மதராஸ் மாந்தர்கள் – 6 – தேனுபுரி

நான் பெரிய பக்திமானாக்கும்! ஞாயித்துக்கிழமை ஆச்சுன்னா சரபேஸ்வரர்….சனிக்கிழமை ஆச்சுன்னா நவகிரகம்…வெள்ளிக்கிழமைன்னா அம்மன்….இப்படியே ஒரு நாள் கூட விடமாட்டேன்……தெரியுமோ?

என்ன….வருஷத்துல அஞ்சாறு மாசம் பையனோட புளோரிடாலே இருக்குபோது மட்டும் கோவிலுக்கு லீவு விட்டுடுவேன்….ஆத்துலேந்தே சேவிச்சுப்பேன்.

இன்னிக்கு ஞாயிறு…..மாடம்பாக்கம் நம்ம ஆம்லேயிருந்து ரொம்ப பக்கம்….அடிக்கடி இந்த சிவன் கோவில்….என்ன பெயர்….ஆங்…..தேனுபுரீஸ்வரர்….அதுக்கு வந்துடுவேன்….இங்க ஒரு தூண்ல சரபேஸ்வரர் காட்சி தறார். அவரை தரிசனம் பண்ணிண்டு பிரசாதம் ஸ்டால்ல முறுக்கு நன்னாருக்கும்…அப்படியே பிரகாரத்துல உக்காந்து அதை சாப்பிட்டுத்தான் ஆத்துக்கு திரும்புவேன்.

இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிடுத்து. சரபேஸ்வரர் முன்னாடி நல்ல கூட்டம். ஆனா ஒரு பத்து பேர் தனியா நிக்கறாளே…என்னவா இருக்கும்? சத்த போய் பார்க்கலாம்.

யாரோ ஒரு பிள்ளையாண்டான். வெள்ளையும் சொள்ளையுமா இருக்கான்…ஏதோ ஹெரிடேஜ் அது இதுன்னு தத்து பித்துன்னு உளறறான். அத போய் இதுங்கல்லாம் கேட்டுக்கிட்டு நிக்குதுங்க….சரி, என்னதான் உளறுறான். நாமளும் சத்த கேப்போம்.

“இது பத்தாம் நூற்றாண்டுக் கோவில். கல்வெட்டு ஆதாரம் இருக்கு”

“கூர்ம சம்ஹார மூர்த்தி, வராஹ சம்ஹார மூர்த்தி – இதையெல்லாம் நல்லா கவனிச்சுப் பாருங்க”

“ஐந்து தலை ஆதி பிரம்மாவுடைய சிற்பம் அது”

“அம்மன் கையில மான் பாருங்கள்”

“தலையை தூக்கி பாருங்க….அஷ்ட திக் பாலர்கள் “

“முருகன் எப்படி அழகா மயில் மேல உக்காந்து இருக்கார் பாருங்க”

“சுப்பிரமணியர் எட்டு கை – யானை மேல உக்காந்து….இந்த மாதிரி சென்னைல எங்கயும் பாக்க முடியாது”

இந்தப் பிள்ளை சொல்றச்ச தான் நான் கவனிச்சேன்….இத்தனை வருஷம் கோவில் வந்தும் இத்த எல்லாம் பாக்காம விட்டுட்டோமே.

அதுக்கப்புறம் நான் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமையும் மாடம்பாக்கம் கோவிலுக்கு போகும் போதெல்லாம் அந்த பையனை பார்த்து இருக்கேன். எப்பவுமே ஒரு ஏழு எட்டு பேரு அவனை சுத்தி இருப்பாங்க. அவன் ஏதாவது கல்வெட்டு, சிற்பம், கோவில் கட்டிடக்கலை, இந்த மாதிரி எதையாவது பத்தி பேசிண்டு இருப்பான். கூடியிருக்கிறவங்க எல்லாம் ஏதாவது கேள்வியும் கேப்பாங்க. இவனும் சலிக்காம பதில் சொல்லுவான்.

நானும் அப்பப்ப அங்க போய் நின்னு கவனிக்க ஆரம்பிச்சேன். விஷயம் தெரிஞ்ச ஆளா தான் தெரியறான்.

வாஸ்தவமா சொல்லப்போனா நான் சின்ன வயசுல இருந்து ஒரு 60 வருஷமா இத்தனை கோவில்களுக்கு போயிருக்கேன். இவன் சொல்ற விஷயங்களை கேட்கும் போது தான் எனக்கு தோணுது- நாம ஏன் நிறைய விஷயங்களை உன்னிப்பாக கவனிக்கலன்னு. ஒரு கோவில்ல இத்தனை விஷயங்கள் இருக்கா.? நான் இத்தனை வருஷங்கள்ல பார்த்த எல்லா கோவில்களையும் திரும்பவும் பாக்கணும்னு எனக்கு புதுசா ஆசையே வந்துருச்சுன்னா பாருங்க.

யார் இந்த பையன்? எதுக்காக இப்படி தேனுபுரீஸ்வரர் கோவில்ல நின்னுகிட்டு வர்றவங்க போறவங்க கிட்ட எல்லாம் சிற்பங்கள பத்தி பேசிக்கிட்டு இருக்கான். ஒரு நாள் அவங் கிட்டயே விசாரிக்கலாம்னு அவன் கிட்ட போய் நின்னேன். எப்பவும் போல விலாவாரியா நாலஞ்சு பேரு கிட்ட சிலைகளை பத்தி விளக்கி சொல்லிக்கிட்டு இருந்தான்.

அதுக்கப்புறம் தனியா நின்ன என்ன பார்த்து “ஏதாவது கேள்வி இருக்கா சார்” அப்படின்னு கேட்டான்.

நான் சொன்னேன் “ஆமாம்பா கேள்வி இருக்கு. ஆனா அது கோவில பத்தி இல்ல! உன்ன பத்தி” அப்படின்னு.

“என்ன பத்தி என்ன சார் கேள்வி இருக்க போறது?”

“அம்பி! நீ யாரு? எதுக்காக இப்படி சனி ஞாயிறு ஆச்சுன்னா கோவிலுக்கு வந்து ஒரு மூணு மணி நேரம் 4 மணி நேரம் செலவழிச்சு எல்லாருக்கும் எதை எதையோ பத்தி பேசுறியே! என்ன காரணம்?”

“நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த கோவிலுக்கு முதல் முறையாக வரும்போது இந்த சிற்பங்கள் எல்லாம் பார்த்து அசந்து போயிட்டேன். இவ்வளவு அருமையான வித்தியாசமான சிற்பங்கள் சென்னையில வேற எங்கேயுமே பார்க்க முடியாது. இத பத்தி நமக்கு முன்னாடி தெரியவே இல்லையே! யாருமே சொல்லலையே! இந்த கோவிலுக்கு கூட்டம் வரத்தான் செய்யுது! ஆனா எல்லாரும் நவகிரகத்தை பாக்கறாங்க – நடராஜரை பாக்கறாங்க – சர்பேஸ்வரரை பாக்கறாங்க! பிரதோஷத்திற்கு வராங்க போயிடறாங்க. இந்த கோவில் உடைய மகிமையை பத்தி யாருக்குமே புரிய மாட்டேங்குது! ராஜ ராஜ சோழன் பெரிய கோவிலை கட்டுறதுக்கு முன்னாடியே இந்த கோவில் கட்டப்பட்டிருக்கு. அவ்வளவு பழமையான கோவில்! பிற்காலத்து அருமையான சிற்பங்கள்! தூங்காணை மாட விமானம்! ஏகப்பட்ட கல்வெட்டுகள் – அது தர்ற சுவையான தகவல்கள்! இத்தனை இருந்தும் மக்களுக்கு எதுவுமே தெரியலையேன்னு எனக்கு ஒரு ஆதங்கம்! சனி, ஞாயிறு ஆச்சுன்னா இந்த கோவிலுக்கு வந்து எத்தனை பேர் கிட்ட எனக்கு தெரிந்ததை சொல்ல முடியுமோ அதை சொல்றதில்ல எனக்கு ஒரு சந்தோஷம் – திருப்தி – அவ்வளவுதான்.”

“அம்பி! உன்னோட உத்தியோகம்?”

“நான் ஐடில இருக்கேன் சார்”.

இன்னொரு நாள் அந்த கோவிலில் இருக்கிற ஏ.எஸ்.ஐ.லே வேலை பாக்குறவங்களோ, கோவில் நிர்வாகத்தினரோ சரியா தெரியல! அவங்க ரெண்டு மூணு பேர் வந்து இவன்கிட்ட பேசிட்டு இருந்தாங்க.

“உங்களுக்கு எத்தனை தடவை தான் சார் சொல்றது? கோவிலுக்கு வந்தோமா சாமிய கும்பிட்டோமா போனோமான இல்லாம அனாவசியமா நீங்க கூட்டத்தை சேக்கறீங்க! சர்பேஸ்வரரையோ நவகிரகத்தையோ பார்க்க வர்ற கூட்டத்திலிருந்து ஒரு பாதி கூட்டம் வந்து நீங்க பேசுறது கேட்க போயிடுது! இந்த கூட்டத்தை சமாளிப்பது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா.?

“நான் இந்த கோவிலோட பெருமைகளை பத்திதானப்பா பேசுறேன்! அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?”

“சார், நீங்க வேற! நீங்க சொல்றத கேட்டுட்டு நிறைய பேர் எங்க கிட்ட வந்து நிறைய விவரம் கேட்க ஆரம்பிச்சிடுறாங்க. அது போதாதுன்னு நீங்க ஏதோ இந்த போர்டுல எழுதி இருக்கிறதுல பாதி தப்புன்னு வேற சொன்னீங்களாம். சேரனுக்கும் இந்த கோவிலுக்கும் சம்பந்தம் இல்லை அப்படின்னு நீங்க சொன்னீங்களாம். அப்புறம் ஏன் இந்த போர்டுல சேரன் கட்டிய கோவில் அப்படின்னு போட்டு இருக்கீங்கன்னு என்கிட்ட சில பேரு சண்டைக்கு வராங்க! இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இன்னும் சில பேர் இவ்வளவு அருமையான கோவிலை என் போட்டோ எடுக்க விடறது இல்ல அப்படின்னு வேற சண்டைக்கு வராங்க! இது எல்லா பிரச்சனையும் உங்களால தான் சார்! அதனால தயவு செஞ்சு இனிமே கூட்டத்தை கூட்டாதீங்க.

ப்ளீஸ்.”

“தூண்களை போட்டோ எடுத்தா தான் என்ன சார் தப்பு? ஏதேதோ டிவில இருந்து இந்த கோவிலை பற்றி நிறைய வீடியோஸ் எல்லாம் எடுத்துட்டு போறாங்க இல்ல? அது பரவாயில்லையா?

“அவங்க பர்மிஷன் வாங்கிட்டு வராங்க சார்! மேல் இடத்துல இருந்து பர்மிஷன் வாங்குறாங்க! அதெல்லாம் எங்களால ஒன்னும் கேட்க முடியாது! சார் நீங்க யாருன்னு தெரியல! ஏதாவது எம்எல்ஏ எம்பி கிட்ட இருந்து ஏதாவது லெட்டர் வாங்கிட்டு வாங்க அதுக்கப்புறம் வேணா உங்களை அலோ பண்ணுகிறோம்!”

அரை மணி நேரம் அவங்களோட கொஞ்சம் அந்த பையன் பேசிட்டு இருந்தான். அதுக்கப்புறம் கிளம்பிட்டான். நான் அவனை தடுத்து நிறுத்தி

“எதுக்குப்பா இந்த வேண்டாத வேலை? உனக்கு நல்ல கம்பெனியில் வேலை இருக்குனு சொன்னே! கை நிறைய சம்பாதிக்கிற! சனி ஞாயிறு ஆச்சுன்னா ஏதாவது சினிமா, பீச், மால்னு சுத்தமா இதே கோவிலுக்கு ஒவ்வொரு வாட்டியும் வந்துட்டு இந்த மக்களுக்கு இத பத்தி சொல்றதுல என்ன லாபம் உனக்கு? சில பேர் மாதிரி இதுக்கு காசு வாங்கினா பரவால்ல! பேப்பர்ல பேரு போட்டோ வந்தா கூட ஓகே. அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லன்னு வேற சொல்லிக்கற. ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை!”

“சார், இது வேண்டாத வேலை இல்ல! வேண்டிய வேலை தான்! மாடம்பாக்கத்தில் என்னை இவங்க பேச விடலைன்னா போயிட்டு போது! மணிமங்கலம்னு அந்த பக்கம் ஒரு ஊர் இருக்கு. அங்கேயும் ஒரு ரெண்டு மூணு கோவில் இருக்கு! அந்த கோவில்களோட மகிமையை பத்தி யாருக்கும் அவ்வளவா தெரியல. இனிமே ஒவ்வொரு சனி ஞாயிறு மணிமங்கலத்துக்கு போய் அந்த கோவில்களை பத்தி கிராமத்து ஆட்கள், அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லார்கிட்டயும் விலாவாரியா பேச போறேன்.”

அவன் கிளம்பி போயிட்டான். நான் ஒன்னு சொல்லலாம்னு நினைச்சேன் – ஆனா அத சொல்றதுக்குள்ள அவன் கிளம்பி போயிட்டான்.

“ஏதாவது ஒரு நல்ல டாக்டரா பார்த்து உன் மண்டைய கொஞ்சம் செக் பண்ணிக்கோ அம்பி!”