கொடிச்சி

சங்கப்பாடல்களால் இப்போது என்ன பயன்? அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துகள் இக்காலத்திற்குப் பொருந்துமா?

ஏன் பொருந்தாது? சங்கப்பாடல்களை இக்காலத்திற்குத் தகுந்தவாறு கதைகளாகவும் எழுத முடியும் என்பதை அழகாக நிரூபித்துள்ளார் “கொடிச்சி” என்ற புத்தகத்தை எழுதியுள்ள திருமதி வித்யா சுப்ரமணியம் அவர்கள்.

“ஆங்கிலேயர்கள் ஒரு தவறான எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். படித்த இந்தியர்கள் அனைவரும் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாக!” – இப்படி வீரமாக முழங்கிய சுதந்திரப் போராட்ட வீரரின் கதையை ஒரு சங்க இலக்கியப் பாடல் மூலமாக விளக்கியுள்ளார். மிகவும் அற்புதமாக உள்ளது.

இன்னொரு கதை! நமது இதயத்தைப் பிளக்கிறது! நெஞ்சை உருக்குகிறது! கப்பலோட்டிய தமிழரின் கதை. அந்தக் கதைக்குப் பொருத்தமாக புறநானூற்றில் ஒரு பாடல் இருப்பதை இதுவரை யாராவது யோசித்துப் பார்த்து இருப்போமா?

நற்றிணையில் உள்ள ஒரு பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பசலை என்று ஒரு கதை. அதிலே காதல் எவ்வளவு அருமையாக எடுத்தாளப்பட்டுள்ளது.

கலித்தொகையின் அடிப்படையில் பரிகாரம் என்றொரு கதை. இக்காலத்திற்கு மிகவும் பொருத்தமான கதை. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய கதை என்பேன்.

காதல் வயப்படும் மகளுக்கும், அவளுடைய தாய்க்கும் நடக்கும் மௌனமான பாசப்போராட்டம் எவ்வளவு அருமையாக பாரம் என்ற கதையில் கூறப்பட்டுள்ளது?

குறுந்தொகையில் உள்ள ஒரு சுவாரசியமான பாடலுக்கு ஏற்றவாறு ஒரு கதை. நீரோட்டம் என்று அதற்குப் பெயர். எவ்வளவு மென்மையான காதல்! சுவாரஸ்யமான கதை.

கைக்கிளை – பாராட்ட வார்த்தையே இல்லை! மிகவும் அருமையான காதல் கதை. மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறது.

இப்புத்தகத்தின் கதைகளில் மாந்தர்களில் பெரும்பாலோனோர் மிகவும் நல்லவர்களாக இருப்பது அற்புதம்.

அனைத்துக் கதாபாத்திரங்களும் நல்லவர்களாக இருந்தால் கதையில் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இந்த அருமையான புத்தகத்தைப் படித்தால் நம்முடைய எண்ணம் தவறு என்பதை நாம் அறியலாம். கதாசிரியரின் திறமை வியப்புக்குரியது.

இப்படி 20 நேர்த்திமிகு கதைகள். இந்தக் கதைகளுக்குத் திருமதி கீதா சுதர்சனம் எழுதியுள்ள சுருக்கமான சுவாரஸ்யமான முன்னுரைகள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

அடுத்த தொகுப்பு எப்போது வெளிவரும்? காத்திருக்கிறேன்!