சார்வாகன் கதைகள்

நான் பிறப்பதற்குப் பல வருடங்கள் முன்பாகவே பல கதைகளைச் சார்வாகன் எழுதியுள்ளார். இவருடைய சிறுகதைகளையும் குறு நாவல்களையும் நற்றிணை பதிப்பகம் பத்து வருடங்களுக்கு முன்பாகவே “சார்வாகன் கதைகள்” என்ற பெயரில் தொகுத்துள்ளது. ஆனால் சார்வாகனைப் படிக்கும் வாய்ப்பு இப்போதுதான் எனக்குக் கிடைத்தது.

எந்த எழுத்தாளரின் சாயலும் இன்றி தனித்துவமான நடையை உடையவர் சார்வாகன். தம்முடைய கருத்துகளை மக்களிடம் திணிக்கும் முயற்சி இவரிடம் இல்லை. அறிவுரை கூறும் பாணியோ, தம்முடைய மேதைமையைப் பறைசாற்றும் போக்கோ இவருடைய எழுத்தில் காணோம். உணர்ச்சிவசப்பட்டு கூவிக் கூப்பாடு போட்டு தாமும் அழுது படிப்பவர்களையும் அழ வைக்கும் போக்கும் இவரிடம் இல்லை. இவருடைய எழுத்துப் பாணி இயல்பானது, எளிமையானது; மெனக்கிடல் இல்லாத நகைச்சுவையுடன் கூடியது; நாம் தினம்தினம் பார்ப்பதையும், கேட்பதையும், நினைப்பதையும் பற்றியது; அந்நியத்தன்மை இல்லாதது. தோழமையுடன் கதை சொல்லும் பாட்டனாரையும், சுவாரசியமாகப் பல விஷயங்களையும் பகிரும் உண்மை நண்பனையும் ஒரு சேர உணர வைக்கின்றன இவருடைய கதைகள்.

கதைகளைப் போலவே இவருடைய முன்னுரையும் சுவாரசியமாக உள்ளது. “பிரியா விடை” நாம் அனைவரும் வாழ்க்கையில் கண்டிப்பாக நினைக்கும், வினவும் அல்லது அச்சப்படும் சம்பவத்தைப் பற்றியது. அவருடைய எழுத்தின் மூலம் நம்மை அக்கதையுடன் பயணிக்கச் செய்கிறார். “முடிவற்ற பாதை” எளிமையான நடையில் விறுவிறுப்புடன் கூடிய கதை. “ஓடிப் போனவன்” – ஒரே கதாபாத்திரம் மட்டும்; அது பேசிக் கொண்டே போகும் சுவாரசியமான நடை. “புதியவன்” – என்னவொரு நவீன முயற்சி? “பிராயச்சித்தம்” யாரும் யோசிக்காத, யோசிக்கத் தயங்கும் கோணத்தில் புராணச் சிறுகதை. “சாப விமோசனம்” – அற்புதம். “மணியைப் பார்த்தேன்” – நிதர்சனம். “சந்துருவின் பொன் மான்” – சுவாரசியமான கற்பனையிலேயே வாழும் காதல். “யானையின் சாவு” – தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. “நகுலச் சக்கரவர்த்தியின் யோகம்” – இவர் எவ்வளவு சுலபமாக நகைச்சுவையை அள்ளி வீசுகிறார் – சற்றும் மெனக்கெடலோ போலித்தனமோ இல்லாமல். “அமர பண்டிதர்” – பொக்கிஷம்.

சார்வாகனின் ஒவ்வொரு கதையையும் விலாவாரியாகச் சிலாகித்து எழுதலாம். எல்லாமே அற்புதமான கதைகள்.