அண்ணாத்தே

அண்ணன் தங்கை பாசத்துக்குப் பாசமலரையும் கிழக்குச் சீமையையும் உதாரணம் காட்டுபவர்கள் இப்படத்தைப் பார்த்தால், அந்தப் படங்களை முற்றிலுமாக மறந்து விடுவார்கள். சமீபத்தில் வெளியான உடன் பிறப்பே படம் மட்டுமே இத்துடன் ஒப்பிட முடியும்.

அண்ணாத்தே அண்ணாத்தே பாடல் 70-80 வயது முதியவர்களைத் துள்ளி எழுந்து ஆடச் செய்யும் இசை.

பாசக்காரா, நேசக்காரா, வேலைக்காரா, மச்சக்காரா, மாயக்காரா – அடடா எவ்வளவு அழகான பட்டப் பெயர்கள்.

நெத்தியில வேர்வை வேணும்….விரல் பத்து இருக்குது – நம்மைச் சிந்திக்க வைக்கும் வரிகள்.

வீட்டுக்குள்ளும் கூலாக கூலிங் க்ளாஸ் மாட்டிக் கொண்டிருக்கும் தலைவர் ஸ்டைலே தனி. எத்தனை பேர் சண்டைக்கு வந்தாலும் எகிறிப் போய் விழுகிறார்கள். ஆனால் தலைவர் கண்ணாடி மட்டும் ஆடாது. அசையாது. மாஸ் தலைவா.

படத்தின் பலம் வசனங்கள். தலைவர் ஒரு வசனம் பேசினால் வில்லன் திருந்தி விடுகிறார். இன்னொரு வசனம் பேசினால் நாயகி இவரைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். செம ஸ்பீடு.

“தங்கச்சிக்கு எப்போ கல்யாணம்” – இந்த ஒரு வசனத்தில் நாயகன் தங்கைக்குக் கல்யாண ஏற்பாடு செய்து விடுகிறார்.

“நாளைக்கு புருஷனுக்கு உடம்பு சரியில்லைன்னா நீ டாக்டர் கிட்டதான் போகணும். அதுக்கு அந்த டாக்டர் மாப்பிள்ளையே கிடைச்சா?” – ஏன் உலகத்தில் இதுவரை யாருமே இப்படி யோசிக்கவில்லை?

பத்து வருடங்களுக்கு முன்பு காதலித்த முறைப் பையன் இப்போது தங்களைத் திருமணம் செய்ய தயாரானால் அதற்காக தங்கள் கணவன்மார்களைக் கொலையோ விவகாரத்தோ செய்து கொள்ள தயாராக இருக்கும் வேடத்தில் முன்னாள் கதாநாயகிகள். விரசமில்லாத நகைச்சுவை. தலைவர், வசனங்களுக்கு அடுத்து இப்படத்தின் மிகப் பெரிய பலம் நகைச்சுவை.

கல்கத்தாவில் போலீஸ் என்பதோ சட்டம் ஒழுங்கு என்பதோ கிடையாது என்ற உண்மையை உலகுக்கு உரக்கச் சொன்ன முதல் படமிது.

இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் படம் பார்த்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. டாக்டரைப் பார்க்க போக வேண்டும். இதற்கு மேல் டைப்படிக்க சக்தியில்லை.