மதராஸ் மாந்தர்கள் – 7 – நிதியும் நீதியும்

உங்கள்ள எத்தனை பேருக்கு நதிக்கரையில் வாழற பாக்கியம் கிடைச்சிருக்கு? எனக்கு கிடைச்சிருக்கு. சிந்தாதிரிப்பேட்டை கலவை செட்டி தெருல தான் எங்க வீடு. கல் எரிகிற தூரத்தில் நதி. கூவம் நதி. 200 வருஷத்துக்கு முன்னாடி பச்சையப்ப முதலியார் நாள் தவறாம கூவம் நதியில் குளித்ததா நான் படிச்சிருக்கேன். ஆனா இப்ப எல்லாம் நாங்க கூவத்துல குளிக்கிறது இல்லை.

எங்க ஊர்ல ரெண்டு கோவில் இருக்கு! ஆதி புரீஸ்வரருக்கு ஒரு கோவில் ஆதி கேசவப் பெருமாளுக்கு இன்னொரு கோவில். ரெட்டை கோவில். ஆனால் நான் இந்த ரெண்டு கோவிலுக்குமே போறதில்ல. என்ன பொருத்தவரைக்கும் கோஷன் லைப்ரரி தான் என்னோட கோவில். படிப்பதில் ஆர்வம் இருக்கிற என்ன மாதிரி ஆட்களுக்கு நூலகம் தான் கோவில். அங்க இருக்கிற புத்தகங்கள் தான் கடவுள்.

நாம உண்டு, லைப்ரரி உண்டு, நாம படிக்கிற புத்தகங்கள் உண்டு அப்படின்னு இருந்துட்டா வாழ்க்கை நல்லா தான் இருக்கும். ஆனால் நாம வாழற வாழ்க்கை நாம தீர்மானிப்பது இல்லையே. வயித்து பிழைப்புன்னு ஒன்னு இருக்கே. அதுக்காக பிடிக்குதோ புடிக்கலையோ ஏதோ ஒரு வேலைய செஞ்சு தான் ஆகணும். ஆனா நாம செய்கிற வேலையே நமக்கு பிடிச்ச வேலையா இருந்தா? அப்படித்தான் ஒரு வேலை எனக்கு கிடைக்கணும் அப்படிங்கிற ஆசையில நான் பணம் சேர்க்க ஆரம்பிச்சேன். எப்படி பணம் சேர்க்க ஆரம்பித்தேன்? நாங்க ஏழைப்பட்ட குடும்பம். இருக்கிறது வாடகை வீடு. அப்பா கிடையாது. அண்ணன் தம்பி அக்கா தங்கச்சியும் கிடையாது. உதவி பண்றதுக்கு பெருசா உறவும் கிடையாது. என்ன மாதிரி ஆட்களுக்கு எவ்வளவு அதிகமாக மார்க் வாங்கினாலும் சீக்கிரமா வேலையும் கிடைக்காது. என்னால காலேஜ்ல கரஸ்பாண்டன்ஸ்ல படிக்க தான் முடிஞ்சுது. காலேஜுக்கு போற பசங்கள பார்த்தா பொறாமையா இருக்கும். அதுவும் இந்த இன்ஜினியரிங், டாக்டருக்கு படிக்கிற பசங்கள பார்த்தா என் வயிறு எரியும். என்ன பண்ணலாம்னு நான் யோசிச்சிட்டு இருந்த போ மெட்ராஸ்ல எங்க பார்த்தாலும் புதுசா சில விளம்பரங்கள் தென்பட ஆரம்பிச்சது. அதுலயும் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் சொல்லித்தர்ற நிறுவனத்தோட விளம்பரம் என்ன ரொம்பவுமே கவர்ந்தது. “நீங்க டாக்டர் ஆகலையா- கவலைய விடுங்க; இன்ஜினியர் ஆகலையா – கவலை விடுங்கள்; எங்க கிட்ட வாங்க – டாக்டருக்கும் இன்ஜினியருக்கும் மாற்றா ஒரு தொழில்- ஒரு உத்தியோகம் உங்களுக்கு எங்களால் வாங்கித் தர முடியும்”. கிட்டத்தட்ட அந்த ஸ்டைல்ல தான் அந்த விளம்பரம் இருக்கும். அதை பார்த்த உடனே – அதை பார்த்தவுடனே அப்படின்னு சொல்றதை விட அதைப் பார்க்கும்போதெல்லாம் என் மனசுல ஆசை – என்னை மாதிரி ஆட்களுக்கு ஆசைன்னு சொல்லக்கூடாது -பேராசை – நாமளும் கம்ப்யூட்டர் படிச்சா என்ன அப்படிங்கற பேராசை. ஆனா அதுக்கு காசு வேணுமே! எங்கே போவேன்? சிந்தாதிரிப்பேட்டையில் சில பசங்களுக்கு டியூசன் எடுத்தேன். சௌகார்பேட்டை வரைக்கும் ட்ரெயின்ல போய் சில சேட்டு பசங்களுக்கு டியூஷன் எடுத்தேன். ரெண்டு மூணு கடையில டெம்பரரியா டெலிபோன் ஆபரேட்டரா வேலை செஞ்சேன். டைப் ஃபீஸ்டா வேலை செஞ்சேன். இப்படி இப்படி நிறைய இடங்களில் சின்ன சின்ன வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்தேன். எப்படியும் ஒரு 40 ஆயிரம் ரூபாய் சேர்த்துட்டா அந்த கம்ப்யூட்டர் கோர்ஸ்ல சேர்ந்து ரெண்டு வருஷத்துல படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போவேன்! என் மனசுக்கும் அது பிடிச்ச வேலையா இருக்கும்! நிம்மதியா இருப்பேன்! அதுதான் என்னுடைய ஒரே கனவு – பெருங்கனவு!

அப்படித்தான் அன்னைக்கு ஒரு நாள் ஒரு சின்ன கம்பெனில நைட் ஷிப்ட் வேலை முடிச்சிட்டு சிந்தாதிரிப்பேட்டைக்குள்ள நுழையிறேன் காலங்காத்தால. நம்ம ஆதிபுரீஸ்வரர் கோவில் வாசல்ல தேவதையை பார்த்தேன். ஆமாங்க….தூக்க கலக்கத்துல சொல்லல – ஒரு தேவதையை பாத்தேன். கனவா இருக்குமா அப்படின்னு தான் ஒரு நிமிஷம் நினைச்சேன். அப்புறம் யோசிச்சு பார்க்கும்போது எனக்கு இருக்கிற ஒரே கனவு கம்ப்யூட்டர் கனவு மட்டும்தான். இது கனவா இருக்க வாய்ப்பில்லை அப்படின்னு தோணிச்சு. கோவில்ல இருந்து யாராவது வானுலக தேவதை வெளியில வந்து நம்ம கண்ணுக்கு மட்டும் தெரியுதா அப்படின்னு ஒரு சின்ன சந்தேகம். தேவதையை பார்க்கிற அளவுக்கு நாம் ஒன்றும் பெருசா புண்ணியம் பண்ணது இல்லையே அதனால அது வானுலக தேவதையா இருக்க வாய்ப்பில்லை.. ஆனால் எந்த தேவதையும் இந்த பூலோக தேவதை அளவுக்கு அழகா இருக்கவும் வாய்ப்பில்லை. நான் பார்த்த காட்சி வர்ணிக்கிறதுக்கு என்கிட்ட வார்த்தை இல்லை! அவளைப் பார்த்த உடனே நான் அடைஞ்ச சந்தோசத்தை வெளிப்படுத்தவும் என்னால முடியல! நீங்க முன்ன பின்ன காதலிச்சு இருக்கீங்களா? இல்லனா நான் என்ன சொல்றேன்னோ அது உங்களுக்கு புரியறதுக்கு வாய்ப்பு இல்ல! காதலிச்சிருக்கீங்கன்னா நீங்க இதை படிக்க வேண்டிய அவசியமே இல்லை !உங்களுக்கு நல்லாவே புரிஞ்சு போகும். வயிற்றுப் பிழைப்புக்காக திண்டாடிட்டு இருந்த எனக்கு அந்த ஒரு பிரச்சனை போகாதுன்னு, இப்போ இன்னொரு பிரச்சனையும் வந்துடுச்சு. அதுதான் காதல் பிரச்சனை! ஆம், நான் காதல் வயப்பட்டேன்! பார்த்த உடனே காதலா?முட்டாள்தனமா இருக்கு – நம்பற மாதிரி இல்ல! நீங்க என்ன வேணா சொல்லிட்டு போங்க! இது என் வாழ்க்கை! நான் பார்த்தேன் அந்த தேவதையை! பார்த்த உடனே காதல் வயப்பட்டேன்! அது உண்மை!

இப்போ எனக்கு ஒரு கனவு இல்ல – ரெண்டு கனவு! காசு சேர்க்கணும்! சேர்த்து கம்ப்யூட்டர் கோர்ஸ்ல சேரனும்! நல்லபடியா படிச்சு முடிச்சு வேலையில சேர்ந்து கை நிறைய சம்பாதிக்கணும்! அது மட்டும் தான் என்னுடைய முந்தைய கனவு! வேலைல சேர்ந்த உடனே இந்த பொண்ணு வீட்டை கண்டுபிடித்து அவங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி இவளை நான் கல்யாணம் பண்ணிக்கணும். வாழ்க்கை முழுக்க இவளை கண்கலங்காம பாத்துக்கணும்! இது என்னோட புதுசா முளைச்சிருக்கற ரெண்டாவது கனவு.

விபத்து! விபத்துங்கிறது எதிர்பாராமல் நடக்கிறது தான்! சாலையில் நடந்து போயிட்டு இருப்பான்! சந்தோசமா பேசிக்கிட்டு வீட்டுக்கு வரேன் அப்படின்னு அவங்க வீட்ல கூட சொல்லிட்டு போயிருப்பான்! எதிர்பாராத விதமா எங்கிருந்தோ வர்ற ஒரு பெரிய வண்டி அவன அடிச்சிட்டு போயிடும்! அது ஒரு நொடிதான் – ஒரு நிமிடம்தான் – யாருமே எதிர்பார்க்காமல் என்னமோ நடக்கும்! அதுதான் விபத்து! அந்த மாதிரிதான் எனக்கும் இந்த விபத்து நடந்தது. ஆனால் இது ஒரு இன்பமான விபத்து! அவளை நான் பார்த்தது ஒரு நிமிடம் கூட இருக்காது! 30 40 நொடிகள் தான்! பார்த்த உடனே அவள் முகம் என் மனசுல பதிஞ்சு போச்சு! அந்த விபத்து நடந்த உடனே – அந்த இன்பமான விபத்து நடந்த உடனே நான் தீர்மானிச்சிட்டேன் – கல்யாணம் கட்டினா இவளை தான் கல்யாணம் கட்டணும்! அவ பேரு என்ன – ஜாதி என்ன – எங்க இருக்கா – சிந்தாதிரிப்பேட்டை தானே இருக்கா – எதுவுமே எனக்கு தெரியாது! அது எல்லாத்தையும் இனிமேல் தான் நான் கண்டுபிடிக்கணும்! ஆனா அவள் யாரா இருந்தாலும் சரி நான் தான் அவளுடைய கணவன்.

என்னுடைய இரண்டாவது கனவு நிறைவேறணும்னா அதற்கு முன்னாடி முதல் கனவு நிறைவேறணும். அந்த முதல் கனவு நிறைவேறணும்னா நான் சீக்கிரமே காசு சேர்க்கணும்! என்ன செய்வேன்? இப்போ இருக்கிற நிலைமையில் மாசத்துக்கு 1500 ரூபா தான் என்னால சேர்க்க முடியுது! இப்படியே போனா ஒரு நாலு வருஷம் ஆயிடுமே! இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள 40 ஆயிரத்தை சேத்தா தானே என்னால சீக்கிரம் படிச்சு இன்னொரு ரெண்டு மூணு வருஷத்துல வேலையிலும் சேர்ந்து அதுக்கப்புறம் என் மனதிற்கு இனியாளை மணமுடிக்க முடியும். ஸோ, சீக்கிரம் காசு சேர்க்கணும்! என்ன செய்யப் போறேன்? எப்படி சேர்ப்பேன்?

அந்த வருஷம் நான் தீவுத் திடல்ல பொருட்காட்சிக்கு போயிருந்தேன். அரசு பொருட்காட்சி! நம்முடைய அரசு நடத்துற பொருட்காட்சி! அங்க சில விளம்பரங்களை பார்த்தேன். சில நிதி நிறுவனங்கள் – அதாவது நகைக்கடைகள் அல்லது தேக்கு மர வியாபாரம் செய்கிற நிறுவனங்கள் – இந்த மாதிரி சில நிதி நிறுவனங்கள் 25 சதவீதத்தில் இருந்து 36 சதவீதம் வரை வட்டி தராங்க. முதல்ல எனக்கு நம்பகத்தன்மை வரல. ஆனால் என்னுடைய பணத் தேவை அந்த விளம்பரங்களை திரும்பிப் பார்த்து திரும்பவும் படிக்க வைத்தது. இத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் கூடுற இடத்துல அரசு நடத்துற பொருட்காட்சியில் இப்படி ஒரு விளம்பரம் இருக்குன்னா பொய்யா இருக்க வாய்ப்பு இருக்கா? பொய் பித்தலாட்டங்கள் எல்லாம் அரசு அனுமதிக்குமா? அவங்களே காசு வாங்கிட்டு இந்த மாதிரி விளம்பரங்களை வைக்க அனுமதிப்பாங்களா? கண்டிப்பா மாட்டாங்க இல்ல!

கோஷன் லைப்ரரில அந்த ஞாயிற்றுக்கிழமை நான் சில பத்திரிகைகளை புரட்டிட்டு இருந்தேன். நான் படிச்ச எல்லா முன்னணி வார இதழ்களிலும் விளம்பரங்கள் – அதே நிதி நிறுவனங்களை பற்றி! நான் திரும்பவும் யோசிக்க ஆரம்பிச்சேன்! இந்த பத்திரிகைகள் எல்லாம் எத்தனை வருஷமா இருக்கு! 30 வருடம் – 50 வருடம்! லட்சக்கணக்கான மக்கள் இத விரும்பி படிக்கிறாங்க! இந்த மாதிரி பத்திரிகைகள்ல ஒரு பொய்யான விளம்பரம் வந்தால் மக்களுடைய நம்பிக்கை போயிடும். அந்த பயத்துலயாவது இந்த பத்திரிகைகள் எல்லாம் உண்மையான விளம்பரங்களை மட்டும் தானே போடுவாங்க! அப்போ இந்த நிதி நிறுவனங்கள் சொல்ற மாதிரி உண்மையிலேயே இவ்வளவு பணம் வட்டியா கிடைக்குமோ?

இன்னும் ஒரு மாசம் போச்சு! எங்க பாத்தாலும் இந்த மாதிரி நிதி நிறுவனங்கள பத்தி தான் பேச்சு! எனக்கு தெரிஞ்ச பல நண்பர்கள் – அவங்களுடைய நல்ல புத்திசாலியான அப்பாக்கள் – எல்லாருமே இந்த மாதிரி நிதி நிறுவனங்களில் டெபாசிட் பண்ணி நல்ல வட்டி சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க! நான் மட்டும்தான் முட்டாள்தனமா குருவி சேர்க்கிற மாதிரி காசு சேர்த்து ஒரு நாலு வருஷம் அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் பெரிய ஆள் ஆகுற கனவோடு இருக்கேன். ஒருவேளை நானும் இந்த மாதிரி ஏதாவது நிதி நிறுவனத்தில் காசு போட்டேன்னா ஒரு வருஷத்துலையோ இல்லனா ரெண்டு வருஷத்துலையோ நான் நினைக்கிற நிதி சேராதா? அது தானே புத்திசாலித்தனமான விஷயமா இருக்கும்! நான் யோசிக்க ஆரம்பிச்சேன்.

அடுத்த ஒரு மாசத்துக்குள்ள நான் நிதி நிறுவனங்களில் என்னுடைய பணத்தை முதலீடு பண்ண ஆரம்பிச்சேன். அப்பவும் என் மனசுக்குள்ள ஒரு பயம்! ஒரே நிதி நிறுவனத்தில் நாம் அத்தனை காசையும் போட்டா ,அது முழுகி போய்விடும்! பல நிதி நிறுவனங்களில் பிரிச்சு பிரிச்சு போட்டோம்னா ஒரு கம்பெனியில் பிரச்சனை வந்தா கூட நம்ம காசு எல்லாமே முழுகிப் போகாது! பரவால்ல, நானும் புத்திசாலியா தான் இருக்கேன். புரசைவாக்கத்தில் ஒரு நகைக்கடையில் கொஞ்சம் பணம், ஆழ்வார்பேட்டையில் தேக்குமர கம்பெனியில் கொஞ்சம் பணம், ராயப்பேட்டையில் கார் விற்கும் கம்பெனியில் கொஞ்சம் பணம், இப்படி இந்த இடங்களில் என்கிட்ட இருந்த மொத்த பணத்தையும் பிரிச்சு முதலீடு பண்ணிட்டேன் . சில இடங்களில் முதலீடு பண்ண உடனே கைல 200 ரூபாய் 500 ரூபான்னு குடுத்தாங்க! கேட்டா இன்சென்டிவ்னாங்க. ரொம்பவும் சந்தோஷமா இருந்தது. ரெண்டு மூணு மாசம் என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை! கை நிறைய வட்டி பணம் – அந்த வட்டி பணத்தை எல்லாம் செலவழிக்காமல் மறுமுதலீடு பண்ணேன். ஏன்னா எனக்கு சீக்கிரம் காசு வேணும்! கம்ப்யூட்டர் படிக்கணும்.

சில மாசம் போச்சு. அன்னைக்கு ஒரு நாள் மனசுக்கு ஏதோ ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒரு சினிமாவுக்கு போனா தேவலையா இருக்கும் அப்படின்னு நினைச்சேன். சங்கம் தியேட்டர்ல இந்தியன் படத்தை பார்த்தேன். ஊழல்வாதிகளை ஒழிச்சு கட்டணும் – அதுதான் இந்த படத்தோட ஒன் லைன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்தப் படத்தை பாத்துட்டு பஸ்ல நான் புரசவாக்கம் ஹை ரோடு வழியா வந்துகிட்டு இருக்கும்போது நான் முதலீடு பண்ண நகை கடை! அந்த கடைக்கு முன்னாடி ஏகப்பட்ட கூட்டம்! என்ன நடக்குது? ஏன் இவ்வளவு கூட்டம்? இறங்கி போய் பார்க்கலாம்! கடையில் வேலை பார்க்கிறவர் – நான் அவரை பார்த்து இருக்கேன் ரெண்டு மூணு வாட்டி – தலையில் கட்டு – இப்பதான் யாரோ அடிச்சிருப்பாங்க போல! யார் யாரோ சத்தம் போட்டுட்டு இருந்தாங்க! ஒன்னும் புரியல! கூட்டத்துல ஒருத்தர் கிட்ட கேட்டேன் – “என்ன சார் பிரச்சனை?” “சார், வட்டி தர மாட்டேங்குறாங்க! சரி முதலையாவது எடுக்கலாம் என்று பார்த்தால் அதையும் கொடுக்க மாட்டேங்கிறாங்க!” ஏதோ பெரிய பிரச்சனை போல இருக்கு! வயித்துல புளியை கரைச்சது! பயம் – அந்த பயத்தை என் உடல் முழுவதும் உணர்ந்தேன். ஏமாந்து போயிட்டோமா? இந்த ஒரு நிறுவனத்தில் மட்டும் தான் பிரச்சனையா? பணம் போட்ட எல்லா நிறுவனத்திலும் பிரச்சினையா? சந்தேகம் வர ஆரம்பிச்சது. அப்படி எல்லாம் இருக்காது! வீணா கற்பனை பண்ண வேண்டாம்! இங்கேயும் கூட பெருசா பிரச்சனை எல்லாம் இருக்காது. ஒரு மாசத்துல நம்ம பணம் வந்துரும்.

வீட்டுக்கு போனேன்! ஆனா நிம்மதியா இருக்க முடியல! ரெண்டு மூணு நாள்ல நான் நினைச்சது – என்னுடைய பயம் உண்மையாயிடுச்சு. நான் பணம் போட்ட நிதி நிறுவனங்களில் மட்டும் இல்லை! நான் பேரே கேள்விப்படாத நிதி நிறுவனங்களையும் சேர்த்து சென்னையில கிட்டத்தட்ட 40 நிதி நிறுவனங்கள் மூடிட்டாங்க! வட்டியும் வரல – முதல் எப்போ தர வேண்டும் என்று சொல்ல மாட்டேங்கிறாங்க! என்ன பண்ண போறோம்? தெரியல! நான் ஒழுங்கா வேற எங்கேயாவது பணத்தை சேர்த்து வைத்திருந்தால் நாலு வருஷத்துலயாவது கம்ப்யூட்டர் படிச்சிருக்கலாம். இப்போ இருக்கிற காசை இங்க போட்டுட்டேனே! திரும்பவும் நான் பணத்தை சேர்க்க ஆரம்பிக்கணுமா? என்ன பண்ணுவேன். இனிமே ஒரு வேளை மட்டும் தான் சாப்பிடணும். பஸ்ஸில் போக கூடாது! ட்ரெயின்ல போக கூடாது! எல்லா இடத்துக்கும் நடந்து போகலாம். வீட்ல ஃபேன் கூடவே கூடாது! வேற எப்படி எந்த செலவை குறைக்கிறது? எந்த கெட்ட பழக்கமும் என்கிட்ட இல்லையே! எந்த செலவை நான் குறைப்பேன்? இனிமே எந்த பத்திரிகையும் வாங்க கூடாது – துக்ளக்கை தவிர. இது எங்க போய் முடிய போகிறது? என் பணத்தை எப்படி நான் திரும்ப வாங்குவேன்?

தினம் தினம் நான் காசு போட்ட ஒவ்வொரு நிறுவனத்துக்கும் போறேன்! அங்கே வெளியில கூட்டத்தில் என்ன பேசறாங்க என்பதை கேக்கறேன். ஒரு மாசம் ஆச்சு! யாரெல்லாம் முதலீடு செஞ்சு ஏமாந்தாங்களோ அவங்க எல்லாருமே தனித்தனியா சங்கம் ஆரம்பிக்கறாங்க. ஒவ்வொரு நிதி நிறுவனத்துக்கும் ஒவ்வொரு சங்கம்! அடுத்த ஒரு மாசம்! அதுவே ஒரு பெரிய வேலையாக எனக்கு மாறிப்போச்சு. நான் எங்கெல்லாம் முதலீடு பண்ணி இருந்தேனோ அந்தந்த நிதி நிறுவனத்திற்கு சங்கம் யார் ஆரம்பிச்சிருக்காங்க – அந்த செயலாளர், பொருளாளர் எல்லாம் எந்த ஏரியால இருக்காங்க – அதை கண்டுபிடித்து அவங்களுடைய வீட்ட தேடி கண்டுபிடிச்சு- அந்த சங்கத்தில் சேர்வதற்கு ஒரு 200 ரூபாயோ 300 ரூபாயோ கொடுத்து- இதுவே ஒரு தனி வேலையாக ஆயிடுச்சு! இதுக்கு வேற செலவு செய்ய வேண்டிதா போயிடுச்சு.

இப்படி ஒரு ரெண்டு மாசம் போயிருக்கும். அதுக்கு நடுவுல போலீஸ் கமிஷனர் ஆபீஸ் எல்லாம் போய் நாங்க கம்ப்ளைன்ட் எல்லாம் கொடுத்தோம். இத்தனை பேரு ஏமாற்றப்பட்டு இருக்காங்க! கண்டிப்பா போலீஸ் எதாவது செய்வாங்க! நம்ம பணம் கண்டிப்பா திரும்ப வந்துரும்! ஏதோ ஒரு நம்பிக்கை மனதில் இருந்தது.

இன்னும் ஒரு மாசம் போச்சு! இந்த எல்லா சங்கங்களும் சேர்ந்து இப்ப ஏதோ ஒரு பெரிய சங்கம் ஆரம்பிக்க போறாங்க. இந்த எல்லா சங்கங்களும் சேர்ந்து போராடுவது – ஒன்றாக போராடுவது அப்படின்னு ஒரு முடிவு! அதுக்கு தனியா ஒரு சங்கம் ஆரம்பிக்க போறாங்க! அந்த சங்கத்தில் இந்த எல்லா சங்கங்களும் உறுப்பினர்களாக இருப்பாங்களாம்! அந்த சங்கத்துக்கு வேற தனியா நாம காசு கட்டணும் போல! அவங்க வந்து மாசா மாசம் இரண்டாவது சனிக்கிழமை அன்னிக்கி எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் மே தின பூங்காவில் சந்திக்கிறார்கள்! நானும் இந்த மாசத்துல இருந்து அங்க போனேன். கிட்டத்தட்ட ஒரு ரெண்டு மூணு மணி நேரம் வேற வேற சங்கத்தை சேர்ந்தவங்க மேடையில பேசினாங்க! எப்படியும் நம்ம பணத்த திரும்பி வாங்கிடுவோம் – சும்மா விடமாட்டோம் – அரசாங்கம் எங்களை ஏமாளி ஆக்க முடியாது – ரோட்டுக்கு வந்து போராடுவோம் – தர்ணா பண்ணுவோம் – பஸ்ஸை மறிப்போம் – இப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஸ்டைல்ல அவர்களுக்கு இஷ்டப்பட்டதை பேசினாங்க! நல்ல கூட்டம்! வெயிலையும் பொருட்படுத்தாமல் பெரிய கூட்டம்!ஆண்கள், பெண்கள், கல்லூரியில் படிப்பவர்கள், வயதானவர்கள், வசதியானவர்கள், ஏழைகள், இந்த மொழி, அந்த மொழி, அந்த ஜாதி, இந்த ஜாதி – இப்படி கலவையான மனிதர்கள்! எல்லாருமே ஏமாந்து போயிருக்காங்க இல்ல!

ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு பேசினாங்க!
என் பொண்ண வெளிநாட்டில் படிப்பதற்காக சேர்த்து வைத்திருந்த காசு எல்லாமே போயிடுச்சு! இப்ப நான் என்ன பண்ண போறேன்?
ஒரு மாசமா எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. வைத்தியத்துக்கு காசே இல்ல! 10 லட்ச ரூபாய் – எல்லாமே போயிடுச்சு! எப்போ வந்த காசு திரும்பி வரும்? எங்க அப்பாவை நான் எப்போ நல்லா பார்த்துக்க போறேன்?
காசு வந்தா வரது, இல்லன்னா போகுது! நான் லஞ்சம் வாங்கின காசு தான்! வரலைன்னாலும் எனக்கு ஒன்னும் நஷ்டம் இல்லை.
வீட்டில் நகையா இருந்தா பாதுகாப்பு இல்லைன்னு சொல்லி எல்லா நகையையும் வித்து அந்த காசெல்லாம் டெபாசிட் பண்ணேன்.ரெண்டே மாசத்துல எல்லாமே போயிடுச்சு! நான் என்ன பண்ண போறேன்.
பத்திரிகைல வந்த விளம்பரங்களை நம்பித்தானே நாம காசு போட்டோம்! இப்போ அவங்க எல்லாம் நம்மள பேராசை பிடிச்சவங்கன்னு எழுதறாங்க. கிண்டல் பண்ணி கார்ட்டூன் போடறாங்க.
துக்ளக் ஒன்னு தான் நமக்கு ஆறுதலா எழுதறான். சோ நமக்காக வாதாட போறாராமே – உண்மையா?

விதவிதமான புலம்பல்கள்! வேறு வேறு ஆசைகள்! வேறு வேறு காரணங்கள்! அவங்க கிட்ட இருந்த ஒரே ஒற்றுமை – எல்லாருமே ஏமாந்து போயிட்டாங்க.

இத்தனை பேர் ஏமாந்து போயிருக்காங்கனா கண்டிப்பா எப்படியாவது பணத்தை வாங்கிடலாம் இல்ல? எனக்கு ஒரு நம்பிக்கை – இல்லனா நப்பாசை! ஏதோ ஒன்னு!

அந்தக் கூட்டத்தில் ஒரு நிமிடத்தில் மின்னல் என்னுடைய கண்ண வெட்டினா மாதிரி ஒரு பிரமை. ஆமாம்! அதற்கு காரணம் என் கண்ணுல திரும்பவும் தேவதை தட்டுப்பட்டுச்சு! அதே தேவதை! என்னுடைய சிந்தாதிரிப்பேட்டை ஏரியாவுல நான் யாரை பார்த்தனோ, அதே தேவதை. ஒரே ஒரு வித்தியாசம் அந்த தேவதை அவளுடைய அப்பாவோட வந்திருந்தா . தேவதை பார்வை என் மீது விழுமா? எப்படி என்னை அறிமுகப்படுத்திக் கொள்வேன்? என்னன்னு சொல்வேன்? என்கிட்டே என்ன இருக்கு சொல்வதற்கு? படிப்பும் இல்லை – உத்தியோகமும் இல்லை – பணமும் இல்லை! நான் என்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வேன்! தேவதையே தயைகூர்ந்து என் மீது தன்னுடைய கடை பார்வையை செலுத்தினால் மட்டும்தான் உண்டு! மற்றபடி என்னுடைய முயற்சியால் நான் எதையுமே செய்ய முடியாது.

கூட்டத்தோடு கூட்டமா அவளோட பின் வரிசையில போய் நானும் உட்கார்ந்து கொண்டேன். கூட்டம் முடிந்ததும் அவளும் அவங்க அப்பாவும் கிளம்பி போனாங்க. நானும் கொஞ்சம் பின்னாடியே நடந்து போயிட்டு இருந்தேன். நல்ல வெயில் வேற! திடீர்னு அவளோட அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டார்! கூட போயிட்டு இருந்த ரெண்டு பேரு அவர தாங்கி பிடித்துக்கொண்டு யார்கிட்டயாவது தண்ணி இருக்கா அப்படின்னு சத்தம் போட்டு கேட்டாங்க! என்கிட்ட பாட்டில் இருந்தது! நான் உடனே ஓடிப் போய் பக்கத்துல இருந்த குழாயிலிருநு தண்ணி பிடிச்சு அவருடைய முகத்தில் தெளிச்சு, அவருக்கு கொஞ்சம் தண்ணியும் குடிக்க வச்சேன் .அவர் எந்திரிச்சு என்கிட்ட நன்றி தெரிவித்து என்ன பத்தி விசாரிக்க ஆரம்பித்தார்! நானும் சிந்தாதிரிப்பேட்டை தான் அப்படின்னு தெரிஞ்ச உடனே அவருக்கு ஏதோ சந்தோசம்! என் மேல தனி பாசம்! பரஸ்பரம் எவ்வளவு ரூபாய் எந்தெந்த நிதி நிறுவனங்களில் ஏமாந்தோம் அப்படிங்கற சோகக் கதையை பகிர்ந்து கிட்டோம். இதுக்கு நடுவுல அந்த தேவதை வாயைத் திறந்து ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் பேசினா – “ரொம்ப தேங்க்ஸ் சார் ” அப்படின்னு சொன்னா! அதுவே எனக்கு அவ கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் பேசின மாதிரியான ஒரு சந்தோஷத்தை கொடுத்தது. என்னுடைய பணம் வருமா வராதா என்கிற கவலை எல்லாம் நான் ஒரு நிமிஷத்துக்கு மறந்து போயிட்டேன்! பணம் வரலைன்னா கூட பரவால்ல! அவளை பக்கத்தில் இருந்து பார்க்க முடிந்தது! அவ பேசினத கேட்க முடிந்தது! என்ன சொர்க்கத்துக்கு கொண்டு போன மாதிரி நினைக்க வைத்தது.

அதற்கு அப்புறம் கிட்டத்தட்ட ஒரு மூணு நாலு மாசம் மே தின பார்க்ல எங்களுடைய சந்திப்பு நடந்துட்டு இருந்தது! முதல் தடவை ஒரு வார்த்தை மட்டும் பேசின அந்த தேவதை, அதற்கு அப்புறம் என்ன பார்த்து புன்னகை செஞ்சா ஓரளவுக்கு! ஒன்னு இல்லன்னா ரெண்டு வாக்கியங்கள் எல்லாம் பேச ஆரம்பிச்சா! இந்த மாதிரி எங்களுடைய நட்பு கொஞ்சம் மெதுவாகவே வளர ஆரம்பித்தது. இந்த மூணு நாலு மாசத்துல அவளோடையும் அவ அப்பாவோடையும் பேசினதுல எனக்கு தெரிஞ்ச விஷயங்கள் என்னன்னா – இந்நேரத்துக்கு அவ கல்யாணம் பண்ணி போயிருப்பா – இந்த நிதி நிறுவனங்கள் ஏமாத்தாமல் இருந்திருந்தால்! அவளை நான் நிரந்தரமா இழந்திருப்பேன்! கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு! ஒரு மாசத்துல கல்யாணம்! அந்த சமயத்துல தான் இந்த பிரச்சனை வந்திருக்கு! கிட்டத்தட்ட அஞ்சு லட்ச ரூபா! இவர் போட்டிருந்த பணம் எல்லாமே போயிடுச்சு! கல்யாணத்தை எங்கிருந்து நடத்தறது? கல்யாணம் நின்னு போச்சு! பாவம் தாயில்லாத பொண்ணு! இவரு ரிட்டயர் ஆகி அஞ்சு வருஷம் ஆயிடுச்சு போல இருக்கு! ஸ்கூல்ல வாத்தியாராக இருந்திருக்கார்! ரிட்டயர்மெண்ட்ல கிடைத்த பணம், தன்னுடைய சேமிப்பு எல்லாத்தையுமே பொண்ணுடைய கல்யாணத்துக்காக இந்த நிதி நிறுவனத்தில் போட்டு எல்லாமே போயிடுச்சு! பாவம் அவர் ரொம்ப மனசு ஒடஞ்சு போயிட்டாரு! மாசா மாசம் நான் பார்க்கும் போதே எனக்கு வித்தியாசம் நல்லா தெரியுது. அவருடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமா மோசமாகி விட்டு வருதுங்கறது தெள்ள தெளிவா தெரியுது! அவருக்கு ஏனோ பணம் திரும்பி வரும் என்ற நம்பிக்கை நாளாக நாளாக குறைஞ்சுக்கிட்டே வருதுன்னு நினைக்கிறேன்.

அதுக்கப்புறம் நாங்க சிந்தாதரிப்பேட்டைலயே நிறைய தடவை பாத்துக்கிட்டோம். அவளுக்கும் எனக்கும் பேசறதுக்கு நிறைய விஷயங்கள் இருந்துச்சு. பாரதியார் கவிதைகள்லேருந்து புதுசா வந்திருக்கற விண்டோஸ் வரைக்கும், உலக அரசியல்லேருந்து உள்ளூர் அரசியல் வரை, சினிமா, இலக்கியம், அறிவியல், வரலாறு, ஆன்மிகம் – நிறைய பேசினோம். இவளுக்கும் எனக்கும் தெரியாத விஷயமே இருக்காது போல – நாங்க போட்ட பணம் திரும்ப கிடைக்குமாங்கற விஷயத்தை தவிர.

ரெண்டு மாசம் ஆச்சு. அவளோட அப்பாவுக்கு ரொம்பவும் முடியல. நாந்தான் அப்பப்போ அவரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவேன். அடிக்கடி அவங்க வீட்டுக்கு போய் கவனிச்சுப்பேன். என்னை மாதிரி அவளுக்கும் அண்ணன் தம்பி அக்கா தங்கை யாரும் இல்லை. காசில்லாத குடும்பத்தை மதிக்கறதுக்கு மத்த உறவுக்காரங்க என்ன மடையங்கள்ளா?

இலக்கியமோ சினிமாவோ இப்போ எங்களால பேச முடியல….அவ்வளவா பேசிக்க கூட இல்ல. ஆனா முன்ன இருந்தத விடவும் எங்களுக்குள்ள நெருக்கம் அதிகமாயிடுச்சுன்னு எனக்கு படுது! அந்த நாளும் வந்துச்சு….வாழ்நாள் முழுக்க சேத்து வச்ச காசை கடைசி வரைக்கும் அனுபவிக்காத அந்த மனுஷன் பொண்ணை அனாதையா விட்டுட்டு போயிட்டார். எல்லா காரியத்துக்கும் நாந்தான் உதவி பண்ணேன்.

இப்படியே நாட்கள் – வாரங்கள் – மாதங்கள் கழிந்தன! நானும் அவளும் அடிக்கடி சந்திச்சிக்கிட்டோம். மாசா மாசம் தவறாம மே தின பூங்காலே மீட்டிங் போவோம்.

இப்பல்லாம் மீட்டிங்கிலே கூட்டம் குறைஞ்சு போச்சு. மக்களுக்கு நம்பிக்கை போயிடுச்சு- நம்ம பணம் வராது. . பத்திரிகைகளுக்கு எழுத வேற விஷயங்கள் நிறைய கிடைச்சு போச்சு. ஏமாத்தினவங்க வேற நாட்டுக்கு ஓடிட்டாங்க. அவங்க ஏமாத்தின பணம் எந்தெந்த கட்சிகள் கிட்டே போச்சோ? ஏமாந்தவங்கள்ல வயசானவங்க அதிர்ச்சிலேயும் அயர்ச்சிலேயும் செத்து போயிட்டாங்க. சின்ன பசங்க வேலைக்காக வேற ஸ்டேட் போயிட்டாங்க. மிச்சம் இருக்கறவங்க நம்பிக்கை இல்லமே பேருக்கு மீட்டிங் வராங்க.

அப்படித்தான் கூட்டமில்லாத ஒரு நாள் மே தின பூங்காலே வச்சு என்கிட்டே அவ கேட்டா – “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா”?