மதராஸ் மாந்தர்கள் – 11 – எங்க தலை எங்க தலை டி.ஆரு

சைதாப்பேட்டைக்கு வந்துள்ளீர்களா? அப்போது கண்டிப்பாக உங்களுக்கு காரணீஸ்வரர் கோவிலைத் தெரிந்திருக்கும். அதற்கு அருகில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. வருடத்துக்கு ஒரு முறை சைதாப்பேட்டையில் உள்ள இக்கோவிலுக்கு ஆயிரக்க்கணக்கான மக்கள் கூடுவார்கள். அது சிவராத்திரியன்று நடக்கும் மயானக் கொள்ளை. நீங்கள் இந்த விழாவுக்கு வந்தால் என்னைக் கண்டிப்பாக பார்க்கலாம். காளி, பைரவன், ஹனுமான் என வித விதமாக மக்கள் வேடமிட்டு ஆடுவார்கள். அவர்களில் ஒருவன் தலை நிறைய முடியுடன், முகத்தை மறைக்கும் தாடியுடன் வெறி பிடித்த மாதிரி ஆடிக் கொண்டிருப்பான். அவன்தான் நான். பலர் நான் ஆடுவதைக் கிண்டலடிப்பார்கள்; சிலர் என் காதுபடவே என்னைக் கரடி என்பார்கள். மனதுக்குக் கஷ்டமாகத் தானிருக்கும். ஆனால் இன்று ஒருவர் என்னைப் பார்த்து டி.ராஜேந்தரைப் போல ஆடுவதாகச் சொன்னார். அப்படியே ஆடுவதை நிறுத்திவிட்டு அவரைக் கட்டிக்கொண்டேன். ஆமாம். டி.ஆர். தான் என் தலைவர். “எங்க தலை எங்க தலை டி.ஆரு”.

எனக்கு ஓவியம் வரைய வரும்; கவிதைகள் எழுதுவேன்; வெறித்தனமாக ஆடுவேன்; ரேடியோ, மிக்சி ரிப்பேர் செய்வேன்; எம்.ஜி.ஆர்., சிவாஜி, சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன் எனப் பலரைப் போல பேசிக் காட்டுவேன்; ஆங்கிலத்தில் நல்ல அறிவு. எதையுமே நான் யாரிடமும் கற்றதில்லை. எனக்கு யாருமே குரு கிடையாது. என்னுடைய தாத்தா என்னை அஷ்டாவதானி என்றுதான் அழைப்பார். சினிமா உலகம் ஒருவரை அஷ்டாவதானி எனக் கொண்டாட தொடங்கியது. அவர் பெயர் டி. ராஜேந்தர். குருவே இல்லாத இந்த அஷ்டாவதானி அந்த அஷ்டாவதானியைக் குருவாகக் கொண்டாட ஆரம்பித்துவிட்டேன்.

டி.ஆர். அஷ்டாவதானியாகக் கொண்டாடப்படுவதற்கு முன்பாகவே, இன்னும் சொல்லப் போனால் அவர் யாரென்றே அவ்வளவாக யாரும் கவனிக்காத காலங்களிலேயே மறைமுகமாக என் வாழ்க்கையில் குறுக்கிட ஆரம்பித்தார்.

அரும்பாக்கத்தில் வைணவக் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் சேர்ந்தேன். சைதாப்பேட்டையில் மின்சார ரயிலில் ஏறி நுங்கம்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ் பிடித்து கல்லூரிக்குப் போவேன்.

நான் கல்லூரியில் சேர்ந்த அடுத்த வாரம் அவளைப் பார்த்தேன். மாம்பலத்தில் ரயில் ஏறினாள். ஏனோ அவளைப் பார்த்தவுடன் என் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. அவளுடைய பெயர் கண்டிப்பாக ரதியாகத் தானிருக்கும். பெல் பாட்டம் பேண்டில் வானை நோக்கி குதிக்க ஆரம்பித்தேன் – என் கற்பனையில்.

அவளைப் பின்தொடர வேண்டிய அவசியம் இல்லாமல், அவளும் நுங்கம்பாக்கத்தில் இறங்கினாள். அட! நான் போக வேண்டிய பஸ்ஸிலேயே ஏறினாள். என்ன அதிர்ஷ்டம்! நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்கினாள். இது கனவா நனவா? என் கல்லூரிக்குள் நுழைந்தாள். அது மட்டுமா? என் வகுப்பறைக்கே நுழைந்தாள். என்னைப் படைத்த நாள் முதல் நீ செய்த ஒரே உருப்படியான காரியம் இது தான்டா சாமி!

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அவள் பின்னாடி பைத்தியம் போல அலைந்தேன். கல்லூரி மைதானம், குளத்தங்கரை, கேன்டீன், வகுப்பறை, என்.எஸ்.கே. நகர் பஸ் ஸ்டாப், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், மின்சார ரயிலுக்குள் – எந்த இடத்திலும் அவள் கடைக்கண் பார்வை என் மீது படவில்லை. இத்தனைக்கும் நான் அவளை நேசிக்கிறேன் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால் தப்பித்தவறி கூட என்னைத் திரும்பிப் பார்ப்பதில்லை.

ஒரு கட்டத்தில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது. சமயத்தில் நான் என்னையே கேள்வி கேட்டுக்கொள்வேன். யாரிடமும் கலகலப்பாகப் பேசாத மறந்தும் புன்சிரிப்பைக் கூட உதிர்க்காத அவளிடம் எனக்கு ஏன் ஈர்ப்பு? எனக்குப் பதிலில்லை. மனதில் நிம்மதியுமில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் நான் தாடி வளர்க்க ஆரம்பித்தேன்.

ஒரு நாள் நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் அலங்கார் திரையரங்கில் “ஒரு தலை ராகம்” என்ற படத்தைப் பார்த்தேன். அதன் பிறகு தனியாக அந்தப் படத்தைப் பத்து தடவைகள் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் வாய்விட்டு அழுதேன். என்னால் நம்பவே முடியவில்லை. என் கதையைப் படமாக எடுத்துள்ளனரா, அல்லது அப்படத்தைப் பார்த்து பிரம்மா காப்பி அடித்து என் தலைவிதியை மாற்றிவிட்டாரா?

என்ன சுகம் கண்டாய்
இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

இந்தப் படத்தின் பாடலாசிரியர் யாரோ தெரியவில்லை. இந்தப் பாடல் இப்படத்தின் நாயகனைவிட எனக்குப் பொருந்துகிறது.

இப்போது யோசிக்கும்போது …படிக்கும்போது காதல் என்ன வேண்டியது? அப்படியே காதலித்தால் என்ன? அது மட்டும்தான் உலகமா? நாம் விரும்பும் பெண் நம்மைச் சட்டை செய்யவில்லை என்றால் நமக்கு ஏன் நம்மீது தாழ்வு மனப்பான்மை? இந்த யோசனைகள் எல்லாம் அப்போது வரவில்லை. ஒரு தலை ராகத்தின் பாடல் வரிகள் வேறு என்னைப் பைத்தியமாக்கின.

நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்

வெறும் நாறில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
விண் மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்

முதல் வருடம் முடிந்தது. என் தாடி பெரிதாக வளர்ந்ததுதான் மிச்சம். அவள் என்னைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இந்த ஒரு வருடத்தில் நான் கண்டுபிடித்தது – ஏரியே இல்லாத ஏரிக்கரைத் தெருவில்தான் அவள் வீடு. அவள் தாய் மற்றும் தங்கையுடன் வாழ்கிறாள். தந்தை ஓடிப் போய் விட்டார் எனப் பேச்சு. அதனாலோ என்னவோ யாரிடமும் அவள் பட்டும் படாமலும் பேசுவாள்.

அடுத்த வருடம் ஆரம்பித்தது. இந்நேரத்தில் டி.ராஜேந்தர்தான் ஒரு தலை ராகம் படத்தின் பாடலாசிரியர் – இசையமைப்பாளர் – இயக்குனர் என்பதை அறிந்து கொண்டேன். அவருடைய வெறித்தனமான ரசிகன் ஆனேன். கல்லூரி திறந்த நாட்களில் அவருடைய “ரயில் பயணங்களில்” வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

இரண்டே வாரத்தில் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி. நானாக எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, மேடையேறி பாடினேன்.

உன் மைவிழி குளத்தினுள்
தவழ்வது மீன் இனமோ
கவி கண்டிட மணத்தினில்
கமழ்வது தமிழ் மனமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து
பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில்
பாட ஏதேதோ குயில்கள்
மலையில் நெளியும் மேக குழல்கள்
தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோத பாதம் நோக
நெஞ்சம் தாங்கிடுமோ

சுருள் வாழையின் மென்மையை
மேனியில் கொண்டவளே
இருள் காடென்னும் கூந்தலை
இடை வரை கண்டவளே
நூல் தாங்கும் இடையால்
கால் பார்த்து நடக்க நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தை போலே தேகத்தை
ஆக்கி குழல் கத்தை ஜாலம்
பாவை சூடும் ஆடை கூட
பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று
இதழ்கள் ஊருமடி இதழ்கள் ஊருமடி

நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அவளை நினைத்துத்தான் பாடினேன். ஏதோ என்னையே நான் சமாதானப்படுத்திக்கொள்ள. ஆனால் நான் எதிர் பார்க்கவில்லை – கூட்டத்தில் அவளை. அவளும் எதிர்பார்க்கவில்லை – இவ்வளவு கூட்டத்தில் நான் அவளைக் கவனிப்பேன் என்று. முதல் முறையாக அவள் உதட்டில் சிரிப்பை – மெலிதான சிரிப்பைக் கண்டேன். சில நொடிகள்தான். என் கனவா இல்லை உண்மையில் சிரித்தாளா? பட்டுப் போன இந்தச் செடியில் மீண்டும் துளிர் விட்டது – ரோஜா மலருமா? இன்னும் எத்தனை நாட்களிலோ?

ஆனால் அதிர்ஷ்டம் எனக்குக் கைகூடவில்லை. அன்றைக்கு அவள் என் பாட்டைக் கேட்க வராமல் இருந்திருந்தால் ஒருவேளை நான் அவளை மறந்துவிட்டிருக்கலாம். ஆனால் முழு நிலவு போன்ற அவள் முகத்தைக் காட்டி நம்பிக்கை விதையைத் தூவிச் சென்றாள். என்னால் அவளை மறக்க முடியவில்லை. அவளோ மீண்டும் பாராமுகத்தில் என்னை வாட்டுகிறாள். எத்தனையோ முறை பேச முயன்றேன் – என் ஆசையைக் கூற முயன்றேன் – தூது விட்டேன். அவள் எதற்கும் அசையவில்லை.

என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நடக்கும் விஷயங்களுக்கேற்ப என் தலைவன் பாட்டு எழுதுகிறான். “ராகம் தேடும் பல்லவி”யின் பாடலை முனகிக் கொண்டு அலைய ஆரம்பித்தேன்.

மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை.. தூதுவிட்டேன்

அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை

இரு விழி கவிதை
தினசரிப் படித்தேன்
பொருளதை அறிய வழியேதும் இல்லை

முடிந்தது. என் கல்லூரிக் காலம் முடிந்தது.

ஒரு சலிப்பான நாடகத்தைப் போல எனது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. கல்லூரி நாட்கள் முடிந்துவிட்டன, அவற்றுடன் சேர்ந்து அவளை தினசரி பார்க்கும் தருணங்களும் முடிந்துவிட்டன. மீண்டும் அவளைப் பார்க்கும் ஏக்கத்தில் அவள் வாழும் தெருவுக்கு அடிக்கடி செல்வேன். ஒரு கட்டத்துக்கு மேல் அது சரியாகப் படவில்லை. அதனால் அவளை நான் முன்பு பார்த்த இடங்களுக்கெல்லாம் – நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், என்.எஸ்.கே. நகர் பஸ் நிறுத்தம், கல்லூரியின் கேன்டீன் என – அலைந்து அவளைக் கற்பனையில் காண ஆரம்பித்தேன். இருக்கவே இருக்கின்றன என் தலைவனின் பாடல்கள்.

மணமோ மரணமோ – சீக்கிரம் இந்த கதை முடியட்டும். சுவாரசியமின்றி தொடர்கதையாக இது நீள்வதில் உனக்கென்ன லாபம்?

காதல் மனைவிக்காக தாஜ் மஹால் கட்டியதைப் படித்துள்ளேன். ஆனால் தம்முடைய காதல் மனைவிக்காக அவர் பெயரில் படத்தை எடுத்த என் தலைவனை நான் வாழும் காலத்திலேயே பார்த்துப் பரவசப்பட்டேன். “உயிருள்ள வரை உஷா” – வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. என் தலைவன் கதாநாயகனாக வேறு நடித்திருந்தார் – செயின் ஜெயபால் என்ற கதாபாத்திரத்தில். கேட்கவா வேண்டும்? நான் இப்படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்பதை எண்ணவே முடியாது.

வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

என் தலைவன் எழுதிய பாடல். என் புண்பட்ட மனதுக்கு ஒத்தடம் கொடுக்கவே இதை எழுதியிருப்பான்.

நானும் ஒரு பைக் வாங்கி சுற்ற ஆரம்பித்தேன். யாராவது என் பெயரைக் கேட்டால் – செயின் ஜெயபால் என்று சொல்ல ஆரம்பித்தேன். என் காதல்தான் நிறைவேறவில்லை. மற்றவர்களுக்கு அந்த நிலை வரக்கூடாது. சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி – இந்த இடங்களில் யாராவது காதலித்து ஜாதிப் பிரச்சினையோ, அல்லது ரௌடிகள் பிரச்சினையோ – எதிலாவது மாட்டிக் கொண்டால் – நான் வழிய சென்று அவர்களுக்கு உதவ ஆரம்பித்தேன். இதனால் எனக்கு நிறைய எதிரிகள்; பலதரப்பட்ட பிரச்சினைகள். அதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். என் தலைவன் வகுத்துத் தந்த பாதை.

காதலையும் கல்லூரியையும் வைத்து கலக்கியெடுத்துக்கொண்டிருந்த டி.ராஜேந்தர், கூடவே தங்கைப் பாசத்தையும் கலந்துகட்டி இசைத்ததுதான் ‘தங்கைக்கோர் கீதம்’.

சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரியைத் தாண்டி மாம்பலம் வரை என் சமூகச் சேவையைப் பரப்ப வேண்டியிருக்கும் என்றோ அது எனது காதலைப் புத்துயிர் கொள்ள செய்யும் என்றோ நான் நினைக்கவில்லை. கல்லூரி நண்பன் ஒருவன் மூலம் தெரிந்து கொண்டேன். என்னவளின் தங்கைக்கு ஒரு பிரச்சினை என்று. ஊருக்கெல்லாம் உதவுகிற நான் அவளுக்காக உதவ மாட்டேனா? அவளுடைய தங்கை என் தங்கைபோல. எனக்கென்று ஒரு நண்பர் கூட்டம் உண்டு. அவர்களுடன் மாம்பலம் சென்று யார் அவள் காதலுக்கு குறுக்கில் நின்றிருந்தார்களோ அவர்களைச் சுலபமாக அப்புறப்படுத்தினேன்.

கடைசியாக என்னவள் பார்வை என்மீது பட்டது. உனக்குப் பேச வருமா? உன்னால் சிரிக்கவும் முடியுமா, பெண்ணே?மேற்கில் சூரியன் உதித்தான். இந்தக் குழந்தையின் தாலாட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

என்னை அவள் தங்கை திருமணத்துக்கு அழைத்தது மட்டுமின்றி என்னையே அக்கல்யாணத்தை முன்னின்று நடத்த செய்தாள்.

மகராசாவைப் போல் நல்ல
மாப்பிள்ளையாம் – அவன்
மனத்தேரிலே நீயும் கொடிமுல்லையாம்

காதல் – நான் ஏங்கித் தவித்த காதல் எனக்குக் கைகூடியது. காதலியுடன் கை கோத்து மதராஸ் எங்கும் அலைந்தேன். எல்லையற்ற மகிழ்ச்சியில் இருவரும் திளைத்தோம்.

அவள் விழிகளில்
ஒரு பழரசம்
அதை காண்பதில்
எந்தன் பரவசம்

ஜதி என்னும் மழையினிலே
ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான்
துளிர் விட்டு
பூபோல பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும்
மணம் வீசுது

தடாகத்தில் மீன் இன்று
காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைகண்ட வேகத்தில்
பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான்
உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும்
நந்த வனத்துகிளி
கால்கள் முளைத்ததென்று
நடைபோட்டாள்

வாழ்க்கையில் சோதனை வரலாம். சோதனையே வாழ்க்கையாக உருவெடுத்தால்? என்னவள் இடத்தில் யார் இருந்தாலும் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஓடிப் போன தந்தை; சாப்பிடக் கூட காசில்லாத கந்தல் வாழ்க்கை; சோகமே உருவான நோயாளித் தாய்; இத்தனையையும் தாண்டி அவளுடைய அண்ணன். வித்தியாசமாக சிந்திப்பவன். இந்த உலகின் பார்வையில் மன நோயாளி. முப்பது வயதில் அறுபது வயதினன் போல சிந்திப்பவன்; ஆறு வயது குழந்தை போல அந்தச் சிந்தனையை வெளிப்படுத்துவான். மற்ற பிரச்சினைகளைச் சமாளிக்கலாம். ஆனால் இந்த அண்ணன் தோற்றத்தில் இருக்கும் இந்தக் குழந்தையை எப்படிக் கைவிடுவாள்? அதனால்தான் என்மீது இருந்த காதலையும் இத்தனை வருடங்கள் மறைத்திருந்தாள். இதை முன்பே என்னிடம் சொல்லியிருந்தால் எப்போதோ கல்யாணம் செய்துகொண்டு இந்நேரம் சிலம்பரசனைப் போல ஒரு பையனைப் பெற்றிருக்கலாமே! சரி! இப்போதாவது தெரிந்ததே! இனிமேல் அவளுடைய தாயும் தமையனும் என்னுடைய அரவணைப்பில்!

ஆயிற்று – கல்யாணமாகிப் பல வருடங்கள். கல்யாணமாகி நாங்கள் இருவரும் முதலில் சென்று தரிசித்தது – என் தலைவனின் “ஒரு தாயின் சபதம்” படத்தை. இதுவரை நாங்கள் இருவரும் தலைவனின் ஒரு படத்தை விட்டதில்லை.

தலைவன் காட்டிய வழியில் சுகமாக வாழ்கிறேன். முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுகிறேன். முறைப்பவர்களை உதைக்கிறேன். தாடியோடு அலைகிறேன். சிவராத்திரிகளில் கோவில் திருவிழாக்களில் ஆடுகிறேன்.