தமிழில் நூற்றுக்கணக்கான நாவல்களை நான் படித்திருந்தாலும் என்னுடைய மனதில் ஒரு குறை வெகு காலமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் மூலக்கதையைப் படிக்கவில்லை என்ற குறை தான் அது. சில மாதங்களுக்கு முன்பாக விகடன் பிரசுரம் தில்லானா மோகனாம்பாள் நாவலைப் பதிப்பித்ததின் மூலம் அந்தக் குறை நீங்கியது.
நாதமே உருவாக அமைந்த, உணர்ச்சிப் பூர்வமான, தன்மானத்தை எப்போதுமே இழக்கத் தயாராக இல்லாத ஓர் உன்னத நாதஸ்வரக் கலைஞன். நடராஜ மூர்த்தியே பெண்ணுருவைக் கொண்டு பூமியில் பிறந்து நடனம் ஆடுவதைப் போன்ற ஒப்புவமையில்லா நாட்டியப் பேரரசி. இவர்களுக்குள் நேரும் ஊடலும் காதலுமே கதைக்களம். அந்தக் கதையில் தான் எத்தனை எத்தனை அருமையான செய்திகள். இந்த மண்ணின் கலாசாரத்தைப் பற்றிய யாருமறியா அரிய விஷயங்கள். பல சிற்றூர்களைப் பற்றியும், பல்வேறு விதமான திருவிழாக்களைப் பற்றியும், இசைக் கலைஞர்களின் பழக்கவழக்கங்களைப் பற்றியும், இப்படிப் பல அற்புதமான விஷயங்களை அழகாக விளக்கும் அபூர்வப் புத்தகம் இது.
அர்த்தமில்லாத கதை, அசட்டுத்தனமான காதல், யாருக்குமே விளங்காத வசனங்கள் என்ற வகையில் அமையும் இந்தக் காலக் கதைகளை விரும்புபவர்களுக்கு இந்தக் கதை கண்டிப்பாகப் புரியாது, பிடிக்காது.உணர்வுப் பூர்வமாகக் காதலிப்பவர்கள், உணர்ச்சிமயமான கலா ரசிகர்கள், பண்பாட்டிலும் சரித்திரத்திலும் உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் – இவர்களுக்கான கதை இது.
ஓவியர் கோபுலுவின் அதிசயத்தக்க ஓவியங்கள் இந்த அருமையான கதைக்கு வலு சேர்க்கின்றன.
ஒலிபெருக்கியின் வரவு, வெல்வெட் துணிகளின் அறிமுகம், ரயிலில் மூன்றாம் வகுப்பு பயணங்களில் உள்ள தொல்லை, சென்னை நகர ரிக்க்ஷகாரர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதம், மூர் மார்க்கெட்டின் வர்ணனை, திருவாரூர் கோவிலின் பெருமை, சிக்கலின் சிறப்பு, இலங்கை மக்களின் பண்பு, சமஸ்தான அரசர்களின் பொழுதுபோக்கு – இன்னும் எத்தனை எத்தனை விஷயங்கள்.
இசைக் கலைஞர்களின் மனநிலை, தாசிக் குடும்பங்களின் வாழ்வு முறை, தஞ்சை ஜில்லாவின் பல்வேறு ஊர்களைப் பற்றிய அற்புதமான பதிவு, வட்டார வழக்குகள், நாம் அறியா மாமனிதர்கள் புரிந்த அற்புதங்கள் மற்றும் தியாகங்கள், திமிரி நாயனத்தைப் பற்றியும் பாரி நாயனத்தைப் பற்றியும் அற்புத விளக்கங்கள் – இது என்ன நாவலா அல்லது வரலாற்று மற்றும் பண்பாட்டுக் களஞ்சியமா? எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு பல்துறை வித்தகர், பல்வேறு தளங்களில் பேரார்வம் கொண்டவர், நம் நாட்டுக் கலாசாரத்தில் நம்பிக்கையுடையவர், நாணயமான எழுத்துக்குச் சொந்தக்காரர். இவர் படைத்த இந்தப் புத்தகம் சாதாரணமாக நாம் கடந்து போகக்கூடிய தொடர்கதையோ நவீனமோ இல்லை; மாறாக இது ஒரு பெருமைமிகு காவியம்.