ஜெய ஜெய சங்கரா

இந்த உலகத்தைச் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். பக்தன் என்பவன் கண்மூடித்தனமாக மதச் சடங்குகளை நம்புபவன் என அறியப்படுகிறான். சதா சர்வ காலம் காரணமின்றி தெய்வ நிந்தனையும் பக்தர்களைக் கிண்டலும் செய்பவன் நாத்திகன் என அறியப் படுகிறான். உழைப்பதற்கு கேள்விகள் கேட்பவன் கம்யூனிஸ்ட் என அறியப் படுகிறான். இப்படி பல சித்தாந்தங்கள் – ஒன்றை ஏற்பவன் அடுத்ததை முற்றிலுமாக நிராகிக்கிறான். இது துரதிர்ஷ்டமான விஷயம் – ஆனால் உலகம் இப்படித் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

 காதல், மோதல், துப்பறிதல் என எத்தனையோ விஷயங்கள் இருக்க இந்த கதை வித்தியாசமான அதே சமயத்தில் சுவையானதொரு களத்தில் பயணிக்கிறது. நாத்திகன், காந்தியவாதி, ஆன்மீகவாதி, சந்நியாசி, தேச பக்தன், கம்யூனிஸ்ட், அரசாங்க ஊழியன் என பல சித்தாந்தங்களை பின்பற்றுபவர்களை ஒரே கோணத்தில் ஒரு பொதுவான நன்மைக்காக உடன்பட வைக்கிறது. ஜெயகாந்தனைத் தவிர யாராலும் இப்படி பல்வேறு நம்பிக்கைகளை அதன் சாதக அம்சங்களுடன் சுவையாக அலச முடியாது. 

எமர்ஜென்சி காலத்தில் நடை பெரும் இக்கதை யாரும் எதிர் பாராத கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. அனைத்து விஷயங்களையும் நடு நிலையோடு பார்ப்பவர்களால் மட்டுமே இக்கதையை புரிந்து கொள்ளவும் பாராட்டவும் முடியும்.

 இக்கதை தமிழ் உரை நடையில் ஒரு முத்திரை.