நீதி ஈரறுபது

மொழி பெயர்ப்பு எளிதானதில்லை. இரண்டு மொழிகளை அறிந்தவர்கள் அனைவராலும் சரி வர மொழி பெயர்க்க இயலாது. அதுவும் செய்யுள்களை (சுலோகங்களை) மொழி பெயர்ப்பது சாதாரணமானதில்லை. மேலும், அவற்றைச் சந்தம் மாறாத மரபுக் கவிதைகளாக இயற்ற பேராற்றல் பெற்ற சிலரால் மட்டுமே நிறைவாகச் செய்ய முடியும். அத்தகைய சிலரில் ஒருவரே திவாகரத் தனயன். ஆயிரத்து ஆண்டுகள் பழைமை வாய்ந்த வடமொழியில் இயற்றப்பட்ட செய்யுள்களை “நீதி ஈரறுபது ” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழுலகுக்குத் தொண்டு புரிந்துள்ளார்.

தமிழரான சுந்தர பாண்டியனாரின் வடமொழிப் புலமையும், செய்யுள்களில் பொதிந்துள்ள கருத்துகளும், சில செய்யுள்களில் தோன்றும் அவருடைய நகைச்சுவை உணர்வும் வியக்கத்தக்கவை.

யாரும் அவ்வளவாக அறிந்திராத சுந்தர பாண்டியனாரின் வடமொழி நூலை திவாகரத்தனையனுக்கு அறிமுகப்படுத்தியும், செய்யுள்களுக்கு எளிய மொழியில் விளக்கங்கள் அளித்தும் தொண்டாற்றியுள்ள திரு. சங்கர நாராயணன் போற்றுதலுக்குரியவர்.

இந்த நூலைத் திறம்பட திறனாய்வு செய்துள்ள சந்தக்கவி இராமசுவாமி அவர்களுடைய கட்டுரை, எப்படித் திறனாய்வு செய்ய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துத் தந்துள்ளது.

அழகாக அச்சிட்ட கம்ப்யூப்ரிண்ட் குழுமத்தினருக்கு வாழ்த்து. இப்படிப்பட்ட சிறந்த நூல்கள் அச்சிடப்படும் வகையில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால் இதில் கவனம் செலுத்தியிருப்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

ஆசிரியர் தம்முடைய செய்யுள்களைப் பல தலைப்புகளின் கீழ் பகுத்துள்ளார். மூல நூலில் அது கிடையாது. ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருளும் அருமையான மேல் விளக்கமும் கொடுத்துள்ளார். சில மூலச் செய்யுள்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்களை யாத்துள்ளார்.

திவாகரத்தனயன் யாத்துள்ள அனைத்துச் செய்யுள்களுமே அருமை. இவற்றில் எதை எடுக்க, எதை விடுக்க?

ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகியும் மாந்தர்கள் மாறவில்லையே என்ற எண்ணத்தின் அடிப்படையில், சில செய்யுள்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

சில செய்யுள்கள் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

சில செய்யுள்களைப் படிக்கும் போது நம்முடைய எண்ணங்களுடன் புலவர் ஒத்துப் போகிறாரே என இறுமாப்பு தோன்றலாம். வேறு கவிதைகளை வாசிக்கும்போது நம்மைப் பற்றியே நாம் சுய பரிசோதனை செய்யும்படியான எண்ணம் தோன்றலாம்.

சிலவற்றில் கவிஞரின் வார்த்தை விளையாட்டை ரசிக்கலாம்.

ஆக மொத்தம், ஒவ்வொரு கவிதையையும் ரசித்து ரசித்து அனுபவிக்கலாம்.

தமிழை விரும்பும் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய வாழ்க்கைக்குப் பயன்படும் ஆலோசனைகளுடன் கூடிய ஆகச் சிறந்த நூல்