சீதோபதேசம்

வால்மீகி ராமாயணத்தில், இக்காலத்தில் அதிகம் பேசப்படாத பல அருமையான பகுதிகள் உண்டு. தசரதன் ராமனுக்குச் சொன்ன அறிவுரைகள், சுபத்திரை இலக்குவனிடம் சொன்ன வார்த்தைகள், வாலி ராமனிடம் கேட்ட கேள்விகள், ராமனுக்கும் பரதனுக்கும் நடந்த சம்பாஷணை என அடுக்கிக் கொண்டே போகலாம். அத்தகைய அறியப்படாத ஓர் அருமையான பகுதியைத் தான் சீதோபதேசம் என்ற பெயரில் திவாகாரத்தனயன் இயற்றியுள்ளார்.

கம்பன், வால்மீகி எழுதிய மூல ராமாயணத்தை மொழி பெயர்க்கவில்லை. மாறாக அதை அடிப்படையாக வைத்துத் தன்னுடைய கற்பனையைக் கலந்து கம்ப ராமாயணத்தைப் படைத்தான். அதைப் போல வால்மீகியின் எழுத்தை மூலமாக வைத்து ஆசிரியர் தம்முடைய கற்பனையைக் கலந்து இந்நூலைப் படைத்துள்ளார். கம்பன் சொல்ல மறந்த முக்கியமான பகுதியைத் தந்து தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார், இந்நூலாசிரியர். இந்நூலைப் படிக்கும் எவரும் கம்பன் ஏன் இப்பகுதியைத் தொடவில்லை என எண்ணாமல் இருக்க இயலாது.

இருபத்து மூன்று அதி அற்புதமான செய்யுள்கள். நற்றமிழ் அறிந்தோர் அனைவரும் இன்புறுவது உறுதி. நாம் வாழும் காலத்தில் இத்தகைய திறன் படைத்த கவிஞர் வாழ்கிறார் என்பதே வியப்பைத் தருகிறது.

கவிஞரின் சொல்லாடலும் செய்யுள்களின் பொருட்சுவையும் மனத்தைக் கொள்ளையடிக்கின்றன.

உதாரணத்துக்குச் சிலவற்றைப் பார்ப்போம்.

ராமனைக் கொண்டல வண்ணா என அழகாக விளிக்கிறார். வேறொரு செய்யுளில் கரியவ எனப் பெயரிடுகிறார். ராமனின் செவிகளைச் செவ்விய செவிகள் என வர்ணிக்கிறார். இந்திரனை விருத்திரன் வைரி என்கிறார். சீதையை மெல்லியல் என்கிறார்.

“நரனறி யாதார் வரினும் நடுக்கறீர், நொவ்வல் விட்டீர் ” – என்ன அருமையான வரிகள்.

“நடந்தது நாடற்று நம் தந்தை சொல்லுக்காய் ” , “வாளெல்லாம் ஏதற்கு ” மற்றும் “தகைவுளார் இவரென்று ” எனத் தொடங்கும் செய்யுள்கள் அற்புதம்.

“கானகம் முன்னிருந்த ” எனத் தொடங்கும் செய்யுள் ராமனை மட்டுமன்றி நம்மையும் சிந்திக்கச் செய்கிறது.

நம்மைவிட மேலானவர்களிடம் நமது கருத்தை நயமாகவும் பணிவாகவும் எப்படிச் சொல்வது என்கிற பெரிய வாழ்க்கைப் பாடத்தையும் இந்நூல் நமக்குக் கற்பிக்கிறது.

சந்தக்கவி இராமசுவாமி அவர்களின் விளக்கவுரை நம்முடைய சிந்தனையை மேலும் தூண்ட உதவுகின்றது.

தேவநாதன் அவர்களின் ஓவியங்கள் நூலுக்குப் பலம் சேர்க்கின்றன