். என் உயிர் பிரியலாம். நான் கைதாகலாம். என்னைச் சித்திரவதை செய்யலாம். நான் எதற்கும் தயார்.

காக்கி நிற சட்டையும் கால் சட்டையும் அணிந்து கொண்டேன். மவுண்ட் ரோடில் உள்ள எல்பின்ஸ்டோன் தியேட்டரில் இரவுக்காட்சி படம் பார்த்தேன். படம் பார்த்து திரும்பிய போலீஸ்காரர்களுடன் கலந்து கொண்டு கோட்டைக்குள் புகுந்தேன். நானே வரைந்த மூவர்ணக் கொடி எனது இடுப்பில் மறைந்திருந்தது.

இரவெல்லாம் பாடுபட்டு துணிகரமாக இருநூறு அடி உயரத்தை அடைந்து விட்டேன். இரவு இரண்டு மணி இருக்கும். இந்தப் பாரதத் தேசத்தின் மிகவும் உயரமான கம்பத்தில் கொடி ஏற்றினேன். மூவர்ணக் கொடி ஏற்றினேன். எனது பாரதத் தாயின் கொடியை ஏற்றினேன்.

பொழுது விடிந்தது. மக்கள் சாரி சாரியாக கோட்டைக்கு வெளியிலிருந்து நமது தேசியக் கொடியைப் பார்த்தனர். பரவசம் அடைந்தனர். எங்கும் “வந்தே மாதரம்” கோஷம். எனது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் கடல் போல் பெருகியது. இனி என் உயிர் போனாலும் கவலையில்லை. அந்நிய கொடியை தூக்கி எறிந்து, எனது அன்னையின் கொடியை ஏற்றி விட்டேன். வந்தே மாதரம். வந்தே மாதரம்!

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் -எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள்
நால்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

வந்தே மாதரம்!