எனது இந்தியா

சரித்திரம் என்பது ஆயிரம் முகங்களும் அவற்றுள் ஆயிரம் நாக்குகளும் கொண்டது. ஒவ்வொரு நாக்கு ஒரு மாதிரி பேசும். சில நாக்குகள் உண்மையும், சில நாக்குகள் பொய்யும், பல நாக்குகள் உண்மையும் பொய்யும் கலந்த கலவையும் பேசும். சில மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட செய்திகளை சில நாக்குகள் ஏதோ ஓரத்தில் பேசிக் கொண்டிருக்கும். ஆனால் அவற்றை கவனிப்பார் மிகவும் குறைவு. சரித்திரத்தைப் புரிந்து கொள்வதும் அதைப் புரிய வைப்பதும் சாதாரண காரியம் கிடையாது. ‘எனது இந்தியா’ என்ற இந்த நூலின் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் அந்த கடினமான காரியத்தை மிகவும் எளிதாகக் கையாளுகிறார்.

 புத்தகக் கடைக்கோ நூலகத்துக்கோ சென்றால் பல தடி தடியான சரித்திர புத்தகங்களைப் பார்க்கலாம். ஆனால் அவை எந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கும் என்பது கேள்விக்குறி. இந்தப் புத்தகமும் சரித்திரப் புத்தகம் தான். இதுவும் தடியான புத்தகம் தான். ஆனால் சரித்திரத்தை சுவைப்பட தெரிவிப்பதில் சரித்திரம் படைத்துள்ளார் இந்த ஆசிரியர்.

 இந்தப் புத்தகத்தில் உள்ள பல விஷயங்கள் நாம் வரலாற்றில் கவனிக்காத, மறந்து போன அல்லது சிலரால் மறைக்கப்பட்ட உண்மைகள்.

 எவரெஸ்ட் தெரியும். அது ஒரு ஆங்கில அதிகாரியின் பெயர் என்பதோ அந்த சிகரத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டது அதிகார வர்கத்தின் செயல்பாடு என்பதோ நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

 இன்றும் கூட ஆங்கிலர் ஆட்சியைப் புகழ்பவர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் அவர்கள் சாதி, கல்வி, விவசாயம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் எப்படியெல்லாம் திட்டமிட்டு நம்மைச் சுரண்டினார்கள் என்பது தெளிவாக விளங்கும்.

 திப்புவையும் மருது சகோதரர்களையும் நாம் கொண்டாடி இருக்கிறோம். ஆனால் அவர்களுடைய வாரிசுகளுக்கு நேர்ந்த கதியை நினைத்துப் பார்த்ததுண்டா?

 ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சங்களுக்கு பிணிகளுக்கும் என்ன பின்னணி என்பதை யோசித்திருப்போமா? ஆங்கிலர் ஆள்வதற்கு முன்பாக இந்த அளவு பாதிப்பு நம் நாட்டுக்கு ஏற்பட்டதுண்டா என்பதை ஆராய்ந்திருப்போமா?

 உப்பு சத்தியாகிரகம் மிகவும் பிரசித்தம். ஆனால் உப்பு வேலி? அது வரலாற்றில் மறைக்கப்பட்ட கொடுமை.

 ஜஹாங்கீரின் மகள், ஔரங்கசீப்பின் செருப்பு ஊர்வலம், மன்னன் ஜெய்சிங்கின் கொடுங்கோன்மை, முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே ஏற்ப்பட்ட சந்தால் மக்களின் ஆங்கிலேயருக்கு எதிரான எழுச்சி, யேல் என்ற ஊழல்வாதியின் பெயரால் ஏற்ப்பட்ட உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகம், பல ஆங்கில அதிகாரிகளின் திருட்டுத்தனம் என கணக்கிலடங்கா வரலாற்று உண்மைகள் – எல்லாம் அநேகமாக நாம் கவனிக்கத் தவறிய விஷயங்கள்.

 இது அனைவரும் படித்து ஆதரிக்க வேண்டிய புத்தகம்.