Valimai

அஜித் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது; படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் உடம்பையும் தலையையும் மறைத்தவாறு பைக்கில் பறக்கிறார். இல்லை என்றால் கண்ணை மறைக்கும் கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு அலைகிறார். மற்ற சில காட்சிகளில் கண்களிலோ முகத்திலோ எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் நடித்து அசத்துகிறார். சோகம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, பயம், கோபம், காதல் என்று எல்லா விதமான உணர்ச்சிகளையும் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமல் அருமையாக நடித்துள்ளார் அஜித். பல வருட அனுபவம் அவருக்குக் கை கொடுத்துள்ளது.

இந்தப் படத்தின் கதை மிகவும் அருமை. ஆனால் கதை என்ன என்று சொல்லத் தான் தெரியவில்லை. ஏனென்றால் கதை புரிய, படத்தை இரண்டு மூன்று முறையாவது பார்க்கவேண்டும். ஆனால் ஒரு முறைக்கு மேல் இப்படத்தைப் பார்க்கும் “வலிமை” நமக்கு இல்லை.

அனல் தெறிக்கும் வசனங்கள்; உணர்ச்சிமயமான வசனங்கள். நடிகர்களின் உச்சரிப்பு மிக அற்புதம். அந்தக் கால சிவாஜி, எஸ்எஸ்ஆர் கூட இவர்களுக்கு அருகில் வர முடியாது.

படத்தில் வரும் வில்லன் பயங்கரமான வில்லன்; கதிகலங்க வைக்கும் வில்லன்.

யாருடைய நடிப்பையும் குறை சொல்ல முடியாது. எல்லாரையும் விட அஜித் மிகவும் அருமையாக நடித்துள்ளார். அவர் எப்படி நடித்து உள்ளார் என்பதை இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன்.

“நாங்க வேற மாதிரி” என்ற ஒரு பாடல்; பாடல் வரிகளைப் படிக்கும்போது கவிஞர் கண்ணதாசன் மீண்டும் உயிரோடு எழுந்து வந்து எழுதி இருப்பாரோ என்று தோன்றுகிறது. நல்ல கருத்தாழம் மிக்க பாடல்.

இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டால் போதாதா? வேலைக்குப் போக வேண்டுமென எதிர்பார்க்கலாமா? அப்படியே வேலை இல்லை என்றால், காதலிக்கக் கூடாதா? வேலையில்லாத பட்டதாரிக்குப் பெண் கொடுக்க மறுப்பது கொடுமையில்லையா? இத்தனை அநியாயங்கள் நடக்கும்போது வேலையில்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கொலை செய்யவும், போதைப்பொருட்கள் விற்பதைத் தவிரவும், பைக்கில் பறந்து சென்று பெண்களுடைய நகைகளைப் பறிப்பதைத் தவிரவும் வேறு என்ன செய்யமுடியும் என்ற அருமையான கருத்தை முன் வைக்கும் நல்ல படம்.