மதராஸ் மாந்தர்கள் – 4 – மாதவர புராணம்

விலைவாசி ஏறிவிட்டது. இப்போதெல்லாம் ஐந்நூறு ரூபாய்க்கு சௌகார்பேட்டையில் வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. அதனால்தான் மாதவரத்துக்குக் குடிவந்தோம். இரண்டு அறைகள் – ஒரு சிறிய பால்கனி – மூன்று குடித்தனங்கள் மட்டுமே பயன்படுத்தும் பாத்ரூம் – கால் மணி நேரம் நடந்தால் பஸ் ஸ்டாண்ட். எங்கே கிடைக்கும் இத்தனை வசதிகள்?

மாதவரம் வந்த புதிதில் எனக்குப் புரியவில்லை – ஏன் இந்த ஊரில் யாரும் வெள்ளை வேட்டி அணிவதில்லை என்று. ஒரு மாதம் கழித்து நானும் வெள்ளை வேட்டி அணிவதை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் என்னிடம் இருந்த வெள்ளை வேட்டிகள் எல்லாம் காவி படிந்துவிட்டன. செம்மண் பூமி – ஆந்திராவிலிருந்து சென்னைக்குப் பறந்து செல்லும் லாரிகள் கர்ணனைப் போல யாரும் கேட்காமல் கொடுக்கும் வள்ளல்கள். எங்கள் இல்லங்கள் எங்கும் இவர்கள் தினம் தர்மம் செய்யும் செம்மண். நாங்கள் குடிக்கும் தண்ணீரோ, நாங்கள் வடிக்கும் கண்ணீரோ அனைத்திலும் செம்மண் கலந்திருக்கும்.

நான் மாதவரம் செல்கிறேன் என்பதைத் தெரிவித்ததும், என்னுடைய சௌகார்பேட்டை நண்பர்கள் கிண்டலடித்தனர் – “சின்ன பாண்டிச்சேரி போறீங்களோ! சரி சரி!”

எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது தான் புரிந்தது. அதுவும் மாதவரம் வரை தினம் பஸ்ஸில் வந்து இறங்கியிருந்தால், இவ்வளவு சீக்கிரம் ஞானோதயம் கிடைத்திருக்காது. நம்முடைய போக்குவரத்துத்துறை கைங்கரியத்தில், இது சென்னையின் பாண்டிச்சேரி என்பதைச் சீக்கிரமே புரிந்து கொண்டேன். மாதவரத்துக்கு அரை மணி நேரத்துக்கு பஸ் உண்டு எனச் சொல்லப்படுவதுண்டு. அது அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதியைப் போல. மாதவரத்துவாசிகளாகிய நாங்கள் கருட வாகனத்தில் அந்த பெருமாளே பூலோகத்தில் வந்து இறங்கினாலும் திரும்பிப் பார்க்க மாட்டோம், எங்கள் ஊர் பஸ் வந்துவிட்டால். அது எங்களுக்கு தற்காலிக மோட்சத்தைப் போல. மூலக்கடையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் நடராஜா சர்வீஸ் தான். அந்த முக்கால் மணி நேர நடைப்பயணத்தில் ஆண் பெண் என்ற பேதமில்லாமல் பல “குடி”மக்களைப் பார்த்து அளவளாவிக் கொண்டே வரலாம்.

அப்படித்தான் ஒருநாள் – மூலக்கடையிலிருந்து தபால் பெட்டி வரை வந்தேன். தபால் பெட்டி? – அது எங்கள் ஊரிலுள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தின் பெயர். நடுவில் சந்தேகம் கேட்க வேண்டாமே….கதை மறந்துவிடும். அப்படித்தான் தபால் பெட்டி வரை வந்தேன். அதற்கு மேல் காலெடுத்து வைக்க தைரியமில்லை. நான்கைந்து தெரு நாய்கள்! நமக்குப் பேய், அரசியல்வாதி என்று யாரைப் பார்த்தாலும் பயம் கிடையாது. ஆனால் நாய்களைக் கண்டால் குலை நடுங்கும். அப்போதுதான் வந்தாள் ஆபத்பாந்தவி. ஆபத்பாந்தவிக்குத் தமிழில் என்ன சொல்வார்கள்? ஆங்….மிகவும் முக்கியம். கதைக்கு வருவோம். ஆபத்பாந்தவி – அவள் பெயர் இருதய மேரி. தபால் பெட்டியிலிருந்து பழைய பஸ் ஸ்டான்ட் வரை துணைக்கு வந்தாள். அது என்னமோ தெரியவில்லை. நாய்கள் அவளைப் பார்த்தால் குலைப்பதில்லை; நெருங்குவதுமில்லை.

ஒரு நாள் – இரண்டு நாள் – ஒரு வாரம் – இரண்டு வாரம் – நான் தபால் பெட்டிவரை நடந்து வந்து நிற்பேன். செபாஸ்டியன் சர்ச்சுக்கு அருகிலிருந்து அவள் வந்து விடுவாள். எனது வீடு வரைக்கும் துணை வருவாள் என் உயிர் காக்கும் தோழி.

மாதவரத்தின் மனிதர்களையும், வாழ்வியலையும் எனக்குப் போதித்தது இருதய மேரி தான். தினம் தினம் புதுக் கதைகள் – புதுச் செய்திகள் – எல்லாம் மாதவரத்தைப் பற்றியது.

ஒரு நாள் நான் அவளைப் பற்றியே அவளிடம் கேட்டது என் தவறு. அவ்வளவு கலகலப்பான துணிவான பெண் அழுவதை நான் பார்க்க நேர்ந்தது. வருடா வருடம் நடக்கும் செபாஸ்டியன் சர்ச் திருவிழா ஒரு வாரம் மாதவரத்தைப் புரட்டிப் போடும். ஒரு சிறு கிராமத்தில் புது உலகைக் காணலாம். வண்ணங்கள் – மனிதர்கள் – தோரணங்கள் – வியாபாரிகள் – கொண்டாட்டங்கள் – குழந்தைகள் – களியாட்டங்கள் – காதலர்கள் – தேவாலயம் – பக்தி – இத்யாதி இத்யாதி ! அப்படி ஒரு திருவிழாவில் இந்த ஊரில் தொலைந்து போனவள் தானாம் இவள். அப்போது இவளுக்கு 3-4 வயதுதான். சொந்த தாய் – தந்தை – ஊர் – மொழி – மதம் – எதுவும் தெரியாது இந்த மாதவரத்துத் தேவதைக்கு.

அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம்….இத்தனை மாமபழ வகைகளையும் சுவைக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆனால் இவற்றைப் பற்றி நல்ல அறிமுகம் கிடைத்தது மாதவரத்தில்தான். மெட்ராஸ் முழுக்க மாம்பழங்கள் இங்கிருந்துதான் விற்பனைக்குப் போகும். ஆனால் இந்த ஊரில் ஏனோ மாம்பழங்களின் விலை எப்போதுமே குதிரை விலை – யானை விலை.

என்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக காலையில் ஆறு மணிக்குக் கிளம்பும் 170ஏ வில் தினம் பயணிப்பேன். என்னைத் தவிர பஸ்ஸில் எல்லோரும் வாட்ட சட்டமான கிராமத்துப் பெண்கள். பெரிய பெரிய கூடைகளில் மாமபழங்களைத் தூக்கிக் கொண்டு பயணிப்பர். என்னை மட்டும் வேற்று கிரகவாசி போல அனைவரும் பார்ப்பார்கள்.

அப்படித்தான் அன்றொரு நாள் காலையில் பஸ்ஸில் போகும்போது அவளைப் பார்த்தேன். கரு மேகங்களுக்கிடையே வெண்ணிலவைப் போல… – ம்ஹூம்…..எப்போதாவது சரித்திர கதை எழுதும்போது இந்த வாக்கியத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். கதைக்குப் போவோம். அவளைப் பார்த்தேன். மார்கழி மாதக் குளிரில் தாமிரபரணியில் முழுகினால் நெஞ்சு படபடக்க உடலெல்லாம் குளிர என்ன சுகம் கிடைக்குமோ அதை உணர்ந்தேன். மாம்பழங்களின் வாடையையும் தாண்டி அவளிடமிருந்து ஏதோ மலரின் சுகந்தம் என்னை மயக்கியது.

முகுந்தன் – நெற்றியில் பெரிய நாமத்தோடு அலைவான். சௌகார்பேட்டையில் அடுத்த வீட்டில் இருந்தவன். என்னைப் போல சமீபத்தில் மாதவரம் குடிவந்தவன். அவனை அன்று பெருமாள் கோவில் வாயிலில் பார்த்தேன். அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன்….இல்லையில்லை….அவன் பேசிக் கொண்டிருந்தான். நான் தப்பிக்க வழி பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் சொன்னான் – “மாதவ பெருமாள் ஊர் என்பதுதான் மாதவரம்னு ஆயிடுத்து….தெரியுமோ நோக்கு….சிவன் கோவில் இப்போதான் கட்டினா….பெருமாள் கோவில்தான் இந்த ஊருல முக்கியம். மூவாயிரம் வருஷம் ஆயிடுத்து இதைக் கட்டி.” “நீ இங்க வந்தே மூணு மாசந்தானேடா ஆச்சு…உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்.” கேட்க நினைத்தேன் – ஆனால் கேட்கவில்லை. அப்போது சுகந்தம் பரவியது….என்னை மயக்கிய அதே வாசனை….கண்களை அலையவிட்டேன்…..அவள் வந்து கொண்டிருந்தாள். மீண்டும் அந்தத் தாமிரபரணியில் குளித்த இன்பம்….

அதன் பிறகு ஒரே வாரத்தில் 3-4 முறை அவளைப் பல இடங்களிலும் பார்த்தேன் – மார்க்கெட், புற்றுக் கோவில், ராதாரவி மேடையில் யாரையோ திட்டிக் கொண்டிருந்த போது….உலகிலுள்ள அழகையெல்லாம் திரட்டிச் செய்த அழகு…அனைத்து மலர்களின் மணங்களையும் ஒருங்கிணைத்த நறுமணம்….ஆனால் முகத்தில் மட்டும் சொல்லத் தெரியாத சோகம்.

பெண்ணே! உன் சோகத்தை என்னிடம் சொல். தீர்த்து வைக்கிறேன். கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்……நல்ல வேளை! அவளிடம் எதையும் உளறி வைக்கவில்லை. என் மனதிலேயே உளறிக் கொண்டேன்.

அடுத்த தடவை இருதய மேரியைச் சந்திக்கும் போது இவளைப் பற்றி விசாரித்தேன். குறும்புப் பார்வை பார்த்தாள். அப்பெண்ணின் சோகத்தைப் பற்றியும் விவரித்தாள். இவளைப் பெற்றவுடேனேயே இவள் தாயார் இறந்து விட்டார். தந்தை திடகாத்திரமாகத் தான் இருந்தார். ஆனால் சிறுத்தை தாக்கி போன வருடம் இறந்து விட்டார். ஆம்….மணலி, மீஞ்சூர், மாதவரம் கிராமங்களில் அவ்வப்போது சிறுத்தை புகுந்துவிடும். அவள் சோகத்தின் ரகசியம் புரிந்தது. அவள் சோகத்தைத் துடைக்க நான் சபதம் ஏற்கும் முன்பு, மேரி இன்னொரு விபரத்தையும் சொன்னாள். அதனால் நான் சபதம் எதையும் எடுப்பதைத் தற்காலிகமாகத் தள்ளிப் போட்டேன்.

சினிமாவில் மட்டுமே நாம் பார்க்கும் காட்சிகளை மாதவரத்தில் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். சரமாரியாக தாக்கிக் கொள்வது, வீடு புகுந்து அடிப்பது, நடு வீதியில் ஒருவனை மரத்தில் கட்டிப்போட்டு ஒவ்வொருவராக வந்து அவனைத் தாக்குவது, இன்னும் பல. இப்போதெல்லாம் சினிமாவில் புதிதாக ஒரு வில்லன் நடிகர் வருகிறாரே – மன்சூர் அலிகான் என்று. அவரைப் போல பார்க்க பயப்படும்படியான உருவத்தில் ஓர் ஆசாமியை அடிக்கடி பார்த்துள்ளேன். அந்த ஆசாமிக்கும் அவனை விடவும் பயங்கரமான ஆசாமிகள் பலருக்கும் பாஸ் – அந்த நறுமண மங்கையின் தாய் மாமன் – இன்றைய கார்டியன்.

இதைக் கேட்டபிறகு அவளைப் பார்க்கும் போதெல்லாம், மூக்கில் நறுமணத்துடன், வயிற்றில் திகிலும் தோன்றியது. இரண்டு மாதங்களில் அவளை அவ்வூரில் காணவில்லை. எங்கே சென்றாள் என அவள் மாமனிடம் கேட்க ஆசைதான். ஆனால் கேட்கவில்லை. ஏன் கேட்கவில்லை என்று சொல்லித்தான் ஆக வேண்டுமா என்ன?

மாதவரம் பால் பண்ணையிலிருந்து மாதவரம் கிராமத்து வரும் வழி எங்கும் மாமரத் தோப்புகள். எப்போதாவது அவ்வழியாக வரும் போது சிறுத்தை பயம் வரும். அப்போதெல்லாம் அவளை நினைத்துக் கொள்வேன்.

மனதில் உற்சாகம் குறையும் போதெல்லாம் நான் போகும் இடம் சிவன் கோவில். அந்தக் கோவிலில் மூன்று பேர் மட்டுமே இருப்பார்கள். நான் – சிவன் – சிவலிங்கத்தின் கழுத்தில் பாம்பு. நான் சொன்னால் ஊரில் யாரும் நம்புவதில்லை. இத்தனை வருடங்களில் நாங்கள் யாரும் கோவிலில் பாம்பைப் பார்த்ததில்லையே என்கிறார்கள். கோவிலுக்குப் போனால்தானே? நல்ல பாம்பா எனக் கேட்கின்றனர். ஆம்! எத்தனை நாட்கள் நாங்கள் கோவிலில் சந்தித்துள்ளோம். என்னை இதுவரை சீண்டியதில்லை….தீண்டியதில்லை….நல்ல பாம்பு தான்.

அன்றொரு நாள் அப்படித்தான் கோவிலில் சிவனே என்று அமர்ந்திருந்தேன். அப்போது தான் சுதர்சனம் சார் வந்தார். இவரை நான் நூலகத்தில் பார்த்துள்ளேன். விகடன், குமுதம் படிக்க நான் போகும்போது, இவர் ஏதேதோ தடி தடியான புத்தகங்களை ஆராய்ந்து கொண்டிருப்பார்.

இவரைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். புழல் ஏரி நிரம்பி வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் இவர் பலருக்கும் தம்முடைய வீட்டில் இடம் கொடுப்பார்; மின்சாரக் கம்பி அறுந்து விழுந்திருக்கும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வு கொண்டு வருவார். ஊரிலுள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் படிப்பு சொல்லிக் கொடுப்பார்; அவ்வப்போது அன்ன தானம் செய்வார்.

இவர் என்ன கோவிலில் செய்கிறார் இன்று? எனக்கும் சிவனுக்கும் இடையில் இன்னொரு நந்தியாக? ஏதோ எழுதி காகிதத்தில் அங்கங்கே ஒட்டி கொண்டிருந்தார். அருகில் போய்ப் படித்தேன்.

“இது நந்திவர்ம பல்லவன் எழுப்பிய கோவில்.”

“8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது”

“பிற்காலத்தில் சோழர்களால் புதுப்பிக்கப்பட்டது”

“9ஆம் நூற்றாண்டு கல்வெட்டு உண்டு”

இப்படி என்னமோ எனக்குப் புரியாத வாக்கியங்கள்.

“இதெல்லாம் என்ன சார்? யாரிந்த பல்லவன்?”

“பல்லவன் தெரியாதா? சோழன், பாண்டியன், சேரன் – கேள்விப்பட்டதில்லையா?

“வீர பாண்டிய கட்டபொம்மன் தெரியும். அவர்தானே பாண்டியன். ராஜராஜ சோழன் தெரியும். ரெண்டுலேயும் சிவாஜி அருமையா நடிச்சிருப்… சார்….நான் பிசிக்ஸ் ஸ்டுடென்ட் சார். ஹிஸ்டரி நமக்கு வராது” (இவர் பிசிக்ஸில் எதையாவது கேட்டுத் தொலைக்கக்கூடாதே?”)

சற்று நேரம் என் முகத்தை உற்றுப் பார்த்தார்.

“இன்னைக்கு பல்லவன் யார், பாண்டியன் யாருனு கவலைப்படாத நீ ஒரு காலத்துல கோவில் கோவிலா போய் பக்கம் பக்கமா எழுதுவே…”

“சார்! வரமா சாபமா?”

“ரெண்டும் இல்ல! ஜோசியம்”

“அதெல்லாம் எனக்கெதுக்கு சார்! எனக்கு எப்போ நல்ல வேலை கிடைக்கும்னு பார்த்து சொல்லுங்க….அது போதும்!”

“உன் ஜாதகத்தை எடுத்துக்கிட்டு எங்க வீட்டுக்கு வா – அடுத்த சனிக்கிழமைக்குள்ள…”

“சரி சார்!”

“அடுத்த சனிக்கிழமைக்குள்ள…” மீண்டும் அழுத்தமாகச் சொல்லிவிட்டு போய் விட்டார்.

சனி போயிற்று….ஞாயிறும் போயிற்று….நான் அங்கே போகவில்லை. சோம்பல்….மறதி….திமிர்….என்னவோ! திங்களன்று ஒரு சம்பவம் நடந்தது. சாலை விரிவாக்கத்துக்காக நான் குடியிருந்த வீடு இடிக்கப்பட்டது. வீட்டுக்காரர் அரசு கொடுத்த எச்சரிக்கையைப் பற்றி எங்களிடம் சொல்லவில்லை. பாம்பிடமும் மேரியிடமும் ஊர் கதை பேசும் எனக்கு இப்படி நடக்கக்கூடும் எனத் தெரியவில்லை. பயத்தில் மூட்டை முடிச்சை எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக கிராமத்துக்குள் இன்னும் உள்ளே தள்ளி ஒரே ஒரு அறையை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை. மீண்டும் ஒண்டுக் குடித்தனம்.

இந்த ஒண்டுக் குடித்தனத்தில் எங்களுக்குத் துணையாகப் பல எலிகள். வெள்ளை எலிகள். மூஞ்சூறு என்பார்கள். வயிற்றுக்குச் சாப்பிடாமல் நான் சேர்த்து வைத்திருந்த கல்கி, சாண்டில்யன், சுஜாதா…..எல்லாம் எலிகளின் வயிற்றுக்கு உணவாகி விட்டன. சுஜாதாவை விடுங்கள்….ஜெயகாந்தன் எவ்வளவு கம்பீரமானவர். அவரையும் இந்த எலிகள் சின்னாபின்னமாக்கி விட்டன.

எலிகளை அடக்க எலிப் பொறியைத் தேடி ஒரு கடையைக் கண்டுபிடித்தேன்.

அந்தக் கடைக்காரர் சொன்னார் – “சார்! வெள்ளை எலி ரொம்ப அதிர்ஷ்டம். பொறில மாட்டிச்சுன்னா எங்கேயும் விட்டுடாதீங்க. என்கிட்டே குடுத்துடுங்க ப்ளீஸ்!”

அதிர்ஷ்டம் – அட! என் கஷ்டத்தில், சுதர்சனம் சாரிடம் என் ஜாதகம் காட்ட வருவதாகச் சொல்லியிருந்ததை மறந்து விட்டேனே!

அடுத்த நாளே கிளம்பினேன். சுதர்சனம் சார் வீடு திறந்தே இருந்தது. தயக்கத்துடன் “சார் சார்” எனக் குரல் கொடுத்துக் கொண்டே போனேன். நடுக்கூடத்தில் – மாலை போட்ட அவருடைய படம்.