உன்னைப் போல் ஒருவன்

ரசிகர்களுக்காக தமது எழுத்தில் எந்தவிதமான சமரசத்தையும் செய்து கொள்ளாத ஜெயகாந்தனின் நேர்மையான எழுத்து. வட்டார மொழியில் கதை எழுதுவது பிரபலமாகாத காலத்தில் சென்னை தமிழில் எழுதப்பட்ட முன்னோடி கதை. ஜெயகாந்தன் ரசிகர்களுக்கு எது பிடிக்கும் எனப் பார்த்து தமது எழுத்தை அதற்குத் தகுந்தாற் போல அமைப்பவர் இல்லை. இந்தக் கதையும் அப்படிப் பட்டதே. எல்லாருக்கும் பிடிக்க வாய்ப்பில்லை.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தால் என்ற ரீதியில் கதையை அறிமுகப்படுத்தாமல், ஆசிரியர் கதையை அறிமுகப் படுத்தும் விதமே மிகவும் வசீகரமாக உள்ளது. தங்கம் என்ற முக்கியமான பாத்திரம் யார், அவள் வயது என்ன, கல்யானமாணவளா, பணக்காரியா அல்லது ஏழையா, என்ன வேலை செய்கிறாள், எப்படி இருப்பாள், எங்கே வசிக்கிறாள், அவளுக்கு குழந்தை உண்டா, மகனா அல்லது மகளா என்ற அடிப்படை விஷயங்களை ஆசிரியர் முதல் சில பக்கங்களில் அறிமுகப்படுத்தும் விதம் அறிமுக எழுத்தாளர்களுக்குப் பால பாடமாக அமைக்கப் பட வேண்டும்.

இந்தக் கதாபாத்திரம் நல்லது, அது கெட்டது என வேறுபடுத்த வேண்டிய அவசியம் இக்கதையில் இல்லை. மனிதர்களின் மாறுப்பட்ட குணாசிதயங்களை அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிகளை மையமாக வைத்து புனையப் பட்ட கதை. கதையின் கட்டுமானத்தில் எந்த குறையும் சொல்ல முடியாது. இருந்தாலும் தனிப்பட்ட வகையில் எனக்கு இந்தக் கதை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

சென்னை மொழியை முழுமையாகப் பயன்படுத்தியிருந்தாலும், மிகச் சிறிய இடங்களில் பிராமண பாஷையில் பயன்படுத்தப் படும் வார்த்தைப் பிரயோகங்கள் வருகின்றன. அது ஒரு மிகச் சிறிய குறையே.