வாரிசு

தென்னிந்திய நடிகர்கள் குடும்பம் ஒட்டுமொத்தமாக நடித்துள்ளதால், இது ஒரு குடும்பப்படம் எனலாம்.

இத்தனை நடிகர்கள் நடித்திருந்தால்

அவர்களுக்குள் நடிப்பில் பெரிய போட்டி வந்து விடுமே. இந்தப் பிரச்சினையை இயக்குனர் மிகவும் சாதுர்யமாக தவிர்த்து உள்ளார். யாராவது நடித்தால்தானே போட்டி வரும்? யாரையுமே நடிக்க வைக்காவிட்டால்?

இப்படத்தில் உண்மையில் யார் மோசமாக நடிப்பது என்பதில்தான் போட்டி. அதில் சரத்குமாருக்குத் தான் முதல் பரிசு. வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துக்கம் அனைத்தையும் சமமாக நோக்கும் மனப்பான்மை அவரிடம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எல்லாக் காட்சிகளிலும் ஒரே விதமான முகபவம் தான். அவர் சந்தோஷப்படுகிறாரா, கோபப்படுகிறாரா, துக்கப்படுகிறாரா – யாராலுமே கண்டுபிடிக்க முடியாது. அப்படிப்பட்ட உயர்ந்த நடிப்பை அப்படிப்பட்ட அசாதாரணமான நடிப்பை அவர் வழங்கியுள்ளார்.

எந்த நடிகர்களும் நடிக்கவில்லை என்ற குறை யாருக்கும் தெரியக்கூடாது என்பதால் அனைவருக்கும் சேர்த்து அதிகப்படியாகவே விஜய் நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் மட்டும் இல்லை, மொத்தப் படத்திலும் வசன காட்சிகளிலும் கூட நடனமாடிக் கொண்டே அவர் நடிப்பது புதுமையிலும் புதுமை. அவருக்கு நாட்டிய பேரொளி என்ற பட்டம் வழங்கலாம்.

அதுவும் நாட்டியமாடியபடியே விஜய் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் எல்லோரையும் தன் பக்கம் சாய்க்கும் வித்தை தொழிலதிபர்கள் எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம்.

படத்தின் நாயகிக்குத் தமிழகத்தில் நல்ல எதிர்காலம் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. என்ன அற்புதமான நடிப்பு. சாவித்திரி தோற்றார் போங்கள்.