தமிழ்த் திரைப்படங்களின் வரலாறு காளிதாஸிலிருந்தே அனைவரும் தொடங்குகின்றனர். ஊமைப் படக் காலத்தில் என்னென்னப் படங்கள் வந்தன, அதில் பணியாற்றிய நடிகர்கள், இயக்குனர்கள், கதாசிரியர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கு எளிமையான ஆனால் தெளிவான பதில்களை இப்புத்தகம் வழங்குகிறது.
அஜயன் பாலா எழுதியுள்ள இந்நூல் தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை 1916யிலிருந்து 1947 வரை அக்கு வேறு ஆணி வேறாக அலசுகிறது. 600 பக்கப் புத்தகம், தகுந்த புகைப்படங்களுடன் விறுவிறுப்பான முறையில் எழுதப்பட்டுள்ளது. எந்தத் துறையின் வரலாறாக இருந்தாலும் சரி – இதைப் போல சுவையுடன் எழுதினால் வாசகர்கள் வரலாற்றை எளிதாகவும் விரும்பியும் படிப்பார்கள். பல வரலாற்று நூல்கள் குறிப்பெடுக்க மட்டுமே உதவுகின்றன. ஆனால் இந்நூல் புதினத்தைப் போல படித்து இன்புறவும், தேவைப்படும் போது குறிப்பெடுக்க உதவும்படியும் எழுதப்பட்டுள்ளது.
கேள்விப்படாத பல தகவல்கள் இந்த நூலில் குவிந்து கிடக்கின்றன. மாதிரிக்குச் சில தகவல்கள் –
சங்கரதாஸ் நாடக உலகைத் துறந்த காரணம்…
சினிமா தோன்றிய அடுத்த வருடத்திலேயே சென்னையில் துண்டுப் படங்கள் திரையிடப்பட்ட செய்தி…
பாட்லிங் மணி – முதல் ஆக்ஷன் ஹீரோ…
மீனா நாராயணன் – முதல் பெண் ஒலிப்பதிவாளர் …
விடிய விடிய கச்சேரி செய்த தியாகராஜ பாகவதர்…
பல்துறை வித்தகரான நடிகர் ராஜம்…
என்.எஸ்.கிருஷ்ணனின் முதல் படம்…
எம்.ஜி.ஆர். புகைப் பிடித்த ஒரே படம்…
எண்ணற்ற செய்திகள்…யாருமறியா குறிப்புகள்….துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் முழுமையான வரலாறாக இந்நூல் அமைந்துள்ளது.
தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை இதுவரை யாரும் இவ்வளவு விரிவாக எழுதியதில்லை. ஆசிரியர் பெரிதும் உழைத்துள்ளார் என்பது இதைப் படிக்கும்போது நம்மால் உணர முடிகிறது. ஈடு இணையற்ற நூல் – இந்தத் துறையில்.
பத்திக்குப் பத்துப் பிழைகளாவது இருக்கும். மொழிப் பிழைகள் எக்கச்சக்கம். சில இடங்களில் முன்பே கூறிய விஷயங்கள் திரும்பவும் விளக்கப்படுகின்றன. அரசியல் சார்ந்த சில பக்கங்கள் நூலின் ஓட்டத்துடன் ஒட்டவில்லை. சில இடங்களில் திரைப்படங்களின் வரிசைப்படுத்துதலில் தவறுகள் உள்ளன. சில விஷயங்கள் அரை குறையாகக் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக லட்சுமி காந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு எதிராகச் சதி செய்ததாக வாசன், கல்கி போன்றோரைக் காரணமின்றி குறை சொல்வது ஏற்கும்படியாக இல்லை. இப்படிப்பட்ட குறிப்புகளுக்கு விளக்கம் தேவை என்பதை ஆசிரியர் உணரவில்லை.