Master

படத்தில் பல திடுக்கிடும் காட்சிகள். ஏன் இந்தக் காட்சி, இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என நாம் குழம்ப, அதற்குள் அடுத்த திடுக்கிடும் காட்சி தோன்றி முந்தைய காட்சியை மறக்கடிக்கிறது. இந்தப் புதுமையான யுக்திக்கு இயக்குனரைப் பாராட்டுவோம்.

வாழ்க்கையில் ஒரு முறையும் அழாத விஜய் முதல் முறையாக அழும் காட்சியில் நம்மையும் அழ வைக்கிறார். படத்தில் காமெடி இல்லை என்ற குறையை “வாத்தி” என்ற பாடலில் விஜய்யின் நடனத்தின் மூலமும், இன்னொரு பாடலுக்கு விஜய் சேதுபதி போடும் ஆட்டத்தின் மூலமும் இயக்குனர் போக்குகிறார்.

கதாநாயகி பேசும் வீர வசனத்தால் விஜய்க்கு மட்டுமில்லை நம்முடைய நாடி நரம்பும் துடிக்கிறது. உணர்வுப்பூர்வமான நடிப்பு. தமிழ்த் திரையுலகம் இந்நடிகையைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

வில்லனுக்குக் கன்னத்தில் மரு இருக்க வேண்டுமென்ற யதார்த்தம் – இயக்குனரின் கவனத்துக்குப் பலே சொல்ல வைக்கிறது.

சிறு வயதிலிருந்து சுவரில் கை முஷ்டியைக் குத்தி குத்தி, வலது கையில் மட்டும் அசுர பலத்தை வைத்துள்ள வில்லன், நாயகன் கை வளையை யார் அணிந்தாலும் அவர்களுக்கு வீரம் உண்டாவது, அந்தக் கை வளையை வைத்து வில்லனின் கையை உடைக்கும் முறை – எல்லாவற்றிலும் புதுமை கொட்டிக் கிடக்கிறது.

கையில் பக்கெட்டைத் தூக்கும் நாயகனிடம், எதற்கு இது எனும் கேள்வி கேட்கப்பட, “எனக்கு பக்கெட் லிஸ்ட் இருக்கு” எனும் பதில், கே. பாலசந்தரின் டைரக்டர் டச்சை நினைவுப்படுத்துகிறது.

வசனம், நடனம், பாடல் எனப் பல வகைகளில் சுலபமாக எல்லாரையும் திருத்தும் நாயகனின் திறமை பிரமிக்க வைக்கிறது.

க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஹாலிவுட் படங்களுக்கு இணை.

இன்னும் சொல்வதற்கு நிரம்ப உள்ளன. இதற்கு மேல் எழுத முடியவில்லை. கை வலிக்கிறது. நீங்களே போய்ப் படத்தைப் பார்த்து பிரமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.