மகான்

கண்டிப்பாக இந்தப் படத்தில் நடித்ததற்காக துருவ் விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கும். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்குச் சரியான உதாரணம் இவர். என்ன அருமையான நடிப்பு?

கம்பீரம் என்ன? மிடுக்கு என்ன? ஆக்ரோஷம் என்ன? அவருடைய ஸ்டைல் தான் என்ன? ரஜினிகாந்த் ஸ்டைல் எல்லாம் இவருக்கு முன்னாடி எதுவுமே இல்லை. இவருக்கு தமிழ்த் திரைப்பட உலகில் மிகப்பெரிய

எதிர்காலம் உள்ளது. ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்.

இந்தப் படத்தின் இசை மற்றும் பாடல்கள் செம! இசை ஞானம் உள்ளவர்கள் மட்டும்தான் பாட வேண்டுமா என்ன? அல்லது நல்ல குரல்வளம் உள்ளவர்கள் மட்டும் தான் பாட வேண்டுமா? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம்; அதையே பாடலாக்கலாம் என மிகப்பெரிய புரட்சி செய்துள்ளார் இசையமைப்பாளர்.

பிரமாதம் எதுவும் இல்லை. நடுரோட்டுக்கு போங்க! எதிர்ல வர்ற நாலஞ்சு பேர வாய்க்கு வந்தபடி திட்டுங்க!

அவங்க உங்கள பதிலுக்கு திட்டுவாங்க! அத உங்க பிரண்டு யாரையாவது ரெக்கார்ட் பண்ண சொல்லுங்க! அப்புறம் இந்த இசையமைப்பாளர் கிட்ட கொடுங்க. அடுத்த படத்துல அதை இவரு பாட்டா போட்டுடுவாரு.

காந்தியவாதி மாட்ட அடிக்கிற மாதிரி மகன அடிக்கிறாரு! பிறந்த தேதியை மாற்றி பொய் சொல்லி சர்டிபிகேட் வாங்கறாரு. இப்படித்தான் மகான் என்ற தலைப்புள்ள இந்தப் படம் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து நமக்குப் புரிந்திருக்கலாம்! இது எவ்வளவு வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட படம் புரட்சிப் படம் என்று.

இந்தப் படத்தில் மொத்தம் ஒரு 250 -300 பேரு சாகறாங்க. நிமிஷத்துக்கு ஒரு தடவை காந்தி காந்தி என்று எல்லாருமே வசனம் பேசறாங்க. இவங்க சொல்ற காந்தி மகாத்மா காந்தியா வேற காந்தியான்னு நமக்கே சந்தேகம் வருது.

விக்ரமும் துருவும் சேர்ந்து ஆடுற ஒரு டான்ஸ் இருக்கு. அதை மட்டும் நீங்க பார்த்தீங்கன்னா…இந்தப் பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் போட்டி நடனமாடினார்கள் இல்லையா அதை பற்றி இனிமேல் யாரும் பேசவே மாட்டீங்க…கலக்கலான டான்ஸ்!

டைரக்ஷன், இசை, எல்லா நடிகர்களுடைய நடிப்பு அப்படின்னு ஏகப்பட்ட தேசிய மாநில விருதுகள் அள்ளிக் கொடுக்கக் கூடிய அருமையான படம். பாக்காம விட்டுடாதீங்க.