மதராஸ் மாந்தர்கள் – 1 – கடவுளின் சாயல்

“திருநீர்மலை போயிருக்கியா?”

“ம்…..ஏன் போகாம? நம்ம க்ளாஸ் கமலாவுக்கு அங்கதான் கல்யாணாம் ஆச்சு…”

“……”

“ராஜு அண்ணா தெரியுமில்ல…அவர் கூட யாருக்கும் தெரியாம அங்கதான் கல்யாணாம் பண்ணார்.”

“திருநீர்மலை கோவில்ல இருக்கற பெருமாளை தரிசனம் பண்ணியிருக்கியா”

“அதுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்”

இருபது வருடங்கள் முன்புவரை இக்கோவிலுக்கு நான் மட்டும் தான் முறை தவறாமல் சென்று தரிசிக்கிறேனோ என்ற சந்தேகமும் சந்தோஷமும் எனக்கிருந்தன. நடந்தான், நின்றான், இருந்தான், கிடந்தான்….நான்கு கோலங்களில் பெருமாள்….ராமனையும் சேர்த்தால் ஐந்து கோலங்கள். நீர்வண்ணன், நீல் முகில் வண்ணன், அலர்மா மங்கை – என்ன அருமையான தமிழ்ப் பெயர்கள். எத்தனை முறை போனாலும் அலுக்காத கோவில். இந்தக் கோவிலைப் பாடிய திருமங்கை ஆழ்வார் ஆறு மாதம் காத்திருந்து வழியில் இருந்த நீர் வடிந்த பிறகு இம்மலைக்கு வந்து தரிசனம் செய்துள்ளார் என்பது உபரிச் செய்தி.

ஆனால் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன் – திருமங்கை ஆழ்வார் ஆறு மாதம் தங்கிய இடத்தில் அவருக்கு ஒரு கோவில் உள்ளதென்பதை. தெரிந்த பிறகு போகாமலிருக்க முடியுமா…..அடுத்த ஞாயிறு தனியாகக் கிளம்பினேன். இன்னுமொரு மலைக்கோவில் போய், அங்கிருந்து இந்த இடத்தைத் தேடி வந்தேன்.

வெயிலில் மலை ஏறியது அலுப்பாக இருந்தது. கூகிள் படுத்தியது. சுற்றி சுற்றி ஒரே இடத்துக்கு அழைத்து வந்தது. அதிசயமாகக் கண்ணில்பட்ட ஒருவரிடம் விசாரித்தேன். காடு போன்ற இடம்….சற்று தூரம் போனவுடன் ஹைதர் காலத்து கார் ஆட்டம் கண்டது. பார்த்தால் ஹனுமான் தூக்கிய சஞ்சீவி மலை அளவுக்குப் பெரிய கற்கள். குருட்டுத் தைரியத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டே போனேன். வண்டிக்கு கீழிருந்து டமாரென பெரிய சத்தம். தூரத்தில் ஒரே ஒரு குடிசை தெரிந்தது. அங்கே வண்டியை நிறுத்தினேன்.

கீழே இறங்கிப் பார்த்தேன். ஆயில் ஸம்ப் உடைந்துவிட்டது. தரையெங்கும் பெட்ரோல் .வெள்ளம். விழுப்புண் வாங்கிய என் காரைப் பரிதாபமாகவும் பெருமையாகவும் பார்த்தேன்.

எப்படியும் வந்த காரியத்தை முடிக்காம போகக் கூடாது. காரை அப்புறம் பார்த்துக்கலாம்.

இந்த கற்கள் நிறைந்த குவாரி பகுதியில் தூரத்தில் ராட்சச அளவு லாரிகள் அலைந்து கொண்டிருந்தன. ஒரே ஒரு குடிசை மட்டுந்தான் இருந்தது. என் கார் சத்தத்தைக் கேட்டு ஒரு வயாதான பெண்மணியும் அவருடைய பேரனாக இருக்கக்கூடும் – ஒரு சிறுவனும் வெளியே வந்தனர். தோற்றத்தில் வறுமையின் சாயல் நன்றாகத் தெரிந்தது.

கோவில் எவ்வளவு தூரம் இருக்கும். அயர்ச்சி…..காருக்கு ஏற்பட்ட பாதிப்பினால் வந்த அதிர்ச்சி….எப்படி திரும்பப் போகிறோம் என்ற பயம்….பார்த்தே தீர வேண்டுமென்ற வெறி…..என்ன செய்ய….டிசைன் ப்ராபளம். துணைக்கு யாராவது வந்தால் நன்றாக இருக்கும்.

“தம்பி….என்னால அவ்வளவா நடக்க முடியல….கூட வரமுடியுமா……இங்க ஒரு கோவில் இருக்காமே…மலை மேலே….அதுவரைக்கும்….வழி காட்ட முடியுமா?”

தயக்கத்துடனும், மறுத்துவிடுவான் என்ற நம்பிக்கையுடனும் கேட்டேன். ஆனால் ஒப்புக் கொண்டான்.

அரை மணி நேர மலையேற்றம்…சிறிய மலைதான்….பாதை சரியாக இல்லை…நான் இருந்த நிலையில் தட்டுத் தடுமாறி ஏறினேன். சிறுவன் பொறுமையாக துணையாக வந்தான். வழியும் காட்டினான்.

“இது என்ன கோவில்னு தெரியுமா உனக்கு? அதோ எதிர்ல தூரத்துல இருக்கற மலை என்னன்னு தெரியுமா உனக்கு?” எதுவுமே தெரியாது என்றாலும், எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பில் ஒரு கேள்வி.

“அதெல்லாம் தெரியாது சார். வாரத்துக்கு ஒருதடவை பூசாரி வந்து பூஜை பண்ணுவாரு. மூணு மாசத்துக்கு ஒருக்கா ஷூட்டிங் ஏதாவது நடக்கும்.”

கோவில் சிறிய கோவில் தான். ஆனால் அழகிய ஆழ்வாரும் அவருடைய இல்லாளும். தரிசித்தேன்….ஆழ்வாருடைய பக்தியையும் பொறுமையையும் மெச்சினேன். மனம் குளிர ஆழ்வாரின் பார்வையில் தூரத்தில் தெரிந்த நீர்வண்ணன் விமானத்தையும் தரிசித்தேன்.

முப்பது நிமிடங்கள்….கார் இருந்த இடம் வந்தடைந்தேன். கார் இன்னும் பரிதாபமாக பெட்ரோல் கக்கிக் கொண்டிருந்தது.

பையனுடைய வேலை முடிந்தது. பர்ஸிலிருந்து நூறு ரூபாய் எடுத்தேன். அவசரமாக மறுத்தான். அதிகமாக எதிர்பார்க்கிறானோ? இரு நூறு எடுத்தேன்.

“அதல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார். நீங்க பத்திரமா காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்புங்க….வண்டி கிளம்பலைன்னா நான் யாரையாவது கூட்டிட்டு வந்து உதவி பண்றேன்.”

மீண்டும் ஒரு முறை தூரத்தில் திருநீர்மலையைப் பார்த்தேன். கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை. அருகில் நின்றிருந்த சிறுவனைப் பார்த்தேன். கபடமில்லாத புன்முறுவலில் கண்டேன் – கடவுளின் சாயல்.