ஒரு காதல் கதை

சில கார்கள் ஓடும்; சில கார்கள் நகரும்; ஆனால் இவனுடைய கார் பறக்கும்; அதி வேகமாக கார் ஓட்டுவதில் வல்லவன். சென்னையின் சந்துகளில் யாரையும் இடிக்காமல் யாரிடமும் இடிபடாமல் மற்ற வாகனங்களை லாவகமாக முந்திக் கொண்டு, தென் சென்னையில் ஏதோ பெயர் தெரியாத காட்டைக் கடந்து ஒரு பெரிய ஏரிக் கரையில் தன்னுடைய வண்டியை நிறுத்தி, மிடுக்காக இறங்கினான் அவன். கார் ஓட்டுவதில் கில்லாடி – மரங்களின் காதலன் – ஏரிகளின் துணைவன் – இயற்கையை ரசிப்பவன். சுற்றிலும் பசுமை. மேலே நீல வானம்.

அதற்கு மேல்? கனவில் மட்டும் தான் அவனுக்குப் பசுமை இருக்கிறது. கனவுப் பாதையில் ஒரு கதவு பூட்டப்பட்டது. மாயா அவனை எழுப்பினாள்.

“எழுந்திரு வீ! இன்றைக்கு நீ சான் பிரான்சிஸ்கோ போக வேண்டும்!”

“வீ — மாயா அவனை அழைக்கும் செல்லப் பெயர். அந்த நெடுஞ்செயற்கை அடையாளமான VXR-9 க்கு ஒரு மனிதத்தன்மை கொண்ட குறியீடு.

மாயா – வீயை விட அதி புத்திசாலி. அவனுடன் எப்போதும் ஒட்டிக் கொண்டிருப்பவள். அவளுக்குத் தெரியாதது இருக்கவே இருக்காது. அவள் வீயின் சின்த்தெடிக் கம்பானியன் (Synthetic companion) – நுண்ணறிவுத் தோழி.

சான் பிரான்சிஸ்கோ – முதன் முறை போகிறான். மெல்ல ஒரு சீட்டி. அது ஆச்சரியமோ மகிழ்ச்சியோ தெரியாத ஓர் உணர்வு ஒலி.

அவனுடைய பாஸ் தயவு. இவனை அனுப்புவதில் இவன் பாஸுக்கு வேண்டுதலோ விருப்பமோ கிடையாது. வயிற்றுத் தொல்லை. அனுமதிக்கப்பட்ட 44 இன்ச் இடுப்பளவைவிட இரண்டு இன்ச் அதிகமாக இருப்பதால் அரசுக்கு இடுப்பு வரி செலுத்தும் கொழுப்புக்காரன். இருந்தும் ஆசை விடாமல் தடை செய்யப்பட்ட மசால் வடைகள் நான்கைத் திருட்டுத்தனமாக தின்றதால் வந்த வினை. அந்த வினையால் வீக்கு கிடைத்தது வாய்ப்பு.

எஸ் ஐ கார்ப்பில் (SI Corp) உணர்வு அமைப்பு வடிவமைப்பாளராகச் (Empathy Systems Architect) சேர்ந்து ஐந்து வருடங்களில் மூன்று சம்பள உயர்வுகள், பூஜ்ஜியம் பதவியேற்றம், மற்றும் இந்த முதல் வெளிநாட்டுப் பயணம்.

சான் பிரான்சிஸ்கோவில் GEN150 மாநாடு. 1950ல் ‘மிஷின்கள் சிந்திக்க முடியுமா?’ என்ற கேள்வியை ஆலன் ட்யூரிங் (Alan Turing) எழுப்பியதற்குப் பிறகு கடந்த 150 ஆண்டுகளுக்கு நினைவஞ்சலியாய் நடைபெறும் மாநாடு.

சென்னை மாநகரின் நெருக்கடியான பழைய பகுதியாகிய பொன்மாரில் தான் வீயின் வீடு. அவனுடைய கொள்ளுத் தாத்தா கட்டிய வீடு. பரம்பரைச் சொத்தை விட்டுச் செல்வதில் நம்பிக்கையில்லாத வித்தியாசமான பைத்தியக்காரன்…காரர்…அவரிடமிருந்து வீயுடைய பாட்டி விலை கொடுத்து வாங்கிய வீடு. பிளாஸ்டிக் மரங்கள், காற்று வடிகட்டும் தூண்கள், செயற்கைப் பூங்காக்கள் மத்தியில் அடுக்கு மாடிக் கட்டடங்களில் கேப்ஸுல் வீடுகளுக்கு மத்தியில் செங்கல்லால் கட்டப்பட்ட அந்தக் கால ஒரே வீடு.

வீக்கும் ஒரு சொந்த கார் வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் 2085யின் சட்ட விதிகளின்படி சென்னையில் யாரும் சொந்த வண்டி வைத்துக் கொள்ள முடியாது. பறக்கும் டாக்சி செலவு அதிகம். தானியங்கி வீபாட் ( VPod ) டாக்சியில் சென்னை ஸ்கைலிப்ட் டெர்மினல் போக ஒரு மணி நேரம் ஆனது.

சரியான அறுவை இந்த வீபாட். ஊர்க் கதையைப் பேசிக் கொண்டே வந்தது. அக்கம்பக்கத்து வீபாடுகளை சகட்டு மேனிக்கு சென்னைத் தமிழில் திட்டித் தீர்த்தது.

நடுவில் வரும் வழியில் ஜாதிச் சண்டை. அதனால் ஊர் சுற்றி வருவதில் 30 நிமிடம் அதிகம்.

ஜாதி….என்னுடைய ஜாதி என்ன? தெரியாது. – வீ யோசித்தான்.

150 வருடங்கள் வாழ்வேன் என்று சபதம் செய்து 90 வயதிலேயே உயிரை விட்ட இவனுடைய கொள்ளுத்தாத்தா தம்முடைய 80 வயதில் தூக்கத்திலிருந்து “பாரதி” எனக் கத்திக் கொண்டு எழுந்தாராம். ஜாதி சம்பந்தப்பட்ட அனைத்து அத்தாட்சிகளையும் அழித்து விட்டாராம். அதிலிருந்து இவன் குடும்பம் ஜாதியில்லாத குடும்பம்.

மொழி? தமிழாகத் தான் இருக்கும். மாயாவின் உதவி இல்லாமல் 45 நொடிகள் தானாகவே வீயால் தமிழில் பேச முடியும். அதனால் தமிழாகத் தான் இருக்கும் இவன் மொழி. ஆனால் இவன் சின்ன வயதில் இவன் பாட்டி குஜராத்தியோ மராட்டியோ என்று சொன்னதாக நினைவோ கற்பனையோ இவனுக்கு உண்டு.

சென்னை ஸ்கைலிப்ட் டெர்மினலிலிருந்து, சரியாக மூன்று மணி 42 நிமிடங்கள் —
உயரக் குதிக்கும் கண்டம் தாண்டும் விமானப் பயணம் —
அதாவது Sub-Orbital Transcontinental Flight.
செல்ப் செக்-இன், நியூரோ விசா ஸ்கேன் — எல்லாமும் மின்னல் வேகத்தில் முடிந்தன.

வீக்கு இந்தப் பயணம் பிடித்திருந்தது.
நன்றாக யோசிக்க நேரம் கிடைத்தது.
“மாயா இல்லாமல் கடைசியாக எப்போது யோசித்தேன்?” என்று யோசித்தான்.
நினைவுக்கு வரவில்லை.
இந்த நினைவும் கனவைப் போலவே இருந்தது —
ஆனால் அதில் ஒரு சுதந்தரம் இருந்தது.
அந்த உணர்வை அவன் புன்னகையுடன் ரசித்தான்.

சான் பிரான்சிஸ்கோ – நியூ வால்டர் இன்டெல் மையம்.
அதாவது New Walter Intellum Complex — உலகின் மிக முக்கியமான நுண்ணறிவு மாநாட்டு இடம்.

நான்கு நாட்கள் நீடிக்கும் GEN150 மாநாடு! ஹொலோகிராஃபிக் பேனர்களும் நியூரல் கையேடு மேடை லைட்களும் அவனை வரவேற்றன.

உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும் மூளை பெருத்தவர்களின் மாநாடு. ஜப்பானியர், சீனர், அமெரிக்கர், ஆண்கள், பெண்கள் – முக்கியமாக பல ஹ்யூமனாய்ட்கள். அவர்களுக்கு நடுவே அவள் – மின்னலின் பெண் வடிவமா – ஹ்யூமனாய்டா – அல்லது நரம்பும் சதையும் உள்ள பெண்ணா?

வீயின் மூளையில் டோப்பமின், ஆக்சிடோசின், செரட்டோனின், எல்லாம் சமநிலையில் இருந்தன. அவளைப் பார்த்த அந்த நிமிடத்தில், அவை எல்லாம் சமநிலை இன்றி தள்ளாடின.

நான் காதலிக்கிறேனா? இதுதான் காதலா? பார்த்தவுடன் காதலா? ஏன் எனது நரம்பு மண்டலத்தில் இப்படி ஒரு சுனாமி. மாயாவின் தொடர் எச்சரிக்கையையும் மீறி அவளையே முழு நாளும் நினைத்துக் கொண்டிருந்தான்.

மாநாட்டின் முதல் நாள் முடிந்தது – என்ன நடந்ததென அவனுக்கு விளங்கவில்லை. அவளைத் தாண்டி எதுவும் அவன் கண்களுக்குத் தென்படவில்லை; அவளைத் தாண்டி எதுவும் அவன் அறிவுக்கு எட்டவுமில்லை.

முதல் நாள் அவன் அடைந்த இன்பம் அடுத்த இரண்டு நாட்களும் தொடர்ந்தன.
அவள் இருந்த வேளைகளில் அவன் விழிகள் வேறொன்றைத் தேடவேயில்லை.
கண்களால் அவளைத் தின்றான்.

கடைசி தினம்.
மாநாட்டின் இறுதி உரையாடல்.
வீ ஏற்கனவே மனதைக் கொடுத்துவிட்டான் — அதனாலோ என்னவோ அவளுக்கே பேச வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்ட வேளையில், அவன் நெஞ்சு அதிகபட்ச சந்தோஷத்தில் துடித்தது.

அவள் மேடைக்கு வந்தாள்.
அவளது குரலைக் கேட்ட தருணம் —
அவன் மூளையில் இசை ஒலித்தது போல,
நரம்புகளில் நறுமண வீச,
நேற்று கேட்ட எல்லா உரைகளையும் டெலீட் செய்துவிட்டது அந்த ஒற்றை உரையாடல்.

மிகத் தெளிவாகவும், கவர்ச்சியாகவும், சற்றே சினமாகவும் அவள் பேசினாள்.

உரையாடல் முடிந்தது.
அவளுக்கு முன்பாக ஒரு நீண்ட வரிசை.
வீ அந்த வரிசையின் கடைசி.
அவளிடம் நெருங்கும் ஒவ்வொரு அடியிலும் அவனது இதயத்துடிப்பு பெரும் புயலைப் போல சுழன்றது.

அவள் ஒருவிதமாக அவனைப் பார்த்தாள்.
அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை…பேச முடியவில்லை…
ஆனால் மனதுக்குள் ஏற்கனவே நூறு கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன.

“உன் பெயர்?” என்று அவள் கேட்டாள்.

வீ அவள் ஐ.டி. கார்டைப் பார்த்தான். அவள் பெயர் – பாரதி! ஊர் – சென்னை. மெல்லியதாக மனதுக்குள் சீட்டியடித்தான்.

பயணம் முடிந்து வீ சென்னை திரும்பி விட்டான்.
மாயா கேட்டாள்: “மாநாடு எப்படி இருந்தது?”
வீ ஒரு வார்த்தை கூட பதில் சொல்லவில்லை. மாயா விரைவில் புரிந்துக்கொண்டாள்.
சற்றே கிண்டலுடன் கேட்டாள் – “அவள் பெயர் பாரதிதானே?”
வீ ஆச்சரியப்பட்டான்.
“நீ எப்படி—?”
“நான் மாயா. உன் நுண்ணறிவுத் தோழி. உன் எண்ணங்களை கணிக்கக் கற்றுக்கொண்டது என் கட்டாய வேலை.”
மாயா மெதுவாக அவளின் தொழில்நுட்ப வலைகளில் தேடினாள்.
பாரதியின் முகவரி கிடைத்தது.

அடுத்த நாள் காலை.

மாயா ஏற்கனவே வீக்கு சிகை அமைப்பும் ஆடை தேர்வும் முடித்திருந்தாள்.

“இப்ப தான் நேரம் வீ. இதே மாதிரி எதுவும் நம்ம வாழ்க்கையில் நடக்காது. நீ சென்று நேராகச் சொல்லிவிடு.”

வீ புறப்பட்டான்.

பாரதி வீட்டு டோர் பெல் சத்தத்தில் வீயுடைய தயக்கம் தெரிந்தது.

அவள் திறந்தாள். தெரிந்த முகம். புன்னகைத்தாள்….என்ன – எதற்கு – புருவத்தாலேயே வினவினாள்.

அவளை நேராகப் பார்த்தான். மூச்சு விடாமல் ஒப்பித்தான் – “நான் உன்னைக் காதலிக்கிறேன் பாரதி. எந்த ஆழமான ஆராய்ச்சி கட்டுரை எழுத முடியாத அளவுக்கு, என் மனம் எழுதிய கவிதை நீ.”….காதல் பார்வை எப்படிப் பார்ப்பது….சொதப்பி விட்டேனா…கன்னத்தில் அறைவாளோ.

அவள் சற்று வெகு நேரம் பேசவில்லை.
பிறகு மெதுவாகக் கேட்டாள்:

“எனக்கு ஒரு கேள்வி…இந்த உரை மாயா எழுதியதா, இல்லை நீ தானா?”

வீ சிரித்தான். “மாயா உதவியில்லாமல் நான் பேசிய மிக நீளமான உரை இது”

பாரதி சிரித்தாள்.
அவனது பேச்சின் இறுதி வரியை உள்வாங்கி சற்று யோசனைக்குள் சென்றாள்.
பிறகு கண்கள் மின்ன, மெதுவாகப் பேசினாள்:

“நீ சொல்றது உண்மைண்ணா …என்னைப் பத்தி ஒரு கவிதை எழுதிட்டு வா. நீயாக எழுதும் கவிதை — மாயா இல்லாமல். அதனுடன், ஒரு ஸ்கெட்ச் — உன் கையால வரையணும். அப்புறம் யோசிக்கிறேன்.”

வீ அந்தக் கணத்தில் யாராவது இழுத்து பூமியில் புதைத்துவிட்டதுபோல் அடங்கிப் போனான். மாயா இல்லாமல் கவிதையா? ஸ்கெட்சா?

திரும்பிப் புறப்பட்டான். மூச்சு வாங்காமல் நடந்தான்.

மாயா எதையும் பேசவில்லை. அவளுக்குக் கோபமோ?

ஒரு மாதம் கழிந்தது.
GEN150 மாநாடும், சான் பிரான்சிஸ்கோவும், அந்த பேச்சும் —
எல்லாமே மங்கிய கனவாகி விட்டன.
ஆனால் அவள் முகம் மட்டும் அவனுக்குள் அழியவே இல்லை.

வீ அமர்ந்திருந்தான் — ஒரு காகிதம் முன், ஒரு பேனா கையில்.
“மாயா, கவிதை எழுதணும்…” என்று சொல்ல முடியவில்லை.

மாயா இல்லாமல் ஒரு வரி கூட எழுதிப் பார்த்ததில்லை.
அவளில்லாமல் ஒரு மெயில் கூட டிராஃப்ட் செய்ததில்லை.
குறிப்பாக, அவளுக்காக, ஒரு சொல் கூட எழுத முடியவில்லை.

மூளை பதறியது.
இதயம் நொறுங்கியது.
ஆனால் விழிகள் மட்டும் பாரதியுடைய சிரிப்பையே நினைத்தன.

ஒரு நாள் காலை…
வழக்கம்போல் “வீ… எழுந்திரு!” என்ற மாயாவின் குரல் இல்லை.
வீ விழித்துக் கொண்டான் — அமைதி… விசித்திரமான அமைதி.

அனைத்து நெட்வொர்க்குகளும் முடக்கம்.
மாயா இல்லை.
எந்த ஏ.ஐ. நுண்ணறிவும் இல்லை.
இணையமும் இல்லை.
தானியங்கி வீபாட் டாக்சிகளும் ஓடவில்லை.

முதல் முறையாக, தனக்கென கிடைத்த காலம் — சுரங்கம் போல நீண்ட காலம்.
மின் சக்தி இல்லாத நாட்கள்.

அமைதிக்கு முதலில் பயந்து, அந்த அமைதியையே மெதுவாக ரசிக்கத் தொடங்கினான் வீ.

பழைய வீட்டுத் தோட்டம்.
ஐம்பது வருடங்களுக்கு முன் செடிகள் அடர்ந்திருந்த தோட்டம்.
தற்போது, நிறைய பிளாஸ்டிக் மரங்கள்.
காண்பதற்கு பசுமைதான் — ஆனாலும் உயிரற்று நிற்கும் மரங்கள்.

அந்த மரங்களுக்கு இடையே —
ஒரு காலத்தில் அவன் நிழலில் படுத்து பாட்டி கதை கேட்ட இடம்.
பாதி நினைவுகளும், பாதி கனவுகளும் ஒட்டிய புல்வெளி.

தோட்ட வேலை செய்ய வேண்டும் போல தோன்றியது. ஏதோ காரணம் இல்லாமல் குழி வெட்டினான் .
கையை நிலத்தில் ஊன்றினான்.மண்ணின் மணம்…மயங்கினான்.
திடீரென… ஏதோ தடுத்தது….சத்தமும் கேட்டது.

பழைய பெட்டி. இரும்புப் பெட்டி. அவனைவிட வயதில் மிகவும் மூத்தது.

தாழ்ப்பாள் இல்லை — மிகவும் முயன்று பிறகு ஒரு வழியாகத் திறந்து பார்த்தான்.

பெட்டிக்குள் — ஒரு பழைய புகைப்படம்.
வீயின் கொள்ளுப் பாட்டியும், பாட்டனும்.
பக்கத்தில் ஒரு பழைய கவிதை நூல் – பாரதியார் கவிதைகள். சில கடிதங்கள்.
கொள்ளுத் தாத்தா எழுதிய கிறுக்கல் கவிதைகள்….யாருக்கு எழுதியிருப்பார் இந்தக் கள்ளத் தாத்தா…
இதிலிருந்து ஒன்றை உருவி பாரதிக்குக் கொடுத்து விட்டால்….இல்லை….அவன் மனசாட்சி இணங்க மறுத்தது.

மண், மரம், பெட்டி, தோட்டம், கொள்ளுத் தாத்தா எழுதிய கவிதைகள், இத்யாதி இத்யாதி…

முக்கியமாக தானே யோசிப்பதற்கு வாழ்க்கையில் முதன் முதலாக அவனுக்குக் கிடைத்த வாய்ப்பு…அதற்கும் மேல் காதல்…காதலிக்க வாய்ப்பு இல்லாமல் மறைந்து போபவர்கள் எவ்வளவு அபாக்கியசாலிகள்….என்னவெல்லாம் யோசிக்கிறான்….இத்தனை வார்த்தைகள் எனக்குத் தெரியுமா…எங்கே போயிருந்தன என் செரட்டோனின், ஆக்சிடோசின் எல்லாம்…

அவளை நினைத்தான்…மீண்டும்…மீண்டும்….அவள் நிறம், உயரம், கம்பீரம், சிரிப்பு, வார்த்தைகள், அவளைப் பார்த்தவுடன் தோன்றிய சிலிர்ப்பு, அவள் கைகள் தன்னைத் தொட்டவுடன் தனக்கு ஏற்பட்ட கெமிக்கல் மாற்றங்கள்…நினைவுகள் வார்த்தைகளாயின….வார்த்தைகளை வார்த்து கவிதையாக்கினான்….வாவ்….கவிதை….சொந்தமாகச் சிந்தித்து….சொந்தமாக எழுதிய கவிதை…

இன்னும் இரண்டு நாட்கள் சென்றன…அவன் கவிதை வார்த்தைகளை அவனுடைய விரல்கள் உள்வாங்கி அதற்கு தெரிந்த மொழியில் வெளிப்படுத்தத் தொடங்கின…சித்திரம்….அவளுடைய பிம்பம்….தேர்ந்த ஓவியானாலும் சிற்பியாலும் வடிக்க முடியாத வடிவழகி…என்னுடைய சித்திரம்…..சுமார் ரகத்தைவிட பல படிகள் கீழே…கவிதை….அல்லது கவிதை என நான் நினைப்பது…அதுவும் சுமார்ரகமே….

ஆனால் இதற்கு மேல் நம்மால் முடியாது…இந்த இரண்டையும் எடுத்துக் கொண்டு இன்னொரு முயற்சி…வென்றால் வாழ்க்கை…இல்லையென்றால்….இருக்கவே இருக்கின்றன…50 இன்ச் மேனேஜரும், உயிரில்லா மரங்களும், உணர்வில்லா மாயாவும்…

புறப்பட்டான்….மாயாவும் இன்டர்நெட்டும் ந்யூரல் நெட்ஒர்க்கும் உதவாக்கரை உத்தியோகமும் மீண்டு வருவதற்கு முன் மீண்டும் அவளைப் பார்க்க வேண்டும்…நான் முழுமையாக இருக்கும் போதே அவளிடம் மீண்டும் என் காதலைச் சொல்ல வேண்டும்…

அவன் அழுத்திய அழைப்பு மணி இப்போது அவன் இதயத்துடிப்பின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

அவள் வந்தாள். சற்றே அதிகமாகப் புன்னகைத்தாள். புருவத்தால் உள்ளே அழைத்தாள். வித்தியாசமான உடை அணிந்திருந்தாள்…என் பாட்டியின் போட்டோவில் பார்த்த நினைவு….சேலையோ புடவையோ…பெயர் நினைவில்லை…ஆனால் அது இவள் அழகைக் கூட்டியது.

காதல்…காதலை உணர்கிறேன்….ஏதோ குளிர்ந்த திரவம் என் உடலுக்குள் புகுந்ததைப் போல….காதலியின் முன் காதலைச் சொல்வதற்குக் காத்திருக்கும் தருணம்…அது சொர்க்கமா நரகமா…இரண்டும் கலந்ததா?

கவிதை வாசித்தேன்…புன்னகைத்தாள்….வரைந்ததைக் காண்பித்தேன்…மீண்டும் புன்னகைத்தாள்.

நான் தேறினேனா…பயத்துடன் அவளைப் பார்த்தேன். சம்மதத்தைத் தெரிவித்தாள் – வார்த்தைகளில் இல்லை – என்னை அணைத்ததின் மூலம். அந்த ஸ்பரிசம்….இதற்கு நான் என் வாழ்க்கையில் இதுவரை சம்பாதித்த பெயரையும் பொருளையும் (பெரிதாக இல்லை என்பது வேறு விஷயம்) ஒரே நொடியில் இழப்பேன்.

எனக்கும் உன்னைப் பிடிக்கும்….என்று உன்னை நான் முதலில் பார்த்தேனோ அன்றிலிருந்தே உன்னைப் பிடிக்கும். ஆனால் நீயும் ஒரு சராசரி ஆசாமி…சொந்தமாக பேச முடியா, எழுத முடியாத, கோடிங் செய்ய முடியாத, உணர்ச்சியற்ற, யோசிக்காத, செயற்கைத்தனத்துக்கும் செயற்கை உலகத்துக்கும் அடிமை. நீ எழுதிய இந்த சுமாரான கவிதையும் சித்திரமும், அடிமைத்தனத்திலிருந்து விலகுவதற்கு நீ அடி எடுத்து வைக்கும் முதல் முயற்சி…எனக்குப் பிடித்துள்ளது…..உன் முயற்சி…என்னுடன் கை கோர்ப்பாயா…இந்த உலகை மீண்டும் மீட்டெடுக்க…நம்மால் முடியாமல் போகலாம்….ஆனால் நம்முடைய முயற்சியைத் தொடங்க வேண்டும். நம்முடைய முயற்சியின் நோக்கம் வெற்றி….விடுதலை. அந்த வெற்றியை நாம் பார்க்க வேண்டுமென்பதில்லை….50 வருடங்கள் கழித்து நம் பேரனோ பேத்தியோ வெற்றியடையட்டும்…நம் சந்ததி சுதந்தர காற்றைச் சுவாசிக்கட்டும். என்னுடன் கை கோர்ப்பாயா?

நான் என்ன பதில் சொன்னேன் என்பதையும் அடுத்து என்ன நடந்ததென்பதையும் நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா உங்களுக்கு? விடை பெறுகிறேன்….