மதராஸ் மாந்தர்கள் – 3 – கிருஷ்ணப்ப அக்ரஹாரத்து கிருஷ்ணன்

இன்று ஓ.எம்.ஆர்., ஈ,சி,ஆர், என்று மெட்ராஸ் பெருத்து விட்டது. இன்னும் பெருத்துக் கொண்டே போகிறது. பல லட்சக்கணக்கான புது மதராஸ்வாசி….இல்லையில்லை சென்னைவாசிகளின் நகரம் அடையாரையும் திருவான்மியூரையும் கூட தொடுவதில்லை. அவர்களுக்கு நகரம் எங்கிருந்து ஆரம்பித்தது என்ற அறிவும் கிடையாது, அதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருக்காது. ஆனால் என்னைப் போன்ற மதராஸின் பூர்வ குடிகளுக்கு நகரின் எந்த மூலையில் இருந்தாலும் ஜார்ஜ் டவுனை மறக்க முடியாது.

அப்படித்தான் ஒரு நாள் ஏதோ பழைய நினைவுகள் – ஏனோ பழைய நினைவுகள். நாம் முன்பு குடியிருந்த இடங்களைப் போய்ப் பார்க்கலாம் என்று கிளம்பினேன். ஜார்ஜ் டவுன்! இன்றைய புது மாநகர வாசிகளுக்கு இப்படி ஒரு இடம் மெட்ராஸில் இருப்பதே தெரியாது. ஆனால் இதுதான் உண்மையான மெட்ராஸ்! ஜார்ஜ் டவுனில் கொண்டித் தோப்பு என்று ஒரு பகுதி. அந்தக் கொண்டித்தோப்பில் கிருஷ்ணப்ப நாயக்கன் என்று ஒரு தெரு. அந்தத் தெருவுக்குக் கிருஷ்ணப்ப அக்ரஹாரம் என்று இன்னொரு பெயர் அந்தக் காலத்தில் இருந்தது. அடியேன் பிறந்து, முதல் வேலையில் சேரும்வரை அங்கேதான் வாசம்.

அந்தக் காலத்தில், அந்தத் தெருவிலேயே மிகவும் பிரம்மாண்டமான கட்டடம் ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கி – தெருவின் ஓரத்தில் இருந்தது. இப்போதும் இருக்கிறது – என்ன வித்தியாசம் என்றால் அந்தக் கட்டடம் தான், இப்போது அந்தத் தெருவிலேயே இருக்கக்கூடிய குறுகிய கட்டடம்.

இந்தப் பகுதி வானளாவ வளர்ந்து விட்டது அந்தக் காலத்தில் இந்தத் தெருவில் எல்லாம் ஒண்டு குடித்தனங்கள் தான். இப்போது நவீன கால அடுக்குமாடி தீப்பெட்டிக் குடியிருப்புகள். அந்தக் காலத்தில் இந்தத் தெருவில் ஓடிப் பிடித்து விளையாடுவோம். நட்ட நடு ரோட்டில் கிரிக்கெட் விளையாடுவோம். பெயருக்கு இரண்டு மூன்று வண்டிகள் மட்டும் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் போகும். எனக்கு நன்றாக நினைவுள்ளது. சிறுவயதில் எனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு கடந்து போகும் வாகனங்களை எண்ண ஆரம்பித்தேன். நூறு வாகனங்கள் எண்ணும்வரை வீட்டுக்குள் போவதில்லை என வீர சபதத்துடன் காலையில் பத்து மணிக்கு உட்கார்ந்தவன், மதியம் மட்டும் முப்பது வண்டிகளைக் கூட தாண்ட முடியவில்லை. இப்போது நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. இந்த வீதியில் நடந்துபோவதே கடினமாகிவிட்டது. நாம் வாழ்ந்த இடம் இதுதானா என நம்ப முடியாத அளவுக்கு வாகன நெரிசல் – பெரும் மாற்றங்கள். .

சரி! பழைய நினைவுகள்…! நான் எதையோ சொல்ல நினைத்து எதையோ சொல்லிக் கொண்டே போகிறேன். எங்கிருந்து ஆரம்பித்தேனோ அதற்கு வருகிறேன். நாம் வாழ்ந்த பகுதியைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே. ஒரு முறை போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கொண்டித் தோப்புக்குப் போனேன் – ஒரு ஞாயிற்றுக்கிழமையில்.

சென்னையிலேயே நீண்ட தெரு எனப்படும் தங்கசாலையில் ஓர் அழகிய கோவில் உண்டு. பஜனைக் கூடமாக இருந்து, பிறகு சுமை தாங்கி ராமர் கோவிலாக ஏற்றம் பெற்ற ஆலயம். அந்தச் சுமை தாங்கி ராமர் உண்மையிலேயே அந்தப் பகுதி வாசி மக்களுடைய கஷ்டங்களை, சுமைகளைத் தாங்குபவர் தாம். என்ன அழகு! இந்த ராமனின் அழகுக்கு ஈடாக அந்த அயோத்தி ராமன் கூட இருக்க முடியாது என்பது என்னைப் போன்ற கொண்டித்தோப்பு பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

நான் இருந்த பகுதியைச் சுற்றிப் பார்ப்பது இந்த உன்னதமான கோவிலில் இருந்து ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில், அந்தக் கோவிலை நோக்கி நடந்தேன். அப்போது அந்தக் கோவில் வாயிலில் தான் அவனைப் பார்த்தேன். கிருஷ்ணன்… கிருஷ்ணப்ப அக்ரஹாரத்து கிருஷ்ணன்! என்னுடைய வயது தான்! அவனை எனக்கு நான் பிறந்ததிலிருந்தே தெரியும். நானும் அவனும் ஒரே தெருவாசிகள். இப்போது அவனைப் பார்ப்பதற்கு என்னை விட கிட்டத்தட்ட 10-15 வருடங்கள் மூத்தவனாகத் தெரிகிறான். மெலிந்த தோற்றம் – ஒட்டிய கன்னங்கள் – தளர்ந்த நடை – சோகமயமான முகம் – எதையோ பறிகொடுத்தவன் போன்ற கண்கள் – ஏன் இப்படி ஆகிப்போனான்? பார்க்க வேதனையாக இருந்தது. “கிருஷ்ணா” என்று பெயர் சொல்லி அழைத்தேன். இரண்டு மூன்று முறை அழைத்ததற்கு அப்புறம் தான் – காதில்பட்டதோ அல்லது காதில் வாங்கிக் கொண்டானோ – திரும்பிப் பார்த்தான். எத்தனை வருடங்கள் கழித்துப் பார்க்கிறோமே! முகத்தில் உற்சாகம், ஆச்சரியம், அல்லது ஆனந்தம் ஏதாவது தோன்ற வேண்டுமே! எதுவுமே இல்லை. பெயருக்கு இரண்டு மூன்று வார்த்தைகள் குசலம் விசாரித்துவிட்டுச் சென்றுவிட்டான் கிருஷ்ணன்! கிருஷ்ணப்ப அக்ரஹாரத்து கிருஷ்ணன்!

இன்று “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று பலமுறை அழைத்தும் உற்சாகம் இல்லாமல் திரும்பிப் பார்த்த இவன், 40 வருடங்களுக்கு முன்பாக கிருஷ்ணப்ப அக்ரஹாரத்தில் உள்ள சத்திரத்தில், நாற்பது நாள் மகாபாரத உபன்யாசம் செய்து கொண்டிருந்த பாலகிருஷ்ண சாஸ்திரிகள் உணர்ச்சி மிகுதியில் “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று அந்தப் பரந்தாமனை அழைக்க, கதை கேட்டுக் கொண்டிருந்த இந்த ஐந்து வயது அழகுப் பாலகன் “இதோ வந்துட்டேன் மாமா” என்று ஓடிப் போனான் மேடையை நோக்கி. கதையைக் கேட்க உட்கார்ந்து இருந்த 200 பேர்களும் பாலகிருஷ்ண சாஸ்திரிகளைப் பார்ப்பதை விட்டுவிட்டு, இந்தப் பாலகிருஷ்ணனைப் பார்த்தனர். அந்த மேல் உலக கிருஷ்ணனே கீழே இறங்கி வந்து விட்டானோ என்று அனைவரும் அதிசயக்கும் வண்ணம் அழகிய குழந்தை. அந்தக் கிருஷ்ணன் தான் இப்படி மாறி விட்டான். வேதனையாகத்தான் உள்ளது.

கிருஷ்ணன் என்னுடைய உயிர் நண்பன். அந்தக் காலத்தில் நான் அவனிடம் சொன்னது உண்டு.

“கிருஷ்ணா! உங்க அம்மா உனக்கு கிருஷ்ணன்னு தப்பா பேரு வச்சிட்டாங்க! நியாயமா உன்னுடைய குணத்துக்கு உன்னோட பேரு ராமன் தான் இருக்கணும்.”

அது வேடிக்கையான வார்த்தைகள் இல்லை. உண்மையாகவே அவன் அந்த ராமாயணத்து ராமனைப் போன்றவன். அனைத்து விஷயங்களிலும் கண்ணியம் இருக்கும். மறந்தும் புகை பிடிக்காதவன்; மது அருந்தாதவன்; யாரிடமும் தரக்குறைவாக பேசாதவன்; பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்பவன்; கடவுள் பக்தி உண்டு; பல மொழிகளிலும் தேர்ச்சி உண்டு; தானாக எதையும் கற்றுக்கொள்ளும், புரிந்து கொள்ளும் அறிவுடையவன். அவன் என்னிடம் அவ்வப்போது சொன்னதுண்டு – இப்போதும் நன்றாக ஞாபகம் உள்ளது.

” லஞ்சம் கொடுக்காமல் இந்த காலத்துல இருக்க முடியாது அப்படின்னு சில பேர் சொல்றா! வருமான வரி எல்லாம் முழுசா கட்டணும்னு அவசியம் இல்ல- அதெல்லாம் சாத்தியமே இல்லை அப்படின்னும் சில பேர் சொல்றா! ஒரு சின்ன தப்பு கூட பண்ணாம இந்த காலத்துல வாழவே முடியாதுன்னு நிறைய பேர் சொல்றா! அதெல்லாம் ரொம்ப தப்பு. அவங்களுக்கு தப்பே பண்ணாம நியாயமா வாழ தெரியல- திறமை இல்ல. இல்லன்னா அப்படி வாழ இஷ்டம் இல்லை அப்படிங்கிறது தான் உண்மை. எந்த ஒரு சின்ன தப்பும் பண்ணாம எந்த காலத்திலேயும் யாராலயும் வாழ முடியும்”.

“வால்மீகி ராமாயணத்துல பாலகாண்டத்தில் வால்மீகி நாரதர் கிட்ட சில கேள்விகள் கேட்பார். ஒரு முழு அத்தியாயம் முழுக்க – ஒரு நல்ல ஆண்மகன் யார் என்ற கேள்வி! அந்த வர்ணனை அப்படி போகும் – நல்லவன், வல்லவன், தாய் தந்தையர் பேச்சைக் கேட்பவன், மனைவியிடம் நன்றாக நடந்து கொள்பவன், நண்பர்களிடம் நல்ல நட்பைப் பாராட்டுபவன், மக்களைச் சிறந்த முறையில் ஆள்பவன், எல்லோரிடமும் மரியாதையாக நடந்து கொள்பவன், கடவுளை நிந்திக்காதவன், தான தர்மங்கள் புரிபவன், மனைவியைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காதவன் – இந்த மாதிரி ஒரு நீளமான வர்ணனை! இத்தகைய குணங்கள் உடையவன் யாரவது இருப்பானா அப்படின்னு வால்மீகி கேட்க ,நாரதர் ராமாயணக் கதைய சுருக்கமா சொல்வாரு. ஒரு மனுஷன் ராமனை போல இருக்கணும். எல்லா நல்ல குணங்களும் இருக்கணும். வயசு ஆக ஆக தன் கிட்ட என்னெல்லாம் தப்பான குணங்கள் இருக்குன்னு பார்த்து ஆராய்ந்து ஒவ்வொன்னா களஞ்சுகிட்டே போகணும்!”

இது அந்தக் கிருஷ்ணன் என்னிடம் பலமுறை சொன்னது. எவ்வளவு நேரம் அவனுடன் உட்கார்ந்து பேசினாலும் நேரம் போவதே தெரியாது. இலக்கியம் பேசுவான்! வரலாறு பேசுவான்! ராமாயணம், மகாபாரதம், புராணங்களைப் பற்றி பேசுவான்! கம்யூனிசத்தைப் பற்றி அலசுவான்! அரசியலைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பான்! இத்தனையும் எங்கே படித்தான், யாரிடம் கற்றான்! தெரியாது! எதிலுமே தெளிவான பார்வை உண்டு! நியாயமான எண்ணங்கள் உண்டு! நல்லவன் – அறிவாளியும் கூட. அவன் அறிவாளி – அதனால்தான் அவனுக்கு சுலபமாக வேலை கிடைக்கவில்லை. கடவுள் அவனுக்கு எந்த அளவுக்கு அறிவையும் குணத்தையும் கொடுத்தாரோ அந்த அளவுக்கு பணத்தைக் கொடுக்கவில்லை – செல்வத்தைக் கொடுக்கவில்லை. பரம ஏழை! கிருஷ்ணப்ப அக்ரஹாரத்தில் ஒரு ஒண்டுக்குடியிருப்பில் தன்னுடைய விதவைத் தாயாருடன் வாழ்ந்து வந்தான். மிகச்சிறிய வயதிலேயே அவனுடைய தந்தை இறந்து விட்டார். எப்படியோ படித்தான். ஆனால் படித்தவுடன் வேலை கிடைக்கவில்லை. வறுமையிலும் நேர்மையைச் சற்றும் கைவிடாத ஓர் அதிசய பிறவி தான் அந்தக் கிருஷ்ணன்.

இவனுக்கு 22-23 வயதிருக்கும் அப்போது. அடுத்தத் தெரு ஆயலூர் முத்தையா முதலி தெரு. அங்கே தாத்தாச்சார்யாவிடம் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டு வந்தான், அந்தச் சமஸ்கிருத வகுப்பில் ஒரு பெண்! பெயர் ராதா! அவள் ஒரு பேரழகி! பேரழகி என்றால் யாரும் தவறான நோக்கத்தில் காணத் துடிக்கும் பேரழகி இல்லை. ஒரு தெய்வீகமான அழகு. அவளை யார் பார்த்தாலும் வணங்கத் தோன்றும். கை கூப்ப தோன்றும். அப்படிப்பட்ட அபூர்வமான தெய்வீக அழகு.

அந்த ராதையும் இந்தக் கிருஷ்ணனும் ஆத்ம நண்பர்களானார்கள். நட்பு காதலாக மலர்ந்தது. காதல் என்றால் அதுதான் ஓர் உண்மையான தெய்வீகக் காதல் என்பேன். தொடுதல் கிடையாது – – தவறான வார்த்தைப் பிரயோகங்கள் கிடையாது. எந்தவிதமான அத்துமீறலோ அசட்டுத்தனமோ அறவே கிடையாது. இவர்கள் சந்திக்கும் இடங்கள் – கூட்டமே இல்லாத கிருஷ்ணாங் குளத்துச் சிவன் கோவில், தங்க சாலைத் தெரு மலைக்கோவில், அல்லது ஆயலூர் முத்தையா முதலித் தெருவில் இருக்கும் செங்கல்வராயன் கோவில். (செங்கல்வராயன் கோவிலில் இவர்கள் இருவரைத் தவிர அந்தச் செங்கல்வராயன் மட்டும்தான் இருப்பான் என்பது உபரிச் செய்தி.) அப்படி இவர்கள் என்ன பேசுவார்கள் என்றால், வால்மீகி ராமாயணத்தையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பீடு செய்வார்கள் – திருக்குறளை ஆராய்ச்சி செய்வார்கள் – பாரதியார் கவிதைகளை ஒன்று விடாமல் ஒருவர் இன்னொருவருக்குப் படித்துக் காட்டுவார்கள்! இதுதான் இவர்களுடைய சம்பாசணைகள்! இந்த ஒரு காதல் தெய்வீகக் காதலோ இல்லையோ மிகவும் வித்தியாசமான காதல். காமம்தான் காதலுக்கு அடிப்படை என்று சொல்லித் திரிபவர்களுக்கு இந்த ராதா கிருஷ்ணர்கள் முட்டாள்களாகத் தெரியக்கூடும்.

நான் கடைசியாகக் கிருஷ்ணனைப் பார்த்தது அந்தக் காலக்கட்டத்தில்தான். அதன் பிறகு ஊர், மாநிலம், நாடு எல்லாம் மாறி, மீண்டும் ஆதி சென்னைக்கு மிகவும் தூரத்திலுள்ள இன்றைய சென்னைவாசியாகி விட்டபிறகு தான் மீண்டும் இங்கே வருகிறேன். இந்தக் கோலத்தில் கிருஷ்ணனைப் பார்க்கிறேன். ராதா என்ன ஆனாள்? கிருஷ்ணனுக்கும் ராதாவுக்கும் திருமணம் நடந்ததா? எத்தனை பிள்ளைகள்? அடடா….எதையுமே கேட்காமல் விட்டுவிட்டோமே? மீண்டும் அவனை எங்கே பார்ப்பேன்?

நடக்கவும் முடியாத இந்தப் பகுதியின் பத்து மாடிக் கட்டடங்களில் எங்கே போய்க் கிருஷ்ணனைத் தேடுவேன்? எனக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? ம்ஹூம்….தெரு முனையிலுருந்த ஜீவகாருண்ய அம்மன் கூட மாறிவிட்டாள். பழைய சிலை கலை நயத்துடன் இருக்கும். அம்மனை நேரில் தரிசித்ததைப் போல…

அதிர்ஷ்டம் என்னைக் கை விடவில்லை. 40 வருடங்குளுக்கு முன்பாக இருந்த அந்தத் தையல் கடை அதே இடத்தில் இருந்தது. அந்தக் காலத்தில் ஒரு செளராஷ்டிரா மொழி பேசும் இளைஞர் நடத்திய கடை. எனக்கும் கிருஷ்ணனுக்கும் அவருடன் நல்ல பழக்கம். அவர் பெயர்தான் மறந்துவிட்டது. அது என்னமோ…அந்தத் தையல் கடைக்காரர் கிழிந்த பனியனைத் தான் எப்போதும் அணிந்து இருப்பார். அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டும் தொழிலாளி குடிசையில் வாழ்வதைப் போல. அந்தக் கடையில் அந்தத் தையல்கார இளைஞரும் இருந்தார்….ஆனால் இப்போது அவர் முதியவராகி விட்டிருந்தார்.

இருபது நிமிடங்கள் கடும் முயற்சியால் அவரை நாற்பது வருடங்கள் பின்னோக்கிச் தள்ளி, நான் யாரென்பதை நினைவுப்படுத்தினேன். எதை எதையோ பேசிய பிறகு, ராதாவையும் கிருஷ்ணனைப் பற்றியும் அவரிடம் விசாரித்தேன்.

“அதை ஏன்பா ஞாபகப்படுத்தறே? இருவது வருஷ கதை. கிருஷ்ணனும் ராதையும் காதலிச்சுட்டுதான் இருந்தாங்க. கோவில் கோவிலா சுத்துவானுங்க ….அந்த பிள்ளையார் கோவில் எதிர்ல இருந்த லைப்ரரிக்கு ஒண்ணா போய் தடி தடியா பொஸ்தகம் படிப்பாங்க…நம்ம ஏரியா பசங்களுக்கு காசு வாங்காம டியூஷன் சொல்லி கொடுப்பாங்க. பாவம் கிருஷ்ணனுக்கு மட்டும் நல்ல வேலை கிடைக்கல….அந்த பொண்ணு நம்ம உமா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல டீச்சரா இருந்தா….எப்போ பார்த்தாலும் நாங்க எல்லாம் கிருஷ்ணன் அண்ட எப்போடா கண்ணாலம்னு கேட்டுக்கினே இருப்போம்….கம்முன்னு பூடுவான். ஒரு நாள் அந்த ராதா பொண்ணுக்கு உடம்பு முடியாம பூடுத்து….அது என்ன வியாதியோ…எனக்கு பேரு சொல்ல தெரியல….அவங்க அப்பா பாவம்….ரிக் ஷாலே கிரௌன் டாக்கீசண்ட இருந்த ஆஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு போனாரு…பாவம் கிருஷ்ணன்…கையிலே காசில்லாமா .ரிக் ஷா பின்னாடியே ஆஸ்பிடல் வரைக்கும் ஓடிப் போனான். என் கண்ணுலயே நிக்குது….ரெண்டே நாள் தான் – ராதா பொண்ணு பிழைக்கல….நெஞ்சு வெடிக்கறா மாதிரி கிருஷ்ணன் கதறினான். அதுக்கப்புறமா அவன் பெருசா பேசி நாங்க பார்க்கவே இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கான்…ரொம்பவும் ஒடிஞ்சு போயிட்டான்.”

இந்த வயதிலும் என் கண்ணீரை மறைக்க முடியவில்லை. வாய் விட்டு அழுதேன். அட இரக்கமில்லா செங்கல்வராயா, கிருஷ்ணன் சுமையைத் தாங்காத ராமா…இவனுக்கு ஏன் இப்படி? என் நெஞ்சு பொறுக்கவில்லை.

“ஆனா ஒண்ணு தெரியுமா…என்னதான் ஆனாலும்…இன்னும் கிருஷ்ணன் நேர்மையை மட்டும் கைவிடலை.”