பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படம் பார்த்தவர்கள் அது நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்து விட்டுப் போகட்டும்.

அதில் நடித்துள்ள நடிகர்கள் மிகவும் பொருந்துவதாகச் சொல்கிறார்கள். சரி….மற்றவர்கள் கருத்துக்கு நாம் மதிப்பளிப்போம்.

ஆனால் மணிரத்தினத்தால் பொன்னியின் செல்வன் புகழ் பெற்றுவிட்டது என்றும் கல்கி பிரபலமாகி விட்டார் எனச் சொல்வதை நகைச்சுவையாகக் கூட என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

நெஞ்சு பொறுக்குதில்லையே!

*************************************************************************************************

நினைத்துப் பார்த்தால் மிகவும் வேதனையாக உள்ளது. பொன்னியின் செல்வன் நாவலை முதலில் நான் என்னுடைய மாணவப் பருவத்தில் படித்தபோது, ஐந்து பாகங்களையும் இடைவெளியின்றி இரவுப் பகலாகப் படித்து முடித்தேன். கல்லூரிக்குப் போகவில்லை….மற்ற வேலைகளையும் மறந்தேன். அதிலிருந்து கல்கி எழுதிய மற்ற நாவல்களையும் தேடிப் படித்தேன். அவருடைய எழுத்து எனக்குச் சரித்திரத்தையும் பாரம்பரியத்தையும் அலச திறவுகோலாக அமைந்தது. அதே பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாகப் பார்க்கும்போது எப்போது முடியும், எப்போது திரையரங்கை விட்டு வெளியேறலாம் என காத்திருக்க நேர்ந்தது.

இத்திரைப்படம் மிகப் பெரிய சொதப்பல். சிறந்த கதையை, சரித்திரத்தை அழகியலுடன் அணுகத் தெரியாத அவலம்.

கல்கியின் நாவலே சிறந்த திரைக்கதை வடிவில் இருக்கும். அதை அதன் போக்கிலேயே படமாக்கி இருக்கலாம். இல்லையெனில் இலக்கிய ஆளுமையும் சரித்திர அறிவும் கல்கியின் ரசிகருமாக இருக்கக்கூடிய நல்ல எழுத்தாளர் யாரையாவது தேர்தெடுத்திருக்கலாம். அருமையான கதையை திரைக்கதை மூலம் எப்படி குட்டிச்சுவர் ஆக்கலாம் என்பதற்கு இப்படம் மிகச் சிறந்த உதாரணம். இக்கதையைப் படிக்காத, கேட்காத, கேள்விப்படாத நபர்கள் யாரேனும் இப்படத்தைப் பார்த்தால் தலையும் புரியாது; காலும் புரியாது. அப்புறம் எங்கே அவர்கள் கல்கியை ஆராதிக்கவோ சோழ சரித்திரத்தைப் புரட்டவோ ஆரம்பிப்பார்கள்.

வசனம் – வந்தியத் தேவன் பேசும் சில வசனங்களைத் தவிர மற்ற இடங்களில் வசனங்களை நடிகர்களே எழுதி விட்டனரோ?

வந்தியத் தேவனாகக் கார்த்தி நன்றாகப் பொருந்துகிறார். விக்ரமும் அருமையாக நடித்துள்ளார். ஜெயராம் பொருத்தமாக நடித்திருந்தாலும் அவருடைய கதாபாத்திரம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் சிறந்த நடிகர்களாக இருந்தும் இயக்குனர் அவர்களைச் சரியாகப் பயன்படுத்தவில்லை.

நந்தினியாக ஐஸ்வர்யா ராய் – 20 வருடங்கள் முன்பு நடித்திருக்க வேண்டிய பாத்திரம். வஞ்சகத்தைக் கண்களில் காட்ட தெரியாத, எதிரில் இருப்பவர்களைத் தன் அழகாலும் நாவன்மையாலும் மயக்க முடியாத வயதான பெண்மணியா நந்தினி?

திரிஷா குந்தவை? முட்டாள்தனமான தேர்வு.

விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்தீபன் – இவர்களுக்கு நடிக்க யாராவது கற்றுக் கொடுத்துப் பின் படத்தில் பயன்படுத்தியிருக்கலாம்.

பழுவேட்டரையர் என உச்சரிப்பதில் பல நடிகர்களும் தடுமாறுகின்றனர். கதையை இஷ்டத்துக்கு மாற்றியதைப் போல இவர் பெயரையும் பல்வேட்டையர் என மாற்றியிருக்கலாமே மணி?

அரை ரூபாய் நாணய அளவுக்கு நெற்றியில் குங்குமப் பொட்டுடன் கண்களில் துளியளவும் கருணையில்லாமல் செம்பியன் மாதேவி!

சில இரவு நேரக் காட்சிகளில் திரையில் டார்ச் லைட் அடித்தால் தான் தெரிகிறது. அழகான காவிரி, அற்புதமான இலங்கை, தஞ்சை மாட மாளிகைகள் – நாமாகக் கற்பனை செய்தால்தான் உண்டு.

இடைவேளை வரையாவது ஓரளவுக்குச் சகிக்க முடிகிறது. பிற்பாதி – கல்கியைக் கொலை செய்த மணிரத்னம் மீது கோபம்தான் வருகிறது.

இசை – ரகுமானுக்கு வயதாகி விட்டதா, இல்லை இசையில் ஆர்வம் நீங்கி விட்டதா?

இன்னும் ஏகப்பட்ட குறைகள் உள்ளன. எழுதிக் கொண்டே போகலாம். எனக்கு நேரமில்லை.

************************************************************************************************

பொன்னியின் செல்வன் படமில்லை – பாடம். திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக்கப்படவேண்டிய முக்கியமான படம். அதன் மூலம் திரைக்கதை எப்படி அமைக்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். வசனங்கள் எப்படி எழுதக் கூடாது என அறியலாம். எப்படி படத்தை இயக்கக் கூடாது என்பதை அறியலாம். நடிகர்களின் தேர்வை எப்படிச் செய்ய கூடாது என்பதை அறியலாம். இன்னும் எண்ணற்ற பாடங்களைக் காட்சிகளின் ஊடாகக் கொடுக்கக் கூடிய மகத்தான படைப்புதான் இப்படம்.

*******************************************************************************************************
One of the most annoying mistakes made by screenwriters of Ponniyin Selvan – 1 film, is the assumption that just because something is mentioned in the narrative, it will magically be understood by the eventual viewer of the movie.