உங்களில் ஒரு கணேஷ்

பல சுஜாதாவுடைய சிறுகதைகள், பேட்டிகள், கட்டுரைகளின் தொகுப்பு. இதில் குறிப்பிடத்தகுந்த கதை ‘விஷம்’. இதை சுஜாதாவுடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.

 போர்வை போர்த்தி தூங்கும் ஒருவன் போர்வைக்குள் ஒரு பாம்பு புகுந்து கொள்வதைப் பார்க்கிறான். எழுந்தால் கடித்துவிடும் என்று பயம். என்ன செய்வது எனத் தெரியாமல் அப்படியே அசையாமல் பல மணி நேரம் கிடக்கிறான். கடைசியில் அவனுடைய நண்பன் அங்கே வருகிறான். சத்தம் போடாமல் அவனுக்கு தன்னுடைய நிலைமையை சொல்வதே இவனுக்கு பெரிய சவாலாக உள்ளது. விளக்கைப் போட முடியாது; போர்வையை வேகமாகவோ மெதுவாகவோ பிரிப்பது ஆபத்து. கோபத்தைக் கூட சன்னமாக வெளிப்படுத்த வேண்டிய நிலை. தும்மவோ இருமவோ கூட முடியாது. இதைப் படிக்கும் நமக்கும் பயமும் விறுவிறுப்பும் பற்றிக் கொள்கிறது. கடைசியாக டாக்டர் வருகிறார் – பல முயற்சிகள் செய்கிறார்; முடிவு எதிர் பார்த்ததுதான் என்றாலும் கதை விறுவிறுப்பு குறையாமல் போகிறது.

 பாம்பு கடியை விட பாம்பு கடித்துவிடுமோ என்ற நினைப்பு பயங்கரம். அந்த பயத்தை எழுத்தில் சுஜாதா வெளிப்படுத்துவதைப் போல யாராலும் வெளிப்படுத்த முடியாது.