எம்.ஜி.ஆர். மறைந்துவிட்டார். மார்பில் அறைந்துகொண்டு வாய்விட்டுச் சத்தமாக அழுதாள். மேட்டுத் தெருப் பக்கமாக இருந்த குளத்தங்கரைப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையரைத் தவிர வேறு யாருமில்லை அவளைச் சமாதானப்படுத்த. முப்பது வருடங்களில் அவள் யார் சாவுக்கும் அழுததில்லை. அழுவதற்கும் அவளுக்கு யாருமில்லை. அப்பனையும் ஆத்தாவையும் பார்த்த நினைவு அவளுக்கில்லை. சொந்தங்களின் அரவணைப்பில் – இல்லையில்லை, வெறுப்பில் – எப்படியோ வளர்ந்து முப்பது வருடங்களைக் கடந்துவிட்டாள். அவள் பிறந்து வளர்ந்த சிறிய பொன்மார் கிராமம்தான் அவளுடைய பெரிய உலகம். எம்.ஜி.ஆர். தான் அவளுடைய இறைவன். இறைவனுக்கு மரணமுண்டா? அவளால் நம்ப முடியவில்லை.
எம்.ஜி.ஆரை விட அவளுக்குப் பிடித்தவள், இவளுடன் படித்தவள்- அதே ஊரைச் சேர்ந்த அவளுடைய உயிர்த்தோழி. மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்த அவளை முப்பது ஆண்டுகளாகியும் நட்பு பாராட்டும் ஒரே ஜீவன். சிவன் கோவில் தெருவில் பெரிய மாளிகையில் தோழி வீடு. இவளோ வயல்வெளியிலும் சவுக்குத் தோப்பிலும் கூலிக்கு வேலை செய்பவள். சமுதாய அல்லது பொருளாதார வித்திசாயங்களைப் பொருட்படுத்தாமல் இவளை நேசித்த அன்புத் தோழி. அவளும் இவளைப் பிரிந்துவிட்டாள். மூன்று வருடங்கள் முன்பு கல்யாணம் செய்து கொண்டு வடக்கே மதராஸ் என்று ஏதோ ஒரு பெரிய ஊருக்குக் குடிபுகுந்து விட்டாள்.
மதராஸ் போய்த் தோழியைப் பார்க்க இவளுக்கு ஆசைதான். ஆனால் அது எப்படிச் சாத்தியம். அது எவ்வளவு தூரமோ? தெற்கே மாம்பாக்கம், போலச்சேரி – இவள் இருக்கும் பொன்மார் – வடக்கே மூலச்சேரி, மதுரப்பாக்கம். அவ்வளவுதான் இவள் உலகம். அதிகப்பட்சம் நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை இவள் வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகள் புண்ணியத்தில் காரணை சந்தைக்குப் போனதுண்டு.
மதுரப்பாக்கத்துக்கு வடக்கே அடர்ந்த காடு. யாரும் தனியாகப் போவதில்லை. கொலை, வழிப்பறிக் கொள்ளை தவறாமல் நடக்கும். சில தைரியமான ஆண்கள் கூட்டமாக சைக்கிளில் போவார்கள். இல்லையென்றால் இரண்டு மூன்று வண்டிகள் கட்டிக்கொண்டு கூட்டமாகக் குடும்பத்தோடு போவார்கள். அப்படி யாரோ குடும்பத்துடன் எடுபிடி வேலை செய்வதற்காக காடுதாண்டி இரண்டே இரண்டுமுறை இவள் பயணித்ததுண்டு. தாம்பரம் என்று பெரிய ஊர். அதைத் தாண்டி வெகு தூரத்தில் குரோம்பேட்டை என்று வாயில் நுழையாத பெயருள்ள ஒரு ஊரில் வெற்றி சினிமா கொட்டகை. அங்கேதான் எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தையும், விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி படத்தையும் அவள் கண்டு ரசித்தாள்.
சிவப்பு மல்லி படத்தில் “எரிமலை எப்படி பொறுக்கும்” என்ற பாடலில் எரிமலையைப் போல நெருப்பைக் கக்கும் விஜயகாந்தின் சிவந்த கண்கள். பொன்மார் சுற்று வட்டாரத்தில் எந்தத் தவறு நடந்தாலும் தட்டிக் கேட்க அஞ்சாத அந்த வீர இளைஞனுடைய கண்களும் அப்படித்தான் இருக்கும். விஜயகாந்தைப் போல கரிய தோற்றம்; யாருக்கும் பயப்படாத துணிவு. எம்.ஜி.ஆரை விடவும், உயிர்த்தோழியை விடவும் இவள் உள்ளத்தைக் கவர்ந்தவன் அவன்தான். பொன்மாரின் கதாநாயகன்.
இவளுக்கு அவனைப் பிடிக்கும். அது அவனுக்குத் தெரியும். அவனுக்கும் இவளைப் பிடிக்கும். அது இவளுக்குத் தெரியும். ஆனால் இருவரும் பேசிக் கொண்டதில்லை. பார்வை பரிமாற்றங்கள் மட்டுமே. காதல் என்பது சுகமான அனுபவம். அதை முழுவதுமாக உணர்ந்து ரசித்து அனுபவிக்கவேண்டும். விரைவாகப் பேசித் தீர்த்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணமோ என்னவோ, நமக்குத் தெரியாது.
எம்.ஜி.ஆர். இறந்து இரண்டு மாதங்கள் இருக்கும். மரங்கள் சூழ்ந்த அழகிய குளத்தின் கரையில் அமைந்த சோழர் கால முருகநாதீஸ்வரர் கோவில் வாசலில் ஒரு மோட்டார் வண்டி இருப்பதை அவள் கண்டாள். காரில் யார் இந்தக் கிராமத்துக்கு வந்தது என அவள் யோசித்து முடிப்பதற்குள் பதில் கிடைத்தது. இவளுடைய உயிர்த்தோழி. மூன்று வருடங்கள் கடந்து விட்டன, இருவரும் சந்தித்து.
தாழ்வு மனப்பான்மை இவளைத் தோழியை நெருங்கவிடவில்லை. ஆனால் இவளைப் பார்த்த மாத்திரத்தில் தோழி ஓடி வந்து இவளைக் கட்டிக்கொண்டாள். இருவரும் கண்ணீர் சிந்தினர். மரத்தடியில் ஆற அமர்ந்து கதை பேசினர்.
பொன்மாரில் மூன்று வருடங்களில் பிறந்தவர்கள், இறந்தவர்கள், கல்யாணமாகிப் போனவர்கள், மழைக்கால வெள்ளம், கோவில் திருவிழாக்கள், காட்டில் நடந்த வழிப்பறிகள் என இவளுக்குத் தெரிந்ததை எல்லாம் தோழியிடம் இவள் ஒப்புவித்தாள். ரஜினிகாந்த்தைப் பார்த்தது, உட்லண்ட்ஸில் சாப்பிட்டது, வண்டலூரில் வலம் வந்தது, செத்த காலேஜ் சென்றது, எம்.ஜி.ஆர். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது என்று பல புதிய விஷயங்களைத் தோழி சொல்ல சொல்ல வாயைப் பிளந்து கொண்டு இவள் கேட்டாள். தோழி சொன்னவற்றில் இவளைக் கவர்ந்தது மெரினா கடற்கரை. பீச் என்பார்களாம். உலகிலேயே இரண்டாவது கடற்கரையாம். எப்போதுமே அலை அடித்துக் கொண்டே இருக்குமாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர்தானாம். அலைகளில் கால்களை நனைத்தவாறு மணிக்கணக்கில் நின்றாலும் சிறிதும் சலிக்காதாம். மெரினா பீச் இவ்வளவு அருமையான இடமா? பொன்மாரில் குளங்களையும் ஏரிகளையும் பார்த்த இவள் இப்படி ஒன்றை இதுவரை கற்பனை செய்து பார்த்ததில்லை.
எம்.ஜி.ஆர்., உயிர்த்தோழி, மனங்கவர் காதலன், இவர்களுடன் நான்காவதாக இவளுக்குப் பிடித்த விஷயமாகக் கடற்கரை மாறிவிட்டது. இவளுக்கு பீச்சுக்குப் போக வேண்டும்….யார் அழைத்துச் செல்வார்கள்?
பொன்மாரில் ஒரு பாழடைந்த கட்டடம். பெருமாள் கோவில் என்று கிராமத்தில் சொல்வார்கள். மகிழ்ச்சியோ வருத்தமோ அவள் அங்கே சென்று தனிமையில் அமர்ந்து அனுபவிப்பது வழக்கம். அப்படித்தான் மழை அடித்து ஓய்ந்த ஒரு இளம் மாலைப் பொழுதில் அங்கே அமர்ந்திருந்தாள். அவன் வந்தான். இன்றும் பார்வை பரிமாற்றம் தானா? இல்லை – இக்கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் குடிகொண்ட பெருமாளின் கருணை. இருவரும் பேசினார்கள் – முதல் முறையாக. அவள் இதுவரை அனுபவிக்காத அனுபவம். குற்றால அருவியில் குளித்தாலோ, மெரினா பீச்சில் காற்று வாங்க நின்றாலோ எந்த அளவு மகிழ்ச்சி உண்டாகுமோ அதைவிடவும் அதிகம்.
நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!
அடுத்த ஆறு மாதங்கள் பொன்மார் அவளுக்குச் சொர்க்கபுரி ஆனது. அவன் மணிக்கணக்காகப் பேச, அதை இவள் ரசிப்பாள். “உனக்கு என்ன வேணும்”….ஒவ்வொரு முறையும் அவன் கேட்கும் கேள்விக்கு இவளுடைய பதில் “எனக்கு பீச்சுக்கு போவணும்….கூட்டிட்டு போ”.
அன்றைக்கு ஒருநாள் அவன் கேட்டான் -“நாம கண்ணாலம் கட்டிக்கிலாமா?” இதற்குத் தானே காத்திருந்தேன் காதலா…கால் விரல்களால் மண்ணில் கோலமிட்டுச் சம்மதித்தாள்.
“நம்மவூரு சிவன் கோவில்ல பண்ணிக்கிலாமா? இல்லாங்காட்டி மாம்பாக்கத்துலயோ காரணையேலோ ஏதாவது மண்டபத்துல பண்ணிக்கிலாமா?”
இதற்கு அவள் மண்ணைக் கீறவில்லை. வாய் திறந்தே பதிலுரைத்தாள் – “பீச்சுல கண்ணாலம் பண்ணிக்கலாம்”
“என்ன….பீச்சுலயா?”
“ஆமாம்…மெரினா பீச்சுல”
இனி வாழ்க்கையில் புயல் அடிக்காது. வசந்தம் மட்டுமே வீசும். அந்த அப்பாவிப் பெண் அப்படித்தான் நினைத்தாள். பாவம், அவள் அப்பாவி.
அவனுக்கு விபரம் தெரியவில்லை. மெட்றாஸில் அதுவும் பீச்சில் எப்படி கல்யாணம் செய்வது? இரண்டு மூன்று முறை இதைப் பற்றி விசாரிக்க மதராஸ் போய் வந்தான்.
அன்றும் அப்படித்தான் அவன் சைக்கிளில் காடு வழியாகப் போகும்போது, மாட்டு வண்டியில் வந்த ஒரு இளம் ஜோடியிடம் நான்கு போக்கிரிகள் வம்பு செய்து கொண்டிருந்ததைப் பார்த்தான். கட்டிய மனைவியை அம்போவென விட்டுவிட்டு இளங்காளை ஓட்டம் பிடிக்க, அந்த அபலையைக் காப்பாற்றும் பொறுப்பை இவன் ஏற்றுக் கொண்டான். ஒற்றை ஆளாக நான்கு பேரிடம் போராடி யாரென்றே தெரியாத அந்தப் பெண்ணைக் காப்பாற்றினான். ஆனால் பலமான தாக்குதலுக்கு உண்டாகி ரத்தம் கசிந்தான். அந்த வழியாக இரண்டு வண்டிகள் வந்ததால் கயவர்கள் ஓடிவிட்டனர். இவனையும் அந்த அபலையையும் வண்டியில் ஊருக்குக் கூட்டி வந்தனர். அந்தப் பெண் தப்பினாள். ஆனால் இவன் உயிர் பிழைக்கவில்லை.
எம்.ஜி.ஆர். மறைந்தபோது அழுது ஆர்ப்பாட்டம் செய்த இவள், காதலன் மரணத்துக்கு ஏனோ அழவில்லை. உயிரற்ற அவன் உடலைப் பார்க்கவும் போகவில்லை. இவளைப் பொறுத்தவரை அவன் மெட்ராஸில் இருக்கிறான். ஒருநாள் வந்து இவளை பீச்சுக்கு கூட்டிக்கொண்டு போய் திருமணம் செய்து கொள்வான்.
காலம் உருண்டோடியது. பொன்மாரில் ஒரு கல்லூரி முளைத்தது. அதன் விளைவாக வீதிகளும், அவற்றைப் பயன்படுத்த வண்டிகளும் வந்தன. விவசாயம் நின்று போனது. நெல் விளைந்த பூமியில் மாடிகள் வளர்ந்தன. முப்பது அடி மரங்களின் இடத்தை முன்னூறு அடி கட்டடங்கள் ஆக்கிரமித்தன. வடக்கே தூரத்தில் இருந்த மெட்ராஸ் கிட்டத்தட்ட இந்தக் கிராமத்தை நெருங்கிவிட்டது. ஆனால் அவள்மட்டும் மாறவில்லை. காட்டைத்தாண்டி போகவில்லை. அன்று கட்டிளங்குமரியாக இருந்த இன்றைய பொன்மாரின் மூதாட்டி. இன்றும் அவள் வாய் எப்போதும் முணுமுணுக்கும் வார்த்தைகள் – “பீச்சுக்குப் போகணும்”.