வெந்து தணிந்தது காடு

சில வருடங்களுக்கு முன்பு ஜெயமோகன் “ஐந்து நெருப்பு” என்ற தலைப்பில் ஒரு சிறந்த சிறுகதையை எழுதியிருந்தார். அதன் விரிவாக்கம்தான் இத்திரைப்படம்.

மற்றவர் எழுதிய கதை, தாம் எழுதிய கதை எனப் பாகுபாடு பார்க்காமல், எந்த நல்ல கதையிருந்தாலும் மோசமான திரைக்கதையால் அதைக் கெடுப்பதில் ஜெயமோகன் வல்லவர்.

சிறுகதை அதன் வசனங்களும் அப்படியே திரைப்படத்தில் முதல் இருபது நிமிடங்கள் வருகின்றன. ஆனால் சிறுகதையில் தெளிவாகத் தெரியும் சில விஷயங்கள் திரைப்படத்தில் புரியாதவாறு திரைக்கதை.

சிறுகதையின் விரிவான வடிவில் வரும் ஏனைய காட்சிகளும் சொல்லும்படியாக இல்லை. இடைவெளி வரை கதை மெதுவாக நகர்கிறது. அதன் பிறகு அதி வேகமாக நகர்கிறது. நியாயமாகப் பார்த்தால், இடைவெளியிலேயே படம் முடிந்து விடுகிறது. அதன் பிந்தைய காட்சிகள் அடுத்த பாகமாக வந்திருக்க வேண்டும்.

சிம்பு நன்றாகத் தான் நடித்துள்ளார். ஆனாலும் ஊர்ப் பையனாக அவரை ஒப்புக் கொள்ளமுடியவில்லை. இதே வேடத்தில் தனுஷ் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை. கதாநாயகி சித்தி இதானிக்கு நடிப்பும் வரவில்லை; வசனத்துக்கேற்றவாறு உச்சரிப்பும் இல்லை.

தாமரையின் பாடல் வரிகளும் ரஹ்மானின் இசையும் ஒரு பாடலில் அவருடைய குரலும் அருமை. ஷ்ரேயா குரலில் “உன்ன நெனச்சதும்” பாடல் நன்றாக உள்ளது. கௌதம் மேனனின் படமாக்கம், காட்சியமைப்பு, ஒளிப்பதிவு எல்லாம் இப்பாடல் காட்சியில் அழகியலுடன் அமைந்துள்ளன.

பல கதாபாத்திரங்கள் சரியான பின்னணியுடன் அறிமுகப்படுத்த படவில்லை. வசனங்கள் வலுவாக இல்லை. அதனால் படத்துடன் பார்வையாளர்கள் ஒன்றிப் போகாமல் அந்நியப்படவே வாய்ப்புள்ளது.