மதராஸ் மாந்தர்கள் – 8 – முண்டாசு அணிந்த மீசைக்காரன்

மதராஸ்…மதராஸைப் போல இந்தத் தேசத்தில் சிறந்த நகரம் இருக்க முடியுமா? முடியாது! அதுவும் இந்த பிராட்வேவைப் போல அகலமான பாதை வேறு ஊரில் இருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. எனக்கு எப்போதுமே இந்தச் சாலையில் காலாற நடந்து போக பிடிக்கும். இந்தச் சாலையில் இருக்கும் அழகான கிறிஸ்துவ தேவாலயங்களைப் பார்த்தால் எனக்கு இங்கிலாந்து தேசத்துக்கே போனது போல தோன்றும். இங்கே உள்ள ஓக்ஸ் அண்டு கம்பெனி கடையில் அம்மா அப்பாவைத் தவிர எல்லாம் வாங்கலாம். பச்சையப்பன் காலேஜ் இந்த தெருவில்தான் ஆரம்பித்தனர் என்று பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். என்னுடைய பாட்டனார் அடிக்கடி சொல்வார். அவருடைய பாட்டனார் காலத்தில் இந்த இடத்தைப் பெத்த கால்வாய் என அழைப்பார்களாம். இதை ஒரு துரை விலை கொடுத்து வாங்கிப் போட்டு இந்த சாலையையும் பல கட்டடங்களையும் கட்டினாராம். நான் விரும்பும் இந்த மாபெரும் சாலை ஒரு காலத்தில் கால்வாயாக இருந்ததென்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

எனக்குத் தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் நன்றாகத் தெரியும். இங்கிருக்கும் குஜராத்தியர்கள் எல்லாம் எனக்கு நண்பர்கள் – எனக்குக் குஜராத்தியும் தெரியும். என்ன, ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தால் துபாஷியாகிப் போய் இதே தெருவில் ஒரு மாளிகை கட்டிக்கொண்டு சொகுசாக வாழ்ந்திருக்கலாம். இருந்தாலும் எனக்கு எப்போதுமே ஒரு நப்பாசை உண்டு. அதனாலேயே அடிக்கடி இத்தெருவுக்கு வந்து இங்கே தென்படும் துரைமார்களிடம் எனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசி அவர்களை மகிழ்விக்க முயல்வேன். யாராவது என்மீது இரக்கப்பட்டாவது என்னைத் துபாஷி ஆக்க மாட்டார்களா என ஒரு நப்பாசை.

அப்படித்தான், அன்றொரு நாள், ஒரு கோடைக்கால மாலை வேளையில் பிராட்வேயில் அலைந்து கொண்டிருந்தேன். திடீரென்று எதிர்பாராத விதமாக பெரிதாக மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. பிராட்வேயில் இடமா கிடையாது? ஒரு கடைக்கு முன்னாடி மழைக்குப் பயந்துகொண்டு நான் ஒதுங்கி நின்றேன். எனக்கருகில் என்னைப் போல மழைக்குப் பயந்த நான்கைந்து பேர்கள் ஒதுங்கி இருந்தனர். அப்போது நட்ட நடு வீதியில் ஓர் அதிசயத்தைப் பார்த்தேன். ஒரு மனிதர் நடு வீதியில் மழையில் நனைந்து கொண்டு நின்றிருந்தார். அது போதாதென்று தமது தலையை மேலே தூக்கி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. யார் இந்த மனிதர்? மிகவும் வித்தியாசமானவராகத் தோன்றுகிறார். அவருடைய நடவடிக்கையும் உடையும் வித்தியாசமாக இருந்தன. கோட்டு அணிதிருந்தார். ஆனால் வழக்கறிஞராகத் தோன்றவில்லை. தலையில் முண்டாசு கட்டியிருந்தார். சர்தார்ஜியாக இருப்பாரோ? இல்லை; தாடி இல்லை. ஆனால் பெரிய மீசை இருந்தது. யாரென்றே தெரியவில்லை. ஆனால் பரிதாபமாக உள்ளது. பாவம் மழையில் நனைகிறாரே!

அப்போது என்னருகில் இருந்தவர் தமக்குள் பேசிக்கொண்டார் – “ஓ, ஐயரா? எப்போதும் இப்படித்தான்”.

எனக்கு அந்த முண்டாசு கட்டிய மீசைக்காரரிடம் இரக்கம் பிறந்தது. “ஓ, ஐயரே! ஏன் மழையிலே நனையறேள்? இப்படி வாரும்! ” என அழைத்தேன்.

சத்தம் போட்டதுதான் தாமதம். வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த முண்டாசுக்காரர் தம்முடைய தலையைச் சட்டென தாழ்த்தி என்னை முறைத்தார். அவருடைய கண்கள் சிவந்திருந்தன – சினந்திருந்தன. அவருடைய கண்களிலிருந்து தீப்பொறி பறந்து வந்து என்னை எரித்து விடுமோ? யாரிவர்? ருத்ரனா, காலபைரவனா, அக்னி தேவனின் அவதாரமா, அல்லது மகாகாளியின் ஆணுருவா? அந்தப் பார்வையிலேயே எனக்குக் குலை நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. அவர் அந்தப் பார்வையுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அந்த இரக்கம் இல்லாத மனிதன் அத்தோடு விடவில்லை. என்னைப் பார்த்துச் சத்தமிட்டார் – “அடே மூடா! வாயை மூடு!”

என்னை அவர் மூடன் என அழைத்ததில் எனக்கு வருத்தம்தான். ஐயரே எனப் பெயர் சொல்லி விளித்தது தவறுதான். மழையில் நனைவது இயற்கை. நனையாமல் ஒதுங்கி நிற்க நான் சொன்னதும் தவறுதான். இப்படி இரண்டு தவறுகள் செய்த என்னை ஒரு முறை மட்டும் மூடன் என அவர் அழைத்ததில் எனக்கு வருத்தம்தான்.

அப்போது அங்கே இன்னொரு மனிதர் வந்தார். அவர் இந்த முண்டாசு கட்டிய மனிதருக்கருகே மிகவும் பணிவுடன் நின்றார். அவருடைய சீடரோ! அந்த கம்பீர மீசைக்காரன் இவரைப் பார்த்தவுடன் தமது தலையிலிருந்த முண்டாசைக் கழற்றி தம்முடைய சீடரின் தலையைத் துவட்ட ஆரம்பித்தார். பிறகு கணீரென்ற குரலில் பாட ஆரம்பித்தார்.

அவருடைய சரீரம் ஒல்லியாக இருந்தாலும் அதில் கம்பீரம் இருந்தது. அதைப் போல அவருடையா சாரீரம் அவ்வளவு இனிமையாக இல்லையென்றாலும் அதிலும் கம்பீரம் இருந்தது; அவருடைய வார்த்தைகளில் உண்மை இருந்தது. அவருடைய வரிகள் இதயத்திலிருந்து வெளிவந்தன. அவருடைய குரலில் இடியோசை அடங்கியது. நாங்கள் எல்லோரும் பிரமித்துவிட்டோம். எங்கள் அனைவர் கண்களிலும் சாரி சாரியாகக் கண்ணீர். கலைவாணியின் ஆண் அவதாரத்தைப் போன்ற அந்த மானிடரின் பாடல் வரிகள் தேசத்தைப் பற்றி லவலேசமும் நினையாத என்னை தேச பக்தனாக்கியது. என்ன தவம் செய்தேன்? இம்மாமனிதனை நேரில் கண்டதும், அவன் பாட நான் கேட்டதும்…

அந்த அற்புதமான…தெய்வீகமான பாடல்…

பாரத சமுதாயம் வாழ்கவே — வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே — ஜய ஜய ஜய

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை — வாழ்க

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ? — புலனில்
வாழ்க்கை இனியுண்டோ? — நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு — இது
கணக்கின்றித் தரு நாடு — நித்தம் நித்தம்
கணக்கின்றித் தரு நாடு — வாழ்க

இனியொரு விதி செய்வோம் — அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் — வாழ்க

“எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் மரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் — ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் — ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் — வாழ்க

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் — நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் — ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க