மதராஸ் மாந்தர்கள் – 10 – மேதையின் மனைவி

நான் பிறந்த ஊர் ராஜேந்திரம். எங்கே இருக்கிறது எனக் கேட்கிறீர்களா? மருதூருக்குப் பக்கத்தில்! ஓ, மருதூர் எங்கே உள்ளது என்று தெரியாதா? சரி, விடுங்கள்!

என்னுடைய புக்ககம் கும்பகோணம். எட்டு வருடம் பம்பாயில் வாசம்.

யாராவது உன்னுடைய ஊர் எது என்று என்னிடம் கேட்டால், நான் இந்த ஊர்களின் பெயர்களைக் கூற மாட்டேன். மதராஸ்தான் என்னுடைய ஊர். நான் மதராஸை சேர்ந்தவள். அறுபத்தைந்து வருடங்கள் மதராஸில் வாழ்ந்துள்ளேன். நான் எப்படி ஏனைய ஊர்களை சொந்தம் கொண்டாட முடியும். மற்ற ஊர்களில் பிறந்தேன், வளர்ந்தேன், சென்றேன் – ஆனால் மதராஸில் தான் என் வாழ்வில் சில நாட்களை மகிழ்வுடன் கழித்தேன். ஆம்! இந்த மூதாட்டி மகிழ்வுடன் கழித்த தருணங்கள் சில வருடங்களோ, மாதங்களோ இல்லை, சில நாட்களே.

சில வருடங்கள் நான் வாழ்ந்த மற்றைய ஊர்களைக் காட்டிலும் அறுபத்தைந்து வருடங்கள் நான் வாழ்ந்த மதராஸை நான் விரும்புவதில் யாருக்கும் வியப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தத் தொண்ணூற்று ஐந்து வருடங்களில் நான் விரும்பும் காலம் வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே. என்னால் மறக்க முடியாத தருணங்கள். நான் மீண்டும் மீண்டும் நினைவு கொள்ளும் நாட்கள். என்னைத் தினம் தினம் சிரிக்கவும் அழவும் செய்யும் விசித்திரமான நினைவுகள். என் ஆசைக் கணவருடன் நான் வாழ்ந்த அந்த மூன்று வருடங்கள். நான் விரும்பும், எனக்கு இருக்கும் ஒரே சொத்து இந்த இரண்டு பாத்திரங்கள் மட்டுமே.

நான் பார்த்த முதல் திருமணமே என்னுடையதாகத் தான் இருக்கும். சரியாக நினைவில்லை. எனக்கு அப்போது பத்து வயது. திருமணம் என்றால் என்னவென்றே சரியாகத் தெரியாத பச்சிளம் பருவம். ஐந்து நாட்கள் கோலாகலமாக கல்யாணம். அப்போதுதான் முதன் முதலில் அவரைப் பார்த்தேன். அன்று நான் பார்த்த முகம் எனக்கு இன்று வரை மறக்கவில்லை.

பதின்மூன்று வயதில் புக்ககம் நுழைந்தேன். அவருக்கு மதராஸில் உத்தியோகம் கிடைத்திருந்தது. அதனால் நான் வாழ நுழைந்த புக்ககமும் மதராஸில்தான். சொர்க்கம் என்றால் என்ன? என்னைப் பொறுத்தவரை அவருடன் நான் வாழ ஆரம்பித்த மதராஸ்…அதிலும் குறிப்பாக சைவ முத்தையா முதலி தெரு. அதுதான் நான் அவருடன் வாழ்ந்த முதல் தெரு.

ஆனால் என் மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. ஒரு வருடத்தில் அவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர் தனியாகத் திருவல்லிக்கேணியில் தங்க ஆரம்பித்தார். பிறகு தோப்பு வெங்கடாச்சல முதலி தெருவுக்கு மாறிய பிறகு என்னையும் அவர் அம்மாவையும் தம்முடன் அழைத்துக் கொண்டார். இப்படியாக முத்தையால்பேட்டையிலிருந்து ஒரு வருடத்துக்குப் பிறகு என்னுடைய சொர்க்கம் திருவல்லிக்கேணிக்கு மாறியது.

சொர்க்கத்தின் ஆயுள் எப்போதும் ஒரு வருடம் தானோ? அடுத்த வருடம் இவர் மேல் படிப்புக்காக இங்கிலாந்து போய் விட்டார். என்னுடைய சொர்க்கமும் அந்த வெள்ளைக்கார தேசத்துக்கு மாறும் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னைத் தம்முடன் அழைத்துப் போகவில்லை. அவர் கணக்கில் புலி என்கிறார்கள். சிலர் இவரைக் கணித மேதை எனச் சொல்வதைக் கேட்டு எனக்கு உள்ளூர மகிழ்ச்சி. எல்லாம் இவர் வணங்கும் அந்த நாமகிரித் தாயாரின் கருணைதான். நானும் படித்திருந்தால் இவருடன் பயணப்பட்டிருக்கலாமோ? இவருடன் நானும் இங்கிலாந்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்திருக்கலாமோ?

சொர்க்கத்துக்கு ஒரு வருடம்தான் ஆயுள். ஆனால் நரகத்துக்கு? ஐந்து வருடங்கள். அவரைப் பிரிந்து என்னுடைய புக்ககத்தில் இருந்தேன். வீட்டில் பலரும் இருந்தாலும் நான் தனியாகவே இருந்தேன். என்ன பாவம் செய்தேன்? ஏன் எனக்கு இவர் அவ்வ்ளவாகக் கடிதங்கள் எழுதுவதில்லை என முன்பெல்லாம் கண்ணீர் வடித்திருக்கிறேன். கடைசியில் பல கடிதங்களை அவருடைய தாயார் என்னிடமிருந்து மறைத்து வைத்திருந்தார் என்பதை அறிந்தவுடன் வேதனையும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைந்தேன்.

என் கணவராக இருந்தாலும் அவர் போடும் கணக்குகள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் இறைவன் போடும் கணக்குகள் யாருக்குமே புரிவதில்லை. ஐந்து வருடங்கள் கழித்து வெற்றி வீரராக வரவேண்டியவர் நோயாளியாக திரும்பினார். மீண்டும் மதராஸ் வாசம். அவருடன் இணைந்ததால் இது சொர்க்கமா, அவர் படுத்த படுக்கையாக இருப்பதால் இது நரகமா? ஏன் என்னைச் சோதிக்கிறாய் பெருமாளே?

ஒரு வருடம்….அவருக்குப் பணிவிடை செய்தது என்னுடைய பாக்கியம். வேளா வேளைக்கு அவருக்கு மருந்து, அமுது, மோர், எலுமிச்சை சாறு…அவருக்கு வலி எடுக்கும் போதெல்லாம் ஒத்தடம். மீண்டும் எழுந்து வர மாட்டாயா என் கணவா? பெருமாளே, என் உயிரை எடுத்துக் கொள்! இவரைக் குணப்படுத்து!

ஒரு நாள் தம்முடைய கண்ணீரை அடக்கிக் கொண்டு உணர்ச்சிவயமாகச் சொன்னார் – “உனக்கு வைரத் தோடு போட போறேன்.”

இன்னொரு நாள் அவர் சொன்னார் – “உன்ன நான் அழைச்சுண்டு போயிருந்தேன்னா எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது.” அதைத் தானே நானும் அன்று மன்றாடினேன். ஆனால் யாரும் கேட்கவில்லையே?

அந்த நாளும் வந்தது! அந்தோ…..இருபத்தொரு வயதில் என் வாழ்க்கை சூனியமானது.

அவருக்கு வெந்நீர் வைக்க பயன்படுத்திய இரண்டு பாத்திரங்கள் மட்டும் இன்னும் என்னுடன்! எனக்கும் இந்தப் பாத்திரங்களுடன் அந்த ஒரு வருடக் கதையை பேச பிடிக்கும்…மீண்டும் மீண்டும் பேச பிடிக்கும்.

சூனியத்தை சூனியத்தால் வகுத்தால் என்ன வரும்? கணவன் மறைவு! படிப்பறிவில்லாத, பணமும் இல்லாத கைம்பெண். பாம்பேயில் என் அண்ணன் குடும்பத்தில் தஞ்சம் புகுந்தேன். எட்டு வருடங்கள் – ஆங்கிலம் கற்றேன் – தையல் கலை பயின்றேன்.

ஒரு கட்டத்தில் நான் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என முடிவெடுத்தேன். எனது சொர்க்கம் மதராஸ் திருவல்லிக்கேணி தானே! ஹனுமந்தராயன் கோவில் தெருவில் ஓர் இடத்தை வாடகை எடுத்து ஒரு தையல் பயிற்சி மையத்தையும் தையல் கடையையும் ஆரம்பித்தேன். எனது வருமானம் சிறியதாக இருந்தாலும் தேவைகள் இல்லாததால் சிறப்பாக வாழ முடிந்தது.

கையறு நிலையை அனுபவித்தவள் நான். அதனால் தாயை இழந்து அனாதையாக நின்ற ஏழு வயதுச் சிறுவனைத் தத்தெடுத்தேன். ஐம்பது வயதில் எனக்கொரு மகன். முப்பது வருடங்களுக்குப் பிறகு எனது வாழ்க்கைக்கு மீண்டும் அர்த்தம் கிடைத்தது.

பெற்ற தாயைத் தனியாக விட்டுவிட்டு வெளிநாடு செல்லும் இக்காலத்தில், வளர்ப்புத் தாயைப் பிரிய மனமின்றி பக்கத்து ஊருக்குப் போவதைக் கூட விரும்பவில்லை என் தங்க மகன். வங்கியில் கிடைக்கும் பதவி உயர்வையும் மறுத்து, திருவல்லிக்கேணியிலேயே வாசம். மகன் மட்டுமில்லை. எனக்கு வாய்த்த மருமகளும் குணவதி. ஒரு பேரன்; இரண்டு பேத்திகள். அற்புதமான குடும்பம்.

கடவுள் போடும் கணக்கு சிக்கலானது. என் கணவர் போட்ட கணக்கு கடினமானது. என்னுடைய வாழ்க்கைக் கணக்கு மிகவும் எளிமையானது. முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உடலாலும், பொருளாலும் உதவிக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கை. நான் சேர்த்து வைத்த பணத்தில் எண்ணற்ற ஏழை மாணவர்கள் படிக்க உதவியுள்ளேன். எனக்கு வயதாகிவிட்டது. இப்போது எங்கும் செல்வதில்லை. பணம் சம்பாதிக்கவும் முடியவில்லை. ஆனால் இன்றும் பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை என்னிடம் ஆசியும் எனது கைகளால் பள்ளிக் கட்டணத்தையும் பெற்றுக் கொண்ட பிறகே பள்ளியில் சேர்க்கிறார்கள். கணித மேதையின் மனைவி என்ற பெருமிதத்துடன், எனது சொந்த முயற்சியாலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளேன். நிறைவாக உள்ளது.