சமீ்ப காலத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைப் பற்றி இவ்வளவு விரிவாக யாரும் தொகுத்ததாகத் தெரியவில்லை. இது நல்ல முயற்சி. ஆசிரியர் இதைத் தொகுக்க எடுத்துக்கொண்ட சிரத்தையும் கடும் உழைப்பும் பாராட்டுக்குரியவை. இங்கே உள்ள சிற்றாலயங்களைப் பற்றியும் சிற்பங்களை அறிந்து கொள்ளவும் இந்நூல் பெரிதும் உதவுகிறது. இந்தக் கையேட்டுடன் கோவிலை நாம் வலம் வந்தால் நமக்குத் தோன்றக் கூடிய சந்தேகங்களுக்கு உடனுக்குடன் தெளிவு பிறக்கும்.
இந்த நூல் கோவிற் கட்டடக் கலை, பல்லவர்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றைப் பற்றி பெரிதாக அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவும் நோக்கம் கொண்டு தொகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனால் கலைச் சொற்களின் பயன்பாட்டைப் பெருமளவில் குறைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அவற்றை முகவுரையில் அறிமுகம் செய்து வைத்திருக்க வேண்டும். மேலும் பல புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பல புகைப்படங்களில் நேர்த்தி குறைவு. வல்லினம் மிகுமிடங்கள் மிகா இடங்கள் தொடர்பான தவறுகளையும் “சுவற்றில்” என்பதைப் போன்ற சொற்பிழைகளையும் தவிர்த்திருக்கலாம்.